கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

அலுவலகச் சூழல்... வீட்டிலேயே!

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கரோனா நோய்த்தொற்று பலரின் அன்றாட வாழ்க்கையை மாற்றியுள்ளது. அந்நோய்த்தொற்று மற்றவர்களுக்கு எளிதில் பரவி விடும் என்பதால் பல்வேறு நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன.

News image
Updated On :18 ஆகஸ்ட் 2020, 12:30 am

சுரேந்தர் ரவி

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கரோனா நோய்த்தொற்று பலரின் அன்றாட வாழ்க்கையை மாற்றியுள்ளது. அந்நோய்த்தொற்று மற்றவர்களுக்கு எளிதில் பரவி விடும் என்பதால் பல்வேறு நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்ளிட்ட பெரும்பாலான நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களை வீட்டிலிருந்தே பணியாற்ற வலியுறுத்தி வருகின்றன. அதன் காரணமாக வீட்டிலிருந்து பணியாற்றும் வழக்கம் தற்போது அதிகரித்துள்ளது.

நாம் அலுவலகத்தில் பணியாற்றும்போது சரியான உயரம் கொண்ட மேஜை, நாற்காலி, போதிய வெளிச்சம், காற்றோட்ட வசதி கொண்ட அறைகள் ஆகியவை நமது பணித்திறனை மேம்படுத்தியதோடு உடல்நலத்தையும் பாதுகாத்தன. ஆனால், தற்போது அவசரகதியில் வீட்டிலிருந்து பணியாற்றி வருவதால் போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பல பணியாளர்கள் மேற்கொள்வதில்லை.

அதில் முக்கியமாக கணினி அல்லது மடிக்கணினியை பயன்படுத்துவதில் முறையற்ற வழிமுறைகளைப் பலர் பின்பற்றி வருகின்றனர். வீட்டில் மேஜை வசதி இல்லாதவர்கள், சமையலறைத் திட்டு, குளிர்பதனப் பெட்டி, நாற்காலி உள்ளிட்டவற்றை மேஜை போன்று பயன்படுத்தி வருகின்றனர். சிலர் அட்டைப் பெட்டிகள் மீதும் அடுக்கிவைத்த புத்தகங்கள் மீதும் மடிக்கணினியை வைத்து பணியாற்றி வருகின்றனர்.

அதேபோல், அலுவலகத்தில் நாள் முழுவதும் நாற்காலியில் அமர்ந்து பணியாற்றியவர்கள் கூட வீட்டிலிருந்து பணியாற்றும்போது நாற்காலியில் அமர்வதில்லை. சோஃபா, மெத்தை உள்ளிட்டவற்றின் மீது அமர்ந்து மடிக்கணினியின் மூலமாக பணியாற்றுகின்றனர். அவ்வாறு பணியாற்றுவதால் தசைப்பிடிப்பு, கழுத்து வலி, மூட்டு வலி உள்ளிட்ட உடல்நலப் பாதிப்புகள் ஏற்படும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

மடிக்கணினியை சமதளத்தின் மீது வைத்தே பயன்படுத்த வேண்டும் என்று மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர். மடிக்கணினியில் பணியாற்றும்போது நாற்காலியில் அமர்ந்தே பணியாற்ற வேண்டும் என்றும், அவ்வாறு அமரும்போது பாதங்கள் இரண்டும் தரையில் இருக்க வேண்டும் என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

காலும் தொடையும் செங்கோணத்தில் இருக்குமாறு நாற்காலியின் உயரத்தைச் சரி செய்து கொள்வது மிகவும் அவசியமானது என்றும் அவர்கள் வலியுறுத்துகின்றனர். மடிக்கணினி அமைந்துள்ள மேஜைக்கும் நாற்காலிக்கும் இடையே போதிய இடைவெளி அமைந்திருக்க வேண்டியது அவசியம் எனத் தெரிவிக்கும் அவர்கள், நாற்காலியில் அமர்ந்திருக்கும்போது முதுகு நேராக அமைந்திருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கின்றனர்.

அதேபோல் வீட்டிலிருந்து பணியாற்றும்போது சுகாதார வழிமுறைகளை பணியாளர்கள் முறையாகக் கடைப்பிடிக்க வேண்டியது அவசியமாகிறது. மடிக்கணினி, கணினியின் தட்டச்சுப் பலகை (கீ போர்ட்), சுட்டி (மெளஸ்), செல்லிடப்பேசி உள்ளிட்டவற்றில் நுண்கிருமிகள் வாழும் என்பதால் அவற்றைப் பயன்படுத்திய பிறகு கைகளை சோப்பின் உதவியுடன் நன்கு கழுவ வேண்டும். அதேபோல் உங்கள் கைகளிலிருந்து நுண்கிருமிகள் மடிக்கணினி உள்ளிட்டவற்றுக்குப் பரவும் என்பதால் வெளியில் சென்று வந்த பிறகு கைகளைக் கழுவிய பிறகே மடிக்கணினி, செல்லிடப்பேசி உள்ளிட்டவற்றைப் பயன்படுத்த வேண்டும்.

வீட்டிலிருந்து பணியாற்றும் பலர் பணியாற்றும் இடத்துக்கு அருகிலேயே தின்பண்டங்கள், உணவு உள்ளிட்டவற்றை உட்கொள்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். அதனால் பல்வேறு பிரச்னைகள் ஏற்படும் என்பதை அவர்கள் உணர்வதில்லை. தின்பண்டங்கள், உணவுப் பொருள்களின் சிறு துகள்கள் தட்டச்சுப் பலகை, மடிக்கணினி உள்ளிட்டவற்றில் விழுந்தால் அவை செயல்படாமல் போவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. அதேபோல், தின்பண்டங்கள் சிதறிக் கிடக்கும் இடங்களுக்கு எலி, கரப்பான்பூச்சி உள்ளிட்டவை படையெடுக்கும். அவை சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தும்.

எனவே, மடிக்கணினி, தட்டச்சுப் பலகை, செல்லிடப்பேசி உள்ளிட்டவற்றை கிருமிநாசினியின் துணையுடன் அவ்வப்போது சுத்தம் செய்வது மிகவும் அவசியம்.

மடிக்கணினி, கணினியில் தொடர்ந்து நெடுநேரம் மூழ்கியிருக்காமல் அவ்வப்போது வீட்டின் முகப்பிலோ அல்லது தோட்டப் பகுதியிலோ நடக்க வேண்டும். அப்போதுதான் உள்ளம் அழுத்தத்துக்கு உள்படாமல் புத்துணர்வடையும்.

கணினித் திரைகளைத் தொடர்ந்து பார்த்துக் கொண்டிருப்பது கண்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். முக்கியமாக கண்ணில் ஈரப்பதம் குறையும். எனவே, கண்களை அடிக்கடி சிமிட்டுவதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

அதேபோல், 20 நிமிடங்களுக்கு ஒரு முறை 3 நிமிடங்கள் இடைவெளி எடுத்துக் கொண்டு கணினித் திரையைப் பார்க்காமல் இருக்க வேண்டும்.

இதுபோன்ற நடவடிக்கைகள் கண்களின் நலத்தைப் பாதுகாக்கும். தற்போது பருவநிலை மாற்றமும் நேர்ந்து வருவதால் பணியாளர்களுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. அவ்வாறு உடல்நலக் கோளாறு ஏற்படும்போது சிரமப்பட்டு அலுவலகப் பணியை மேற்கொள்ள வேண்டாம். உடல்நலக் குறைவு ஏற்பட்டால் விடுமுறை எடுத்துக்கொள்வது சரியான தீர்வாக இருக்கும்.

கரோனா நோய்த்தொற்று கட்டுக்குள் வந்த பிறகும் வீட்டில் இருந்து வேலை செய்யும் இந்த நடைமுறை தொடர்வதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. எனவே, வீட்டிலேயே அலுவலகச் சூழலை உருவாக்கி பணியைத் திறம்பட மேற்கொள்வதோடு உடல்நலத்தையும் காத்துக் கொள்வோம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.