ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

கண்டதும் கேட்டதும் 

மும்பையில் சென்னையிலிருந்து வந்து என்னுடன் பணிபுரிந்த மற்ற தொழில்நுட்பக் கலைஞர்கள் குடிப்பழக்கத்திற்கு அடிமையானார்கள்.

News image
Updated On :31 அக்டோபர் 2017, 8:03 am

பி.லெனின்

மும்பையில் சென்னையிலிருந்து வந்து என்னுடன் பணிபுரிந்த மற்ற தொழில்நுட்பக் கலைஞர்கள் குடிப்பழக்கத்திற்கு அடிமையானார்கள். ஆதலால் அவர்களுக்குக் கிடைக்கும் பணத்தை எல்லாம் குடியிலேயே செலவழித்துவிட்டு மும்பையில் இருந்து சென்னைக்கு வரும்போது அவர்கள் வீட்டிற்கு ஏதேனும் வாங்கிச் செல்ல வேண்டும் என்று என்னிடம் கையேந்துவார்கள் என்று தெரிந்திருந்ததால் நான் எனக்குக் கிடைத்த பணத்தைக் கொடுத்து விடுவேன். "பாசமலர்'  படத்தில் கண்ணதாசன் எழுதிய பாடல்:
  "எங்களுக்கும் காலம் வரும்
     காலம் வந்தால் வாழ்வு வரும்
 வாழ்வு வந்தால் அனைவரையும்
  வாழ வைப்போமே'  

என்ற வரிகள் என் குணத்துடன் ஒட்டிக் கொண்டது. 

 அங்கு தான் ஒலியின் அதிசயங்களைக் கேட்டேன். அது இந்த உலகத்தை எவ்வாறெல்லாம் ஆட்டிப் படைக்கும் மிகப்பெரிய  கதை கூறும் கருவியாகச் செயல்படுகிறது என்று தெரிந்து வியந்தேன். மிக அதிக  சத்தமும்,  மிக நுண்ணிய  அமைதியும் எப்படி மனிதனின் மூளையில் பதிந்து அவனை அலைக்கழிக்கிறது என்ற பாடத்தை நான் மங்கேஷ் தேசாய்  என்ற மிகச் சிறந்த பல்கலைக்கழகமான ராஜ்கமல் ஸ்டூடியோவில் தெரிந்து கொண்டேன். எனக்கு வசனத்தை விட பாடலில் மிகவும் பிரியம் இருந்தது. பாடலைப் பாடும்போது அதன் பாவங்கள்,  ராகங்கள், ஏற்ற இறக்க நுணுக்கங்கள் எல்லாம் என் குழந்தைப்பருவத்திலேயே நான் கேட்டுச் சுவைத்திருந்ததால் இங்கு  "சவுண்ட்' இன்  அண்மை மிகவும்  என்னை ஒண்ட வைத்து மகிழ்ந்தது.
ஒலி அலைகள் ஏதும் இல்லாமல் இருக்கும் Filim-ஐ S.S.T என்று கூற வேண்டும். (Silent Sound TracK) ஆனால் ரீ ரிகார்டிங் என்பது நம்முடைய வசனம் பேசும் டிராக். கார் சத்தம், மழை சத்தம், இடி சத்தம், பறவைகளின் ஒலி மற்றும்  B.G.M என்னும்  (Back Ground Music) பின்னணி இசை இதெல்லாம் சேர்ந்து மறுபதிவு செய்து எல்லா ஒலி அலைகளையும் மிக்சிங் செய்வதுதான் ரீ ரிகார்டிங். இதன் அனைத்துப் பரிமாணங்களையும் நான் கண்டு வியந்து கற்றுத் தேர்ந்தேன். ஆனால் ஒலிப்பதிவாளராக ஆகவில்லை.

Story image

"சில நேரங்களில் சில மனிதர்கள்' படம் தியேட்டரில் வெளியிடுவதற்கான பிரிண்ட் லேப்-இல்   தயார் நிலையில் இருந்தது. மிட்லண்ட்,  ஈகா,  
ஸ்ரீகிருஷ்ணா தியேட்டரில் ரிலீஷ் செய்ய வேண்டுமென்றால் ரூ.25,000/-  முன்பணமாகக் கொடுக்க வேண்டும்.  பீம்சிங்கின் சொந்தப் படம் என்பதனால் அவர் கையில் அப்போது அந்தப் பணம் இல்லை.  ஃபைனான்சியர் என்று நாங்கள் நினைத்துக் கொண்டிருந்த இடைத்தரகர் மதன் அவர் 
ஃபைனான்ஸ் செய்த பணத்தை வட்டியுடன் கொடுத்தால்தான் படத்தை ரிலீஸ் செய்ய அனுமதிப்பேன் என்று லேபில்  (Lab) கடிதம் கொடுத்துவிட்டார். அப்போதெல்லாம் லேபுக்கு  Financiar பணம் கிடைத்துவிட்டது என்று கடிதம் கொடுத்தால்தான் படத்தின் பிரிண்டை தியேட்டர்களில் திரையிடக் கொடுப்பார்கள்.

 அந்த ஃபைனான்சியர்  PAP-க்குத் தெரிந்தவர் ஆதலால் டைரக்டர் பீம்சிங்  PAP-யிடம் சென்று இவ்விஷயத்தைக் கூறினார்.

PAP  மதனை அழைத்து,  ""ஏன் நீயே படத்தை ரிலீஷ் பண்ணிட்டு உன் பணத்தை எடுத்துக்கொண்டு மீதியை அவர்களுக்குக் கொடுக்கலாம்ல்ல'' என்று கூற  மதன்  ""அந்த படம்  ஓடுறது சந்தேகம்''  என்று அரைகுறைத் தமிழில் கூறினார்.  ""ஏன்டா உன் குழந்தை மேலேயே உனக்கு நம்பிக்கையில்லையாடா?''  என்று கூறி,  ""நானே ரிலீஸ் செய்யறன்டா, உன் பணத்துக்கு நான் ஜவாப்தாரி''  என்று  படத்தை பார்க்காமலேயே  கூறினார்.

ஏனென்றால் பீம்சிங்கையும், ஜெயகாந்தனையும் அவர் நம்பினார். படத்தைப் பார்த்தார். நன்றாக இருக்கிறது என்றார்.  பின்னர் என்னைப் பார்த்து,  ""பீம் சொன்னாரு, அந்த முதல் ரெண்டு ரீல்ல என்னவெல்லாமோ சவுண்ட், கிவுண்ட் எல்லா பண்ணினியாமே என்னடா அது'' என்று கேட்டார். ""ஆனாலும் முதல் ரெண்டு ரீல்ல மழை, இடி, கார் சவுண்ட் என்னமெல்லாமோ போட்டு ஏமாத்தியிருக்கிங்கடா'' என்று மெல்லிய புன்னகையுடன் கூறினார்.

சிறு வயதில் பதிவான சில எண்ணங்களும், ஒலிகளும் சில நேரங்களில் சில மனிதர்கள் படத்தின் ஆரம்பக் காட்சியாகப் பதிவு செய்தேன் என்று சொல்லி அவருக்கு கீழ்க்கண்டவாறு விளக்கத்தைக் கொடுத்தேன்.

ஆரம்பக் காட்சியான 2000 அடி 19 நிமிடங்கள் வரும். அதற்காக 18 டிராக் செய்து வைத்தது.
அவை:
1. கார் மட்டும் வரும் சத்தம்
2. காரின் கதவு திறக்கும் சத்தம்
3. கார் திரும்பும்போது டயர் "கிரீச்' என்று எழுப்பும் சத்தம்
4.   கார் வைப்பர் ஆடும் சத்தம்
5.  கார் நிற்கும் சத்தம்
6.  இடியோசை
7.  இடியின் உறுமல் (தன்ம்க்ஷப்ண்ய்ஞ்)
8. மழை மட்டும் பெய்வது
9. மழைத் துளிகள் மட்டும் விழும்  சத்தம்
10. ஜனங்கள் நடந்து போகும் சத்தம்
11.  சைக்கிள்  போகும் சத்தம்
12. சைக்கிள் பெல் அடிக்கும் சத்தம்
13. பல கார்கள் செல்லும் சத்தம்
14. கார் புறப்படும் சத்தம்
15.  கங்காவுடைய டயலாக், "இப்படி போகக் கூடாது... அப்படிப் 
போகணும்'
16.  கார் மழை நீரை வாரி இறைத்தபடி நிற்கும் சத்தம்.
17.    மழை நீரில்  "சொலாக்'  என்று கால் வைக்கும் சத்தம்
18. கால்  சேற்றில் பதியவும்  கெட்டி மேளம் கொட்டும் சத்தம்.

மேற்கண்ட  ஒலி அலைகளை நான் ஜெமினி ஸ்டூடியோவில் சவுண்ட் இன்ஜினியராக இருந்த கோட்டீஸ்வர ராவிடம் எடுத்துச் சென்றதைக் கூறி அங்கு நடந்த உரையாடலை விவரித்தேன்.

""ஒரே இ ஏம்ரா இதி இந்தா டிராகிங் தீசினு ஓச்சி இச்சாவு, தீனி மிக்ஸிங் சேச்சே தானிக்கி சவுண்ட் டப்பர் (Dubber)'' என்று என்னிடமும் டைரக்டர்  பீம்சிங்கிடமும் தெலுங்கிலேயே சொன்னார்.

அதன் தமிழாக்கம்:

""டேய் இன்னாடா இது... இவ்வளவு டிராக்ஸ் (ஒலி அலைகள்)  எடுத்துக் கொண்டு வந்து கொடுத்திருக்க, இதெல்லாம் ஒண்ணு சேர்க்க ஒலி கருவி (டப்பர்) இல்லையடா''

அதற்கு  டைரக்டர் பீம்சிங், ""அவர் (என்னைக் காண்பித்து) என்ன நினைச்சிட்டு  இருக்காரோ... அதே மாதிரி செய்து கொடுத்துவிடுங்கள்'' என்று கூறினார்.

மேலும் நான் மங்கேஷ் தேசாயிடம் பயிற்சி பெற்று வந்ததை அறிந்து கோட்டீஸ்வரராவ்  அதற்கு சம்மதித்து அனைத்து Trackகளையும் ஒன்றிணைத்தார். அதற்கு நான்கு  நாள்கள் ஆனது. 

முடிவாக என்னைப் பார்த்து,  ""நேனு நேர்ச்சுகுண்ணானு''  (நான் கத்துக்கிட்டேன்)  என்று கூறியது எனது குரு,  ஒலிப்பதிவாளர் மங்கேஷ் தேசாய் என்ற கலைஞனையே  சேரும்.

படம் ரிலீஸ் ஆன பின் ஒரு வாரம் கழித்து  பி.ஏ.பி.  என்னைப் பார்த்து,  ""லெனின் நீ  அந்த  ரெண்டு ரீல்ல ஏமாத்தலடா,  படத்தின் வெற்றிக்கான முதல் படியா அந்த 2,000 அடிகள்தான் இருந்தது. அத தியேட்டர்ல ஜனங்க அமைதியா பார்த்து  அங்கீகரிச்சாங்க.  இந்த  படம் தமிழ்ப் படங்களை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்லும் திறவுகோலாக இருக்கும்'' என்றார். அவர்  சொன்னது போலவே மிட்லண்டில் "சில நேரங்களில் சில மனிதர்கள்' படத்திற்குப் பிறகு "பதினாறு வயதினிலே' படத்தையும், வேறு சில படங்களுக்கும் அவரே வெளியீட்டாளராக இருந்தார்.

ஒவ்வொரு  காலகட்டத்திலும் ஒலிப்பதிவாளர்கள் எனக்கு ஆதர்ச நாயகர்களாக இருந்துள்ளனர். கோல்டன் ஸ்டூடியோவில்  ஜீவா, வாசு   ஸ்டூடியோவில்  வால்கே, விஜயா கார்டன் ஸ்டூடியோவில் சுவாமிநாதன்,  ஏ.வி.எம்.இல் முகுல் போஸ்,  ஜெ.ஜெ. மாணிக்கம், ஆர். சம்பத், சாரதா ஸ்டூடியோவில் ஒலிப்பதிவு மேதை டி.எஸ். 

Story image

ரங்கசாமி, நியூட்டோன் ஸ்டூடியோவில் தீன்ஷா  தெஹ்ராணி,  ஜெமினியில்  சி.இ. பிக்ஸ்  (Bigs) ஒளவையார் போன்ற படங்களின் ஒலிப்பதிவாளர் கோட்டீஸ்வர ராவ், சாந்தா ராமின் மங்கேஷ் தேசாய், பாம்பே  Farnons Tarde -வில் மினு கட்ரக், பிரசாத் ஸ்டூடியோவில் எஸ்.பி. இராமநாதன் (நெஞ்சத்தை கிள்ளாதே படத்திற்கு  சிறந்த  ஒலிப்பதிவுக்கான  ஜனாதிபதி தேசிய விருது பெற்றவர்) தரணி,  கே. பாலாஜியின்  சுஜாதா Recording Division மூர்த்தி, லட்சுமி நாராயணனுடன் சேர்ந்து "காதலன்' படத்திற்கு  ஜனாதிபதி தேசிய ஒலிப்பதிவு  விருதும், லட்சுமி நாராயணன்  (தனியாக)  "கன்னத்தில் முத்தமிட்டால்' படத்திற்கும்,  கேரளாவில் சித்ராஞ்சலி ஸ்டூடியோவில் தேவதாஸ், கிருஷ்ண உண்ணி, ஹரி குமார் மற்றும் எண்ணற்ற கலைஞர்களுடனும், பல முறை தேசிய அவார்டு பெற்ற ஒலிப்பதிவாளர்களுடனும் பணியாற்றி  இப்பொழுதும் இளைய தலைமுறை ஒலிப்பதிவாளர்களுடன் பணி செய்து என்னை  மேம்படுத்திக் கொள்கிறேன்.

  இவர்களைப் போல இந்தியாவில் ஒலிப்பதிவாளர்கள் மற்றும் கதாசிரியர்கள், வசன கர்த்தாக்களும், பாடலாசிரியர்கள், கவிஞர்களும், இலக்கியவாதிகளும் நான்  என்னுடைய  சிறுவயதில் இருந்து இதுவரை பழகியும் அவர்களிடம் வேலை  செய்தாலும், என்னை ஒரு சினிமாக்காரனென்னும் வட்டத்துக்குள் அடங்கிவிடாமல் ஒரு சமூக  அக்கறையுள்ள ஆர்வலராகப் பயணித்துக் கொண்டிருக்கிறேன்.

 என்னுடன் பணிபுரிந்தவர்கள் எல்லோரும் முக்கியமானவர்களே. நானறிந்த சில பெயர்களை  இந்த  கட்டுரையில்  பதிவு செய்வதால்  என்னை வாழ வைத்துக் கொண்டிருக்கும் சினிமாவுக்கு நான் கடனாளியாக இல்லாமல் அதை அந்த சினிமாவுக்கே திரும்ப  அர்ப்பணித்து வருகிறேன்.

  ஏனென்றால் அப்போதும் இப்போதும் தமிழ்நாட்டின் சினிமா கலைஞர்கள் மேலை நாட்டு சினிமா கலைஞர்களையே தூக்கி வைத்துக் கொண்டாடுகிறார்கள். அவர்கள் தங்களுடைய தந்தை,  தாய், பாட்டன்,  முப்பாட்டன் இவர்களைத் தெரிந்து கொள்ளவே இப்பெயர்களை இங்கு பதிவு செய்கிறேன்.
(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.