அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

தேவையில்லாமல் ஊர் சுற்றினால்... கண்டுபிடிக்கும் புதிய செயலி!

ஊரடங்கு அமலாக்கப்பட்ட நாளிலிருந்து பொதுமக்கள் யாரும் வெளியில் வர வேண்டாம் என பலமுறை எச்சரித்தும் கரோனா நோய்த்தொற்றின் ஆபத்தை உணராமல் பலரும் வெளியில் சுற்றுவதை அடிக்கடி பார்க்க முடிகிறது. 

News image
Updated On :28 ஏப்ரல் 2020, 1:34 pm

சி.வ.சு.ஜெக​ஜோதி​

ஊரடங்கு அமலாக்கப்பட்ட நாளிலிருந்து பொதுமக்கள் யாரும் வெளியில் வர வேண்டாம் என பலமுறை எச்சரித்தும் கரோனா நோய்த்தொற்றின் ஆபத்தை உணராமல் பலரும் வெளியில் சுற்றுவதை அடிக்கடி பார்க்க முடிகிறது. 

அவசியமின்றி வெளியில் சுற்றித் திரிந்ததாக தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கான வாகனங்கள் காவல் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

வாகனங்களைப் பறிமுதல் செய்வதும், அவற்றைப் பாதுகாத்து திரும்ப ஒப்படைப்பதும் காவல்துறையினருக்கு கூடுதல் பணிச்சுமையாகி இருக்கிறது. 

தலைக் கவசம் போடாததற்கு வழக்குப்பதிவு செய்த போலீஸார் இன்று முகக் கவசம் போடாததற்கும் அபராதம் வசூலிக்கும் நிலை வந்திருக்கிறது.

தமிழகம் முழுவதும் காவல்துறையினரின் நிலைமை இதுவாக இருந்தாலும் பொதுமக்கள் தேவையில்லாமல் வெளியில் சுற்றித் திரிவதைத் தடுக்க பிரத்யேகமாக ஒரு "செயலி' உருவாக்கப்பட்டு அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 

இச்செயலி தற்போது 10-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் அறிமுகப்படுத்தப்பட்டு காவல்துறையினரின் பணிகளைப் பெருமளவு குறைத்திருக்கிறது. அதேசமயம், மக்கள் தேவையில்லாமல் வெளியில் சுற்றித் திரிவதையும் தடுத்திருக்கிறது. 

இச்செயலிக்கு smartcop (ஸ்மார்ட்காப்) எனப் பெயரிடப்பட்டுள்ளது.

காவல்துறையினருக்காக இச்செயலியை உருவாக்கியவர் சென்னை அண்ணா நகரில் ஐஏஎஸ்பைஹார்ட் (iasbyheart) என்ற போட்டித் தேர்வு பயிற்சி மையத்தை நடத்தி வரும் தே.அருளானந்தம்.  அவரிடம் இதுகுறித்து கேட்ட போது அவர் கூறியது:

""தேவையில்லாமல் வாகனங்களில் சுற்றித் திரிவோர் மீண்டும் வெளியில் வருவதைத் தடுக்க காவல்துறையினர் அந்த வாகனத்தின் மட்கார்டுகளில் பெயிண்டால் எழுதுவதைத் தொலைக்காட்சி செய்திகளில் பார்த்தேன்.

அவ்வாறு பெயிண்டால் எழுதினால் வீட்டுக்குப் போய் "தின்னர்' மூலம் அழித்து விட வாய்ப்பு இருக்கிறது.

"இதற்கு பதிலாக வேறு ஏதேனும் வழிமுறையைப் பின்பற்ற முடியுமா' என்று திருவண்ணாமலை மாவட்ட எஸ்.பி. சிபி சக்ரவர்த்தியிடம் கேட்டேன்.
அவர்தான் "இதற்கென ஒரு புதிய செயலியை உருவாக்க முடியும்' என்றும்,

"அதில் என்னென்ன வசதிகள் இருக்க வேண்டும்' என்றும் ஆலோசனைகூறினார். 

அவரது திட்டத்தை "செயலி'களை உருவாக்கும் நிறுவனங்களில் ஒன்றான xenovax technologis -என்ற நிறுவனத்திடம் தெரிவித்து காவல்துறையினருக்கு பயன்படும் விதத்தில் smartcop-என்ற செயலியை உருவாக்கினேன்.

இச்செயலியை காவலர்கள் தங்களது செல்லிடப்பேசிகளில் பதிவிறக்கம் செய்து கொண்டால், ஒரு ரகசிய குறியீட்டு எண்ணைப் பயன்படுத்தி இதனை இயக்கலாம்.

இதன்மூலம் தேவையில்லாமல் வெளியில் நடந்தோ அல்லது வாகனங்களிலோ செல்பவர்கள் பற்றிய விவரங்களைச் சேகரிக்க முடியும். 

ஊரடங்கை மீறுவோரின் பெயர், செல்லிடப்பேசி எண், வாகனப்பதிவு எண், ஓட்டுநர் உரிமம், ஆதார் எண், குடும்ப அட்டை எண் அல்லது ஏதேனும் ஓர் அடையாள அட்டையை இச்செயலியில் பதிவிட்டு, சேமித்து வைத்துக் கொள்ள முடியும்.

அதே நபர் மற்றோர் இடத்தில் பிடிபடும்போது, அவரது செல்லிடப்பேசி எண்ணைப் பதிவு செய்தால், முந்தையை நிகழ்வுகளுடன் ஒப்பிட்டுப் பார்த்து அவரது முந்தைய தவறுகளை அடையாளம் காட்டி இந்த செயலி எச்சரிக்கை செய்யும்.

இதன் மூலம் அந்த நபர் மீது நடவடிக்கை எடுக்க முடியும். இச்செயலி ஒருங்கிணைந்த "டேட்டா பேஸ்' மூலம் இயங்குவதால், பல்வேறு இடங்களில் நடைபெற்ற தவறுகளை ஒப்பிட்டு மாவட்டம் முழுவதும் நடைபெற்ற மொத்த நிகழ்வுகளையும் செயலியின் முகப்பு பக்கத்திலேயே காணும் வசதிகளும் உள்ளன.

நடவடிக்கை எடுக்கப்படும் நபருக்கு குறுஞ்செய்தி மூலம் தகவல் கொடுக்கப்படும்.

போலீஸார் முதல் முறையாக நடவடிக்கை எடுக்கும்போது "முதல்முறை' என்றும், 2-ஆவது முறையாக இருந்தால் "இரண்டாம் முறை' உங்கள் மீது நடவடிக்கை என்றும் குறுஞ்செய்தி அனுப்பலாம்.

பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களைத் திரும்ப ஒப்படைக்கவும் இதே செயலியில் பதிவு செய்யலாம்.

ஒப்படைக்கப்பட்ட வாகனங்கள் திரும்பவும் விதிமீறலில் ஈடுபடும் போது அதைப்பற்றிய தகவல்களையும் அறிந்து கொள்ள முடியும்.

இச்செயலி இப்படி ஏராளமான வசதிகளை உள்ளடக்கியதாக இருப்பதால் காவல்துறையினருக்கு பேருதவியாக இருக்கிறது.

திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருச்சி,திருப்பூர், திண்டுக்கல், தேனி, சேலம், வேலூர், நாமக்கல் உள்பட 15-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இச்செயலியை காவல்துறையினர் பயன்படுத்தி வருகின்றனர். மேலும் தேவைப்படும் மாவட்டங்களுக்கும் ஏற்ற வகையில் இச்செயலியை இலவசமாகவே செய்து கொடுக்கத் தயாராக இருக்கிறோம்'' என்றார்.

இதுகுறித்து காஞ்சிபுரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பா.சாமுண்டீஸ்வரி கூறியது:

""ஊரடங்கு விதிகளை மீறி ஒருவர் 2-ஆவது முறையோ, 3-ஆவது முறையோ அல்லது அதற்கு மேலும் வெளியில் காரணமின்றி வரும் போது இச்செயலி தானாகவே அவரைக் காட்டிக் கொடுத்து விடும்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஒரே நாளில் 500-க்கும் மேற்பட்டோர் விதிமீறலில் ஈடுபடும்போது தகுந்த நடவடிக்கை எடுக்க இச்செயலி உதவியாக இருக்கிறது.
ஒருவருடைய வாகனத்தை மற்றொருவர் திருடிக்கொண்டு வந்தாலும் அதைக் காட்டிக்கொடுக்க இச்செயலி உதவுகிறது.

கடந்த 3 நாள்களில் மட்டும் இச்செயலியில் 1,011 விதிமீறல் வழக்குகள் பதிவாகியிருக்கின்றன.

இனி வரும் நாள்களில் இச்செயலி மூலம் கண்காணிப்புகளைத் தீவிரப்படுத்த இருக்கிறோம். இதன் மூலம் போலீஸாரின் பணிச்சுமை குறைந்திருக்கிறது'' என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.