ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

கண்டதும் கேட்டதும் 

என்.எஸ்.கே., எம்.ஆர். ராதா போன்றோர், ""என்ன பேப் இருக்காரா?'' என்றே அழைப்பர். (PAP - பேப்); பிறருக்குக் கொடுத்து உதவுவதில் இவரை, "கர்ணன்'

News image
Updated On :10 அக்டோபர் 2017, 9:04 am

பி.லெனின்


என்.எஸ்.கே., எம்.ஆர். ராதா போன்றோர், ""என்ன பேப் இருக்காரா?'' என்றே அழைப்பர். (PAP - பேப்); பிறருக்குக் கொடுத்து உதவுவதில் இவரை, "கர்ணன்' என்றே சொல்லலாம்.  அவரிடம் உதவி பெறாத திரைப்படக் கலைஞர்களோ, தொழில்நுட்பக் கலைஞர்களோ இல்லை எனலாம். அது மட்டுமல்லாமல்,  சக கலைஞர்கள் துயர் கேட்டு அவர்களது குடும்பத்தினரை அழைத்து பணம் தந்து உதவுவார்.

இவரது திரைப்பட விநியோகஸ்தர் பணியில் 70-க்கும் மேற்பட்டோர் தமிழகம் முழுவதும் பணியாற்றினர். இவர்களில் குறிப்பிடத்தக்கவர் ஆரம்பகாலத்தில், "லுங்கி' கம்பெனியில் பணியாற்றிய மணி.  அவர்தான் விநியோக மேலாளராக இதுநாள் வரை பணியாற்றியவர். அக்காலத்தில் வெளியான "அண்ணி',  "கோமதியின் காதலன்', "பராசக்தி', "நிரபராதி' போன்ற படங்கள் ரீமேக் செய்யப்பட்டபோது தெலுங்குப் படங்களுக்கு பின்னணிக் குரல் கொடுத்தவர். மற்றும் அவரது வளர்ப்பு மகன்  ரங்கநாதன்,  என் சகோதரர் இருதயநாத்,  ஜெயகாந்தனுடன் 50 ஆண்டுகளாக நட்பு கொண்ட பாலசுப்பிரமணியன் என பெரும் பட்டியல் நீளும்.

 "பராசக்தி'க்குப் பின் பெரும் விநியோகஸ்தராக மாறிய பி.ஏ.பி. மாடர்ன் தியேட்டர்ஸ், புத்தா பிக்சர்ஸ் எனப் பல தயாரிப்பு நிறுவனங்களின் திரைப்பட விநியோகஸ்தராகவும் வலம் வந்தார். திரைப்படத் தயாரிப்பாளர்களும் கூட சினிமா தொடக்க பூஜை முதல் கதை டிஸ்கஷன் வரை  பல பணிகளில் இவரோடு கலந்து ஆலோசிப்பர்.

 தொடர்ந்து இவரது  "நேஷனல் பிக்சர்ஸ்'  மூலம் "ரத்தக் கண்ணீர்' தயாரானது. "ரத்தக் கண்ணீர்' எம்.ஆர். ராதாவால் தமிழகத்தின் பட்டி தொட்டி எங்கும் நாடகமாக அரங்கேற்றப்பட்டது. அதன் பின்னரே சினிமாவாகவும் உருவெடுத்தது. பெரும் வெற்றி பெற்றதுடன் பின்னாளில் எம்.ஆர்.ராதா அவரிடம் தேவைக்குப் பணம் கேட்க வரும்போது, ""என்னடா எவ்வளவு வாங்குவே''  என்பார். அதற்கு எம்.ஆர்.ராதா ""என் படம்தான் பண மழையாய் கொட்டுதே, கொடுத்தா என்ன, கொறைஞ்சா போயிடும்?'' என்றார். ஆம்.  அது உண்மைதான். இன்றளவும் "பராசக்தி', "ரத்தக் கண்ணீர்' மூலம் பணமழை கொட்டத்தான் செய்கிறது.

சிவாஜிகணேசன் அடிக்கடி சொல்லும் வார்த்தை, ""என் நினைவை விட்டு நீங்காத மூவர். பி.ஏ.பெருமாள், பீம்சிங், கிருஷ்ணன் பஞ்சு. இவர்கள் இல்லையென்றால் தமிழ்நாட்டில் சிவாஜி என்ற நடிகனைக் காண முடியாது'' என்பார். சிவாஜி கணேசன் ஒவ்வொரு பொங்கல் அன்றும் காலையில் பி.ஏ.பி.யிடம் ஆசிர்வாதம் பெற்ற பின்னரே, பொங்கலைக் கொண்டாடுவார். பி.ஏ.பியும் அவருக்கு கதர் வேட்டி,  கதர் புடவை,  துண்டு தந்து ஆசிர்வதிப்பார். அது அவரது இறுதி நாள் வரை தொடர்ந்தது.

பழுத்த நாத்திகவாதியான பி.ஏ.பி., பிறரின் கடவுள் பக்தியினை விமர்சித்தாலும் அவரது ஊழியர் திருப்பதி செல்ல அவரிடம் அனுமதி கேட்கும்போது,  ""ஏன்ய்யா வெங்கடாசலபதியின் படத்தை வைத்து வீட்டிலே கும்பிட்டு மொட்டை அடிக்க வேண்டியதுதானே! ஏன்டா அவ்வளவு தொலைவுக்குப் போறீங்க''
என்பதோடு மடியில் இருந்து வழிச்செலவுக்குப் பணத்தை அள்ளித் தருவார்.
 தொடர்ந்து எம்.ஆர்.ராதாவைக் கொண்டு "லட்சுமிகாந்தன்' என்ற திரைப்படம் எடுத்தார் பி.ஏ.பி. 10 ஆயிரம்  அடிகள் வளர்ந்தும் ஏனோ திரைப்படம் வெளியாகவில்லை. எம்.ஆர்.ராதாவின் நட்பைப் பாராட்டும் வகையில் பெரியார் திடலில்  எம்.ஆர்.ராதா மன்றத்தில் (இவரது நட்பு வலிமையைப் பாராட்டும் வகையில்) கல்வெட்டில் பி.ஏ.பியின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனது தந்தையும் இயக்குநருமான பீம்சிங்கைத்  திரைப்பட இயக்குநராக உருவாக்கியவர் பி.ஏ.பி.யே.  எடிட்டராக திரை உலகில் காலடி எடுத்து வைத்த அவரை, "அம்மையப்பன்' மூலம் இயக்குநராக்கி அழகு பார்த்தவர் பி.ஏ.பி.   மேலும் அவர் இயக்கிய, "ப' வரிசைப் படங்கள் பதினேழின் விநியோகஸ்தராக இருந்து வெற்றிப்படங்களாக மக்களிடம் கொண்டு சென்றதோடு எங்கள் குடும்பத்தினர் அனைவரையும் ஒவ்வொரு துறையிலும் பரிணமிக்கச் செய்த பெருமையும்  பி.ஏ.பி.யையே சேரும்.

தயாரிப்பு உலகில் "ரத்தக் கண்ணீரு'க்குப் பிறகு அவர் தயாரித்த படம், "பெற்ற மனம்'. இது தமிழகத்தின் இலக்கிய முன்னோடி மு.வரதராசனாரின் நாவல். "பெற்ற மனம்'  திரைப்படம் ஆனது.

தமிழ் திரை உலகில் எழுத்தாளர்களின் படைப்புகள் படமாகியது விரல் விட்டு எண்ணக்கூடியதாகவே இருந்தன. அதில் குறிப்பிடத்தக்கவர் பி.எஸ். ராமையா, புதுமைப்பித்தன், விந்தன், சுத்தானந்த பாரதி போன்றோரே. ஆயினும் அவர்கள் யாரும் திரை உலகில் பிரகாசிக்க முடியவில்லை.

அதற்குப் பின் பாரதிதாசன் தனது "பாண்டியன் பரிசு' காவியத்தை திரைப்படம் ஆக்கும் முயற்சியில் தோல்வியைத் தழுவினார். அது திரைப்படம் ஆகும் முயற்சியில் ஈடுபட்டபோது பி.ஏ.பி. அவருக்கு உதவினாலும்,  இப் பட முயற்சி குறித்து எச்சரித்தார்.

புதுமைப்பித்தனும், பின்னாளில் வசனத்தின் மூலம் புகழ்பெற்ற இளங்கோவனும் "தினமணி'  பத்திரிகையில் ஒன்றாகப் பணியாற்றியவர்கள்தான். ஆனால் படைப்புலகில் புதுமைப்பித்தன் பெற்ற புகழ் இளங்கோவன் இலக்கியதரத்தில் படைப்புலகில் பெயர் பெறவில்லை. ஆயினும் திரை உலகில் நுழைந்து திரைக்கதை வசனத்தால் மக்களை ஈர்த்து வசனம் என்றால் இளங்கோவன்தான் என்ற பாராட்டுதலைப் பெற்றார்.

ஓர்  எழுத்தாளனின் படைப்பைத் துணிச்சலாக எடுக்க முன்வந்தார் டைரக்டர் பீம்சிங். அதற்கு உறுதுணையாக நின்றவர் பி.ஏ.பி. நேஷனல் பிக்சர்ஸ் சார்பில் "பெற்ற மனம்' தயாரானது. அப்போது சிவாஜி உச்சஸ்தாயில் இருந்தார். மற்றும் பத்மினி, சந்திரபாபு நடித்தனர். முதன்முதலில் சந்திரபாபுவுக்காக பாடல் எழுதினார் பாரதிதாசன். டைரக்டர் பீம்சிங் பாரதிதாசனிடம் பாடல் எழுதக் கேட்டுக்கொண்டபொழுது, "சினிமாவுக்குத் தானே எழுதினால் போயிற்று'' என்று ஒன்றரை மணி நேரத்தில் இரண்டு நீண்ட பாடல்களை எழுதித் தந்தார்.

Story image

அப்பாடல் இதோ:
பாடி பாடி பாடி - வானம் வானம்பாடி
பழமா வுதடா இது.
ஆடி ஆடி ஆடி - அருகினில் வாராய்
அழகாகிய சேரனே
பூனை போல மியாவ் மியாவ் மியாவ்
ஆனை போல பாவ் பாவ் பாவ்
இரண்டு பேரும் உருண்டு புரண்டு
மகிழ்ந்திட வாராய்

ஆலம் பழம் மேலே
வேல முள்ளு கீழே
அண்ணாந்து பார் அடடடடா
காலில் முள்ளு - அய்யய்யோ லாலலலா
குந்திப் போட்டு சப்பளம்
குழம்பு மட்டும் தப்ளம்
இந்தே பெரிசு அப்பளம்
இருக்கும் அதிலே கொப்பளம்
இரண்டு முழம் குறுக்கு
மெல்ல இனிப்பு போளி
 பலே கறுக்கு
பிரம்பு பெருத்த முறுக்கு
போட்டு பல்லால் நறுக்கு
அடடடா லட்டு
கிடுகிடுன்னு புட்டு
மொடா நெய்யே விட்டு
விமுங்கலா எம்முட்டு
வராதப்பா வாந்தி - நம்ம
வடக்கத்தியான் பூந்தி
ஒரே கையால் ஏந்தி
உள்ளே போட்டா சாந்தி

சீரக சம்பா அரிசி
திருமால் வடை பெரிசு
காரிய மெல்லா துரிசே
காட்டணும் கை வரிசே
புதுதினுசாலே காராசேவு
போதாவிட்டால் என்ன கூவு
வெது வெதுப்பா உப்பு மாவு
விழுங்கும்போது சக்கர தூவு

சென்னப் பட்டணம் ஓமப்பொடி
தின்னா தெரியும் ரெண்டு படி
கன்னாபின்னா குளறுபடி
காட்டாதப்பா பிடி ஒரு பிடி
இஞ்சியிலே உண்டு நல்ல தொக்குதான்
நல்ல எலுமிச்சை பழம் ஊற
வைச்ச சுக்குதான்.
பஞ்சாமிர்த பாயாசமோ
தேன் தேன் தேன்
அங்கே பரிமாற இருப்பவனும்
நான்  நான்  நான் 

இப்படத்தில் சிவாஜிக்கு முதியவர் வேடம். இதனை மக்கள் ஏற்றுக் கொள்வார்களா என அச்சுறுத்தல் ஒருபுறம். வழக்கம்போல் பிரபல படைப்பாளர்களை தமிழுலகம் அங்கீகரிக்காத  பணம் பண்ணும் விநியோகஸ்தர்களும் அரசியல் சூழ்ச்சியும் திரைப்படமாக நாள், மாதம் கடந்தன.

அருமையான திரைக்கதையும் பாடல்களும் மக்களால் பட்டிதொட்டி எங்கும் பேசப்பட்டாலும் நாள், மாதங்கள் கடந்து வெளியானதால் இப்படம் தோல்வியைத் தழுவியது. இது குறித்து பி.ஏ.பி.குறிப்பிடும்போது, "" எனக்கு நல்ல கதையைச் சினிமாவாக்கினேன் என்ற திருப்தி போதும்'' என்றாராம். 
இத்தோடு இவரது திரைப்படத் தயாரிப்புப் பணிக்கு முற்றுப்புள்ளி விழுந்தது.  ஆயினும் தொடர்ந்து பீம்சிங், பி.ஆர்.பந்துலு, மாடர்ன் தியேட்டர்ஸ், டப்பிங்  படங்கள் எனத் தொடங்கி பாலசந்தர், பாரதிராஜா இயக்கிய படங்களுக்கும், ரஜினி, கமல், விஜயகாந்த்  நடித்த படங்கள் வரை தனது இறுதிநாள் வரை விநியோகஸ்தராகத் தன்னை நிலைநிறுத்திக் கொண்டார் பி.ஏ.பி.
நீண்ட இடைவெளிக்குப் பின் டைரக்டர் பீம்சிங்க களமிறங்கிய ஜெயகாந்தனின் "சில நேரங்கில் சில மனிதர்கள்' நாவலைப்  படமாக்க முயன்றபோது அதற்கு உற்சாகம் ஊட்டி தன்னை இணைத்தயாரிப்பாளராகவும் விநியோகஸ்தராகவும் இணைத்துக் கொண்டவர் பி.ஏ.பி.

" சில நேரங்களில் சில மனிதர்கள்' நாவல்,  "அக்னி பிரவேசம்' என்ற சிறுகதையின் தொடர்ச்சியாய் "தினமணி கதிரில்' தொடராய் வந்து வாசகர்களின் வரவேற்பைப் பெற்றது. இதனைத் திரைப்படமாக்கும் எண்ணத்தோடு டைரக்டர் பீம்சிங், எனது சகோதரர் இருதயநாத், எம்பார் வேதம், திருமலை மகாலிங்கம் ஆகியோரை திரைப்படத்துக்கான உரிமையைக் கேட்க அனுப்பினார். ஜெயகாந்தன், "" அதெல்லாம் சரிப்பட்டு வராது. உங்கள் தந்தையார் நஷ்டமடைய விரும்பவில்லை'' என்று மறுத்திருக்கிறார். ஆயினும் மூன்று மாதங்கள் நடையாய் நடந்து ஒரு மாதிரி ஜெயகாந்தனை ஒப்புக்கொள்ள வைத்தனர்.
(தொடரும்)

படங்கள் உதவி: ஞானம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.