புதியன புகுத்துதல்!

மாற்றம் ஒன்றே மாறாதது. மாற்றங்கள் மட்டுமே உலகை இயங்கச் செய்கின்றன.
புதியன புகுத்துதல்!

மாற்றம் ஒன்றே மாறாதது. மாற்றங்கள் மட்டுமே உலகை இயங்கச் செய்கின்றன. மனிதன் நெருப்பையும் சக்கரத்தையும் உருவாக்கியதே வளர்ச்சிக்கான முதல்படி. அன்று தொடங்கி இன்று வரை ஒவ்வொரு துறையிலும் புதுமைகள் புகுத்தப்பட்டு வருகின்றன. காலமும் நேரமும் எல்லை இல்லாமல் நீண்டு கொண்டே இருப்பதைப் போல, மனித சமூகம் உள்ளவரை புதுமைகளும் நீண்டு கொண்டே இருக்கும்.

அத்தகைய சூழலில் நிறுவனங்களில் புதுமைகளைப் புகுத்த பணியாளர்களை நாம் அனுமதிக்கிறோமா என்பதே பெரும் கேள்வியாக உள்ளது. இதுவரை செய்து வந்த பணியை இன்னும் எளிதில் செய்யவல்ல நடவடிக்கைகளைப் புகுத்துவது அல்லது அப்பணியைச் செய்யவல்ல புதிய கருவியை உருவாக்குவதை "புதுமை' எனலாம்.

மனிதர்கள் ஒவ்வொருவரிடத்திலும் தனித்திறமைகள் உள்ளன. அவர்கள் தாங்கள் செய்யும் பணிகளினால் பல்வேறு புதுமைகளைப் புகுத்தும் வல்லமை பெற்றவர்களாக உள்ளனர். ஆனால், சில சமயங்களில் அவர்கள் செய்வது புதுமை தான் என்பது அவர்களுக்கே தெரிவதில்லை. இன்னும் சில சமயங்களில் அந்த நிறுவனம் பணியாளர்கள் உருவாக்கிய புதுமைகளை முறையாக அங்கீகரிப்பதில்லை.

பணியிடங்களில் புதுமைகளைப் புகுத்துவதன் மூலம் பணியை முடிக்க வேண்டிய நேரம் குறையும்; அப்பணிக்கு ஒதுக்கப்பட வேண்டிய நிதி குறையும்; பணியாளர்களின் செயல்திறன் அதிகரிக்கும்; நிறுவனத்தின் வருவாய் அதிகரிக்கும். எனவே, பணியாளர்கள் புதுமையைப் புகுத்தும் முயற்சியில் ஈடுபடுவதை நிறுவனங்கள் ஊக்குவிக்க வேண்டும்.

அதற்காக நிறுவனங்கள் கடைப்பிடிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள் சில உள்ளன:

முதலில் புதுமையைப் புகுத்த வேண்டியதற்கான தேவைகளைக் கண்டறிய வேண்டும். எந்தெந்த விவகாரங்களில் புதுமையைப் புகுத்தினால் நிறுவனத்துக்குப் பலன் கிடைக்கும் என்பதை முறையாக நிர்ணயிக்க வேண்டும். அதை நோக்கிப் பயணிப்பதற்கான செயல்திட்டத்தை வகுக்க வேண்டும்.

பணியாளர்கள் அனைவரும் தாங்கள் செய்யும் பணிக்கு பொறுப்பேற்றுக் கொள்வதை நிறுவனங்கள் ஊக்குவிக்க வேண்டும். பணியாளர்கள் பொறுப்பைத் தட்டிக் கழிக்க முயன்றால் அவர்கள் பணியில் முழு ஈடுபாடு செலுத்த மாட்டார்கள். தாங்கள் செய்யும் பணிக்கு தாங்களே முழுப்பொறுப்பாளி என்ற உணர்வு அவர்களைக் கவனத்துடன் செயல்பட வைக்கும். மேலும் அப்பணியை எளிதில் செய்து முடிப்பதற்கான புதுமைமிக்க யோசனைகளையும் பணியாளர்களுக்கு அளிக்கும்.

பணியாளர்கள் தங்கள் பணி சார்ந்த நுட்பங்களைக் கற்றுக் கொள்வதற்கான வாய்ப்புகளை நிறுவனங்கள் ஏற்படுத்தித் தர வேண்டும். தங்கள் பணிகள் தொடர்பான ஆழமான அறிவு இருந்தால் மட்டுமே, அவற்றில் புதுமைகளைப் புகுத்துவதற்கான யோசனைகள் தோன்றும். புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்வதற்கான களம் பணியாளர்களுக்குக் கிடைத்தால், அந்த விஷயங்களைத் தங்கள் பணியில் புகுத்துவதற்கு அவர்கள் முயல்வார்கள். அதன் மூலம் பல்வேறு புதுமைகள் பிறக்க வாய்ப்புகள் உள்ளன.

பணியாளர்களைத் தொடர்ந்து ஊக்கப்படுத்துவதற்கான சூழல், நிறுவனங்களில் காணப்பட வேண்டும். மாதந்தோறும் சிறந்த பணியாளரைத் தேர்வு செய்து சிறிய பரிசுகளை வழங்குவது பணியாளர்களுக்கிடையேயான போட்டி மனப்பான்மையை அதிகரிக்கும். அதேபோல், பணியாளர்கள் தங்கள் கருத்துகளை வெளிப்படையாக எந்தவித ஒளிவுமறைவின்றி தெரிவிப்பதற்கான வழிமுறைகள் நிறுவனங்களில் ஏற்படுத்தப்பட வேண்டும்.

பணியாளர்கள் தெரிவிக்கும் புதுமைமிக்க கருத்துகளுக்கு செவிசாய்த்து நிறுவனத்தின் அதிகாரிகள் அவற்றை முறையாக ஆய்வு செய்ய வேண்டும். அவற்றில் குறைபாடு ஏதேனும் இருந்தால் கூட முதலில் புதுமையைக் கண்டறிந்ததற்காக அவரைப் பாராட்ட வேண்டும். அதையடுத்து பணியாளர் தெரிவிக்கும் கருத்தில் உள்ள குறைகளைக் களைந்து அதில் மேலும் மாற்றங்களைப் புகுத்துவதற்கான யோசனைகளைப் பொறுமையுடன் வழங்க வேண்டும்.

நிறுவனத்தின் அனைத்துத் துறைகளும் நெருங்கிப் பணியாற்ற வேண்டும். அத்துறைகளின் பணியாளர்கள் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டியது மிகவும் அவசியம். அதன் மூலம் மற்ற துறைகளைச் சேர்ந்த பணியாளர்களிடமிருந்து புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்ளும் வாய்ப்பு உருவாகும். அது புதுமையைப் புகுத்துவதற்கான முக்கிய வழிகாட்டியாக இருக்கும்.
பணியாளர்கள் தெரிவிக்கும் யோசனைகள் சில சமயங்களில் தோல்வியில் முடியவும் வாய்ப்புள்ளது. வெற்றியைத் தோல்வியின் வழிகாட்டுதலில் மட்டுமே சென்றடைய முடியும். எனவே, அத்தகைய சமயங்களில் அந்தப் பணியாளர்கள் மேல் எரிச்சல் கொள்ளாமல் அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும். தவறு நேர்ந்த இடத்தை ஆய்வு செய்து அதைத் திருத்திக் கொள்வதற்கான வாய்ப்பைப் பணியாளர்களுக்கு வழங்குவது மிகவும் அவசியமானது.

நிறுவனத்தில் நிலவும் அத்தகைய பணிச்சூழல், புதுமைகளைப் புகுத்த வேண்டும் என்ற ஆர்வத்தை பணியாளர்களுக்கு மேலும் அதிகரிக்கும். நாள்தோறும் புதிய தொழில்நுட்பங்கள் முளைத்து வருகின்றன. அந்தத் தொழில்நுட்பங்களைப் பணியில் புகுத்துவதற்கான சூழல் பணியாளர்களுக்கு ஏற்படுத்தித் தரப்பட வேண்டும்.

இவையனைத்தும் புதுமையை ஏற்படுத்துவதற்கு வழிகோலும் அடிப்படையான விஷயங்கள். ஆனால், ஒவ்வொரு நிறுவனத்தின் செயல்பாடும் தேவைகளும் வெவ்வேறாக இருக்கலாம். எனவே, அவற்றைக் கருத்தில் கொண்டு பணியிடங்களில் புதுமையைப் புகுத்தத் தேவையான தனிப்பட்ட வழிமுறைகளை சூழலுக்கு ஏற்ப உருவாக்கிக் கொண்டு வெற்றி காணலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com