தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

மாணவர்கள் கவனத்திற்கு... சும்மா இருக்காதீர்கள்!

கரோனா நோய்த்தொற்று காரணமாக நாடே முடங்கியுள்ளது.

News image
Updated On :14 ஏப்ரல் 2020, 6:54 am

சுரேந்தர் ரவி

கரோனா நோய்த்தொற்று காரணமாக நாடே முடங்கியுள்ளது. 

மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கியுள்ளனர். பள்ளிகளுக்கும்  கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுவிட்டது. அதன் காரணமாக அவர்
களுக்கு வார இறுதி நாள்களுக்கும் வார நாள்களுக்கும் எந்தவித வேறுபாடும் தெரியாத சூழல் ஏற்பட்டுள்ளது. 

இத்தகைய சூழல் வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது. இந்தச் சூழல்தற்காலிகமானதுதான் என்றாலும் கூட வீட்டிலேயே அடைந்துகிடைப்பதால், பள்ளி, கல்லூரி மாணவர்கள் தங்களின் மகிழ்ச்சி நிறைந்த வாழ்க்கையை இழந்து வருகின்றனர். நண்பர்களுடன் இணைந்து விளையாடும் தருணங்களையும் பள்ளி, கல்லூரிகளில் பாடம் கற்பதுடன் மகிழ்ந்திருக்கும் நேரத்தையும் மாணவர்கள் இழந்துள்ளனர். 

அவற்றின் காரணமாக மாணவர்கள் கவலையும் ஏமாற்றமும் அடையலாம். அவை மாணவர்களின் மன ஆரோக்கியத்தைப் பாதிக்கவும் வாய்ப்புள்ளது. 

இத்தகைய இக்கட்டான சூழலில் மாணவர்கள் கைக்கொள்ள வேண்டிய சில முக்கிய செயல்பாடுகளை இங்கு காணலாம்.

தற்காப்பு நடவடிக்கைகள்

பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டிருப்பது மாணவர்களுக்கு அமைதியின்மையையும் கவலையையும் ஏற்படுத்தலாம். 

அத்தகைய உணர்வுகள் வழக்கமான ஒன்றுதான் என்பதை நீங்கள் உணர வேண்டும். உங்களுக்கு ஏற்படுவது போன்றே மற்ற மாணவர்களுக்கும் மன உணர்ச்சிகள் ஏற்படும். எனவே, அமைதியின்மையைக் கண்டு அச்சமடையக் கூடாது. 

இத்தகைய இக்கட்டான சூழலில் கரோனா நோய்த்தொற்றிலிருந்து தற்காத்துக் கொள்வதற்கான நடவடிக்கைகளை மாணவர்கள் கடைப்பிடிக்க வேண்டும். கைகளை அடிக்கடி சோப்பின் உதவியுடன் சுத்தமாகக் கழுவ வேண்டும். முகத்தை அடிக்கடி தொடக் கூடாது. 

மற்றவர்களுடன் பேசும்போது கூட இடைவெளியை முறையாகப் பின்பற்ற 
வேண்டும். இந்த நடவடிக்கைகள் மூலம் உங்களை மட்டுமல்லாமல் மற்றவர்களையும் நோய்த்தொற்றிலிருந்து காக்க முடியும். 

வதந்திகளை நம்ப வேண்டாம் மாணவர்கள் வீட்டிலேயே முடங்கியிருப்பதால் சமூக வலைதளங்களை அதிகமாகப் பயன்படுத்த நேரிடும். கரோனா நோய்த்தொற்று தொடர்பான வதந்திகள், அந்த நோய்த்தொற்றை விட வேகமாகப் பரவி வருகின்றன.  

எனவே, நோய்த்தொற்று தொடர்பாக சமூக வலைதளங்களில் காணும்தகவல்களை மாணவர்கள்  உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும்,அத்தகவல்களை உலக சுகாதார அமைப்பின் வலைதளத்திலும் உறுதிசெய்து கொள்ள வேண்டும். அத்தகவல்களின் உண்மைத்தன்மையை அறியாமல் சமூக வலைதளங்களில் அவற்றைப் பகிரக் கூடாது.

அச்சம் வேண்டாம் 

இருமல், காய்ச்சல் உள்ளிட்ட உடல்நலக் கோளாறுகள் ஏற்பட்டால், அதை மாணவர்கள் உடனடியாக பெற்றோருக்குத் தெரியப்படுத்த வேண்டும். கரோனா நோய்த்தொற்றின் தாக்கம் பதின்வயதினருக்கு தீவிரமாக இருக்காது என்று நிபுணர்கள் கூறியுள்ளனர். எனவே, நோய்த்தொற்று தொடர்பாக மாணவர்கள் எந்தவித அச்சமும் கொள்ளத் தேவையில்லை. 

மனதை திசைதிருப்புங்கள் 

நோய்த்தொற்று தொடர்பான தகவல்களே எங்கும் ஆக்கிரமித்துள்ளன. எனவே, அவற்றிலிருந்து மனதை சற்று திசைதிருப்ப வேண்டும். புத்தகம் படிப்பது, புதிர்களுக்கு விடை காண்பது, சதுரங்கம் விளையாடுவது, "அபாகஸ்' கற்றுக் கொள்வது, வீட்டுத் தோட்டம் அமைப்பது, கைவினைப் பொருள்கள் செய்வது, ஓவியம் தீட்டுவது, வீட்டை அழகுபடுத்துவது உள்ளிட்டவற்றில் மாணவர்கள் 
கவனம் செலுத்தலாம்.  

புதுமையான அறிவியல் தொழில் நுட்பங்களை மாணவர்கள் இணைய வழியில் கற்றுக் கொள்வதோடு பல்வேறு குறுகிய காலப் படிப்புகளையும் கற்கலாம். வாழ்வில் கண்டிப்பாகப் படிக்க வேண்டிய புத்தகங்களின் பட்டியலைத் தயார்செய்து, அந்தப் புத்தகங்களை ஒவ்வொன்றாகப் படித்து முடிக்கலாம்.  

பள்ளி, கல்லூரிகளுக்குச் சென்று வருவதிலேயே கவனம் செலுத்தி வந்த மாணவர்கள், தற்போது வீட்டிலிருக்கும் நேரத்தில் பெற்றோருடன் அதிகமான நேரத்தை செலவிடலாம். பெற்றோரும் அலுவலகத்துக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருப்பதால், அவர்களுடன் கலந்துரையாடலாம். பெற்றோரின் குழந்தைப் பருவம், மாணவப் பருவம், இளமைப் பருவம் குறித்தும் அவர்கள் வளர்ந்த விதம் குறித்தும் மாணவர்கள் உரையாடலாம்.

விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள்

வீட்டில் தனிமையில் இருக்கும் நேரத்தில் பொதுநலனையும் மாணவர்கள் வளர்த்துக் கொள்ளலாம். பள்ளி, கல்லூரிகளில் சில மாணவர்கள் நாட்டு நலப்பணித் திட்டம் (என்எஸ்எஸ்), தேசிய மாணவர் படை (என்சிசி), செஞ்சிலுவைச் சங்கம், சாரணர் இயக்கம் உள்ளிட்டவற்றின் உறுப்பினர்களாக இருக்கலாம்.  

நாடு முழுவதும் பரவி வரும் கரோனோ நோய்த்தொற்று தொடர்பாக சமூக வலைதளங்கள் வாயிலாக மக்களுக்கு போதிய விழிப்புணர்வை மாணவர்கள் ஏற்படுத்தலாம். நோய்த்தொற்றைத் தடுப்பதற்கு அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள், நோய்த்தொற்றுக்கான அறிகுறிகள் தென்பட்டால் யாரைத் தொடர்பு கொள்வது, அத்தியாவசியப் பொருள்களை வாங்குவதற்கு வீட்டை விட்டு வெளியே செல்லும்போது கடைப்பிடிக்க வேண்டிய விதி முறைகள் உள்ளிட்டவை தொடர்பாக மக்களுக்கு மாணவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தலாம்.

நண்பர்களுடன் நேரத்தைச் செலவிடுங்கள் 

மாணவர்கள் தற்போது வீட்டிலேயே முடங்கியிருப்பதால், நண்பர்களுடன் தொடர்பு கொள்வதற்கான புதிய வழிகளைக் கண்டறிய வேண்டும். செல்லிடப்பேசியில் காணொலிக் காட்சி வாயிலாக நண்பர்களைத் தொடர்பு கொள்ளலாம். படித்த புத்தகம் குறித்தோ உயர்கல்வி வாய்ப்புகள் குறித்தோ கட்செவி அஞ்சல் (வாட்ஸ்அப்) வாயிலாக நண்பர்களுடன் கலந்துரையாடலாம். 
செல்லிடப்பேசி வாயிலாக உறவினர்களுடனும் தொடர்பு கொள்ளலாம். அதே வேளையில், செல்லிடப்பேசியிலும் சமூக வலைதளங்களிலும் அதிகமான நேரத்தைச் செலவிடாமல் நம்மை நாமே கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும். நம்மை மேம்படுத்துவதற்காக மட்டுமே அவற்றைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.