முதல்வரின் அரசியல் பிரிவு அலுவலராக ஜோதிடர்! நியமனத்தை ரத்து செய்ய சிபிஐ, சிபிஎம் கோரிக்கை!ரூ. 10 லட்சத்துக்கு நீட் வினாத்தாள் கசிவு! டெலிகிராமில் வாங்கியதாக மகாராஷ்டிரத்தில் இளைஞர் கைது!நீட் வினாத்தாள் கசிந்த விவகாரம்: சிபிஐ வழக்குப் பதிவு!கருப்பு திரைப்பட சிறப்பு காட்சிக்கு அனுமதி: முதல்வர் விஜய்க்கு படக்குழு நன்றி! தவெக அரசு கொறடாவாக விருகம்பாக்கம் எம்எல்ஏ சபரிநாதன் நியமனம்!இபிஎஸ் தலைமையிலானதே உண்மையான அதிமுக: திருமாவளவன் எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்க வேண்டும்: திருமாவளவன் தமிழ்நாடு அரசின் தலைமை வழக்குரைஞர் பி.எஸ்.ராமன் ராஜிநாமா!
/

ஒருநிலைப்படுத்துங்கள்...மனதை!

இந்த உலகம் நிற்காமல் சுழன்று கொண்டே இருக்கிறது. இந்த அவசர உலகில் நாமும் நிற்காமல் ஓடிக் கொண்டே இருக்கிறோம்

News image
Updated On :2 ஏப்ரல் 2019, 11:23 am IST

இந்த உலகம் நிற்காமல் சுழன்று கொண்டே இருக்கிறது. இந்த அவசர உலகில் நாமும் நிற்காமல் ஓடிக் கொண்டே இருக்கிறோம். இந்த ஓட்டத்தின் நடுவே நாம் சமநிலையில்தான் இருக்கிறோமா என்பதை நினைக்க மறந்து விடுகிறோம். நிம்மதியாக உணவருந்தி, அமைதியான துயில் கொண்டது வாரத்தில் எத்தனை முறை என்று யோசித்துள்ளோமா? நாம் தினமும் செல்லும் வழியில் பூத்துக் குலுங்கும் மலர்களைக் கண்டு ரசிக்க என்றேனும் எத்தனித்ததுண்டா? அருமையான காலைப் பொழுதின் அழகில் அமைதியைத் தேடியதுண்டா?
 இவ்வாறு நம்மைச் சுற்றி இருக்கும் இயற்கை அழகைக் கூட உணர நேரமில்லாது, கடந்தகாலத்தை நினைத்து வருந்தியும், எதிர்காலத்தை எண்ணி ஏங்கியும் நிகழ்காலத்தை அனுபவிக்க மறந்து விடுகிறோம். ஒரே நேரத்தில் பல வேலைகளைச் செய்வதால் அவசர கதியில் நிகழ்காலத்தை உணர மறந்து விடுகிறோம். இதன் பின்விளைவாக, மன உளைச்சல், உடல் சோர்வு, தளர்வு, மன அழுத்தம் என பல வகையான துன்பங்களை எதிர்கொள்ள ஆளாகிறோம்.
 இவற்றுக்கெல்லாம் காரணம் என்னவென்று பார்த்தால், நமது மனம் ஒருநிலையில் இல்லாததே. மனதை ஒருநிலைப்படுத்துவது எவ்வாறு?
 மனதை ஒருநிலைப்படுத்த சில அடிப்படையான வழிமுறைகள்:
 மூச்சுப் பயிற்சி
 நேரான இருக்கையிலோ அல்லது தரையில் கால்களை மடக்கியோ அமர்ந்து மூச்சுப் பயிற்சி செய்யலாம். இந்த பயிற்சியின்போது, மூச்சை ஆழமாக இழுத்து பொறுமையாக விட வேண்டும். மூச்சு விடும்போது, வேறு எந்த சிந்தனையும் இன்றி மூக்கின் வழியாக காற்று உள்ளே செல்வதையும், வெளியேறுவதையும் கவனிக்க வேண்டும். அதே போல, மூச்சுப் பயிற்சியின்போது, வயிறு சுருங்கி விரிவதைக் கவனிக்கலாம். இதன் மூலம் அலைபாயாமல், ஒரே செயலை உற்று நோக்க நமது மனம் பழகிக் கொள்ளும்.
 மந்திரம் உச்சரித்தல்
 மனதை ஒருநிலைப்படுத்த தியான முறையில் விருப்பமான கடவுளின் பெயரையோ, மந்திரத்தையோ தொடர்ந்து உச்சரித்து கொண்டே இருப்பதன் மூலம் கவனச் சிதறலைத் தவிர்க்கலாம்.
 தியானம்
 நம்மில் பலர் மன அழுத்தம், பதற்றத்தை குறைக்க தினமும் 30}45 நிமிடங்கள் வரை ஒரே இடத்தில் தியான நிலையில் இருந்து மனதை ஒருநிலைப்படுத்த முயற்சி செய்து பல பயிற்சி வகுப்புகளில் சேர்கிறோம். ஆனால் அதைத் தொடர்ந்து பின்பற்றுகிறோமா என்று பார்த்தால் அது நடப்பதில்லை. அவ்வாறு நேரம் கிடைக்காதவர்கள் பயண நேரத்தின்போது, தங்கள் மனதை ஒருநிலைப்படுத்த முயற்சி செய்யலாம்.
 தன்னைத் தானே உற்று நோக்குதல்
 கண்களை மூடி ஆழமாக நம்மை நாமே கூர்ந்து கவனிக்க வேண்டும். தலை முதல் கால் வரையிலான நமது அசைவுகள், உணர்ச்சிகள் ஆகியவற்றை உணர வேண்டும். தொடர்ந்து வேலை செய்யும் நேரத்தில், கண்களை மூடி சிறிது நேரம் அமைதியாக இருக்கும்போது, தலையின் கனம் குறைவதைக் காணலாம். கண்கள் குளிர்ச்சி பெறுவதை உணர முடியும். இதயம் இலகுவாவதையும் நாம் அனுபவிக்க முடியும்.
 புலன்களைக் கட்டுப்படுத்துதல்
 ஐம்புலன்களையும் கட்டுப்படுத்த கற்றுக் கொள்ள வேண்டும். பார்க்கும் ஒன்றை கவனம் சிதறாது பார்க்க வேண்டும். கண்கள் அங்கும் இங்கும் அலைபாய்வதைக் கட்டுப்படுத்தி நிலையாக ஓரிடத்தில் பார்வையைச் செலுத்த வேண்டும். இதேபோல, காது, மூக்கு, நா, உடல் அனைத்தையும் கட்டுப்படுத்த கற்றுக் கொள்ள வேண்டும்.
 இவ்வாறு மனதை ஒருநிலைப்படுத்துவதால் என்ன பயன்?
 மனநலம்
 மனதை ஒருநிலைப்படுத்துபவர்கள், தோல்வியைக் கூட எளிதில் கையாள்வார்கள். இவ்வாறு மனதை ஒருநிலைப்படுத்துவதால் நமது எண்ணங்களைக் கட்டுப்படுத்த முடியும். எண்ணங்களுக்கு உயிரூட்ட முடியும். நமக்கு தேவையானவை எவை, தேவையற்றவை எவை என்பதைப் பிரித்துப் பார்ப்பது மட்டுமன்றி, தேவையற்றவற்றின் மீது கவனத்தைச் சிதறவிடாமல் இருக்க முடியும்.
 மனதை ஒருநிலைப்படுத்துவதால், உடல் அளவிலும், மன அளவிலும் நல்ல வளர்ச்சியும், முன்னேற்றமும் ஏற்படுவதை உணரலாம்.
 எண்ணத்திலும், சொல்லிலும், செயலிலும் பொறுமையும், கவனமும், கூர்மையும் அதிகரிப்பதை உணரலாம். சிக்கலான முடிவுகளை எடுக்கும்போது, குழப்பம் இன்றி தெளிவாக ஆழமாக யோசித்து முடிவெடுக்க முடியும். நாம் செய்து முடிக்க எண்ணும் பணிகளை முழு ஈடுபாட்டுடன் எந்த ஒரு தடையும் இன்றி செய்து முடிக்க முடியும். துன்பங்களை விலக்கி பார்க்க முடியும். தோல்விகளைக் கண்டு கலங்காது, நமது பாதையில் தொடர்ந்து பயணிப்பதற்கான மனப்பக்குவத்தை உருவாக்க முடியும்.
 உடல்நலம்
 உடல்நலத்தைப் பேணிக் காக்கவும், மனதை ஒருநிலைப்படுத்துவது பயன்படுகிறது. மன அழுத்தம், ரத்த அழுத்தம் முதலானவற்றைக் கட்டுக்குள் கொண்டு வருகிறது. இதயம் தொடர்பான நோய்களின் தாக்கத்தை குறைக்கிறது. நல்ல உறக்கம் கொள்ள உதவுகிறது.
 பல்வேறு பிரச்னைகளைக் கூறும் நோயாளிகளுக்கு மனதை ஒருநிலைப்படுத்துவதையும், அமைதியாக வைத்துக் கொள்வதையுமே முக்கிய மருத்துவமாக மருத்துவர்கள் இப்போது பரிந்துரைக்கின்றனர்.
 க. நந்தினி ரவிச்சந்திரன்
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.