/

காரை ஆம்புலன்ஸாக மாற்றிய இளைஞர்!

உத்தரகண்ட் மாநிலம் டெஹ்ரி மாவட்டத்தில் உள்ளது தேவ்ப்ரயாக் என்ற நகரம். மலைப்பகுதியான இந்த நகரத்தில் போக்குவரத்து வசதிகள் குறைவு.

News image
Updated On :21 ஏப்ரல் 2020, 11:58 am

ந.ஜீ.


உத்தரகண்ட் மாநிலம் டெஹ்ரி மாவட்டத்தில் உள்ளது தேவ்ப்ரயாக் என்ற நகரம். மலைப்பகுதியான இந்த நகரத்தில் போக்குவரத்து வசதிகள் குறைவு. இந்த நகரைச் சேர்ந்த 32 வயதான இளைஞர் கணேஷ் பட், இந்த மாவட்டத்தில் பல இடங்களில் கம்ப்யூட்டர் பயிற்சி மையங்களை நடத்தி வருகிறார்.

கரோனா வைரஸ் தாக்குதலைத் தொடர்ந்து ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பிறகு, இந்தப் பகுதியில் போக்குவரத்து முற்றிலும் முடங்கிப் போனது. குழந்தை பெறுவதற்காக காத்திருக்கும் கர்ப்பிணிப் பெண்கள், இதய நோய் உள்ளவர்கள் மருத்துவமனை செல்ல வேண்டும் என்றால் கூட வாகன வசதி இல்லை.

ஆம்புலன்சுக்கு அழைப்பு விடுத்தால் கூட, இந்தப் பகுதிக்கு அது வருவதற்கு சிறிது நேரம் ஆகலாம். ஆம்புலன்ஸ் வருவதற்கு முன்பு எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்ற நிலை இருந்து வருகிறது.

இந்த நிலையில் தான் மக்களுக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டும் என்று நினைத்தார் கணேஷ் பட். உடனடியாக ஒரு முடிவுக்கு வந்தார்.

தனது நீல நிற டாடா நானோ காரை ஆம்புலன்ஸாக மாற்றினார். ஆம்புலன்ஸ் தேவைப்படுபவர்கள் ஒரு நாளில் எந்த நேரத்தில் அழைத்தாலும் (24X7) உடனே காரை எடுத்துக் கொண்டு கிளம்பிவிடுகிறார்.

அவர் தனது முகநூல் பக்கத்தில் தனது கார் எண், தொடர்பு கொள்ள வேண்டிய செல்பேசி எண், இருப்பிடம் எல்லாவற்றையும் விரிவாகப் போட்டிருக்கிறார். அதைப் பார்க்கும் பிறர் தமக்கு மட்டுமல்ல, தமது நண்பர்கள், தெரிந்தவர்கள் எல்லாருக்கும் இந்தத் தகவலை பல்வேறு சமூக ஊடகங்களின் வாயிலாகப் பகிர்ந்து வருகின்றனர்.

""எனக்கு வந்த முதல் அழைப்பு ஒரு கர்ப்பிணிப் பெண்ணிடமிருந்து. அந்தப் பெண்ணை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றேன். அதற்குப் பிறகு கீழே விழுந்து தனது கையை உடைத்துக் கொண்ட ஒரு குழந்தையை அழைத்துக் கொண்டு போனேன்'' என்கிறார் கணேஷ் பட்.

ஊரடங்கு சமயத்தில் இதுபோல செல்வது சிரமமாக இல்லையா? என்ற கேள்விக்கு, தான் அந்தப் பகுதியைச் சேர்ந்தவர் என்பதாலும், பல காவல்துறை அதிகாரிகளைத் தனக்குத் தனிப்பட்ட முறையில் தெரியும் என்பதாலும், தனது ஆம்புலன்ஸ் சேவை தேவையான ஒன்று என்பதாலும் தனது சேவைப் பயணத்துக்குத் தடை எதுவும் இதுவரை வரவில்லை என்கிறார் அவர்.

ஊரடங்கினால் பலர் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாத நிலையில் இருக்கிறார்கள். ஒரு மருந்துக் கடையில் தேவையான மருந்து, மாத்திரைகள் வாங்க வேண்டும் என்றாலும் சிரமமாக இருக்கிறது. யாருக்காவது மருந்து, மாத்திரைகள் வாங்க வேண்டும் என்றால், கணேஷ் பட் அவர்களுக்கு வாங்கித் தருகிறார்.

"உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும்' வாழும் கணேஷ் பட் நமது இளைஞர்களுக்கு ஒரு முன்மாதிரி என்று சொன்னால் அது மிகைஇல்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.