

கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தியுள்ள நிலையிலும் வீட்டிலிருந்தபடியே தமிழகம் முழுவதும் நாளொன்றுக்கு 500 பேருக்குத் தொழிற்கல்வி கற்றுத் தந்து சாதனை படைத்து வருகிறார் ஆர்.கே. ராஜேஷ் கண்ணன்.
இதன் மூலம், இளைஞர்கள், இளம் தொழில்முனைவோர், தொழிற்கல்வி மாணவர்கள் தொழிற்சாலை பயிற்றுநர்கள், தொழிற்கூட பணியாளர்கள் என ஆயிரக்கணக்கானோர் ஒவ்வொரு வகுப்பிலும் பயன்பெற்று வருகின்றனர்.
திருச்சியைச் சேர்ந்த ராஜேஷ் கண்ணன், பிஇ மெக்கானிக்கல் என்ஜினியரிங் பயின்று, எம்இ வெல்டிங் பிரிவில் பட்டம் பெற்றவர். இதேபிரிவில், வெல்டிங் ஆய்வாளர் சான்றிதழ் படிப்பையும் முடித்துள்ளார். திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் வெல்டிங் தொழில்நுட்பம் குறித்து பிஹெச்டி படித்து வருகிறார்.
இவரது தந்தை என். கனகசபாபதி நடத்தி வரும், ஆர்கே மெட்டல்ஸ் எனும் நிறுவனத்தையும் கல்லூரிக் காலத்தில் இருந்தே கவனித்து வருகிறார். தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழத்தின் அங்கீகரிக்கப்பட்ட வெல்டிங் தொழில்நுட்பத்துக்கான பயிற்சி மையத்தையும் நிர்வகித்து வருகிறார்.
அசோக் லேலண்ட், குளோபல் டிவிஎஸ் உள்ளிட்ட பெருநிறுவனங்களுக்கான வெல்டிங் தொழிநுட்ப ஆலோசகராகவும், பாரதமிகு மின் நிறுவனம், ரானே, பாதுகாப்புத்துறைக்கான தொழிற்சாலை (ஹெச்ஏபிபி) ஆகியவற்றில் வெல்டிங் பிரிவுக்கான பதிவு பெற்ற பணிமேற்கொள்பவராகவும் உள்ளார்.
தற்போதைய கரோனா ஊரடங்கு காலத்தில், வீட்டிலேயே முடங்கியுள்ள இளைஞர்கள், தொழில் முனைவோர், ஐடிஐ மாணவர்கள், அரசினர் தொழிற்பயிற்சி மைய ஆசிரியர்கள், தொழில்துறையினர், தொழிற்சாலைகளில் வேலை பழகுநராக உள்ளோருக்கு வெல்டிங் தொழில்நுட்பம் குறித்து பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறார். மத்திய அரசின் தொழில் திறன்மேம்பாட்டுப் பயிற்சி மையமும், இவரது சேவையை ஊக்குவித்து 16 தலைப்புகளின் கீழ் தொடர் பயிற்சி வகுப்பு நடத்த பணித்துள்ளது.
இதுதொடர்பாக, ராஜேஷ் கண்ணனிடம் பேசினோம்...
""தேசிய திறன் பயிற்சி நிறுவனத்தின் சார்பில், ஊரடங்கில் இளைஞர்களுக்கு பயனுள்ள பயற்சி வகுப்பு நடத்த கோரியதை ஏற்று இந்த முயற்சியைத் தொடங்கினேன். தமிழகம் முழுவதும் உள்ள பலரையும் இணையம் மூலம் இணைத்து தொழிற்கல்வி அளித்து வருகிறேன்.
ஆங்கிலம், தமிழ் என இருமொழிகளிலும் ஒலி, ஒளிக் காட்சிகளைப் பதிவேற்றம் செய்து சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்து பயிற்றுவித்து வருகிறேன். தினந்தோறும் காலை 10 மணி முதல் 11.30 மணி வரை இந்த பயிற்சி வகுப்பை நடத்தி வருகிறேன். கடந்த ஏப்ரல் 15 - ஆம் தேதி தொடங்கிய பயிற்சி வகுப்பில் வெல்டிங் செயல்முறை முன்னுரை விளக்கம், முக்கியமான பற்ற வைப்பு வகைகள், திடநிலை வெல்டிங் செயல்முறைகள், வெல்டிங் கணுக்கள், நிலைகள், மற்றும் சின்னங்கள், அடிப்படை உலோகம் மற்றும் பொருள் அறிவியல், வெல்டிங் மின்முனைகள் மற்றும் அதன் வகைப்பாடு, வெப்பசிகிச்சை செயல்முறைகள், அழிவில்லாச் சோதனை செயல்முறைகள், வெல்டிங் குறைபாடுகள், காரணம் மற்றும் பழுது சரி பார்த்தல் உள்ளிட்ட பயிற்சி வகுப்புகளை வெற்றிகரமாக முடித்துள்ளேன்.
அழிவு சோதனை செயல்முறைகள், வெல்டிங் மின்னோட்டம் மற்றும் மின்னழுத்தம் செயல்பாடுகள், வெல்டிங் குறியீடுகள் மற்றும் தரநிலைகள், கட்டுருவாக்கம் அம்சங்கள், வெல்டிங் செயல்முறை விவரக்குறிப்பு மற்றும் செயல்முறை தகுதி பதிவு, வெல்டிங் தொழில் சுகாதார அம்சங்கள், வெல்டிங் பாதுகாப்பு,பொருளாதாரம் மற்றும் உற்பத்தித்திறன் குறித்த பயிற்சி வகுப்புகளைத் தொடர்ந்து வருகிறேன்.
முதலில் ஒரு வகுப்புக்கு 100 முதல் 150 பேர் வந்தனர். இப்போது, மாணவர்கள், ஆசிரியர்கள், தொழில்முனைவோர், பயிற்றுநர்கள், பொறியாளர்கள், தொழிலக வெல்டிங் பிரிவு அலுவலர்கள் என ஒவ்வொரு வகுப்பிலும் 500 பேர் வரை கல்வி கற்கின்றனர்.
அதிகபட்சமாக 500 பேர் மட்டுமே இந்த முறையில் பயில முடியும். ஒவ்வொரு பயிற்சியிலும் ஏற்கெனவே இணைந்தவர்கள், புதிதாக இணைபவர்கள் என முதலில் வரும் 500 பேருக்கு வாய்ப்புக் கிடைக்கிறது. ஆயிரக்கணக்கானோர் பயன்பெற்றுள்ளனர். ஊரடங்கு காலத்தில் தமிழக தொழில்துறையில் வெல்டிங் பிரிவில் மட்டுமே இத்தகைய முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது.
முதல் ஒரு மணிநேரம் வகுப்பு எடுக்கப்படும். 15 நிமிடஙள் முதல் 20 நிமிடங்களுக்கு சந்தேகங்கள், கேள்விகளுக்கு விளக்கம் அளிக்கப்படுகிறது. இதற்கு நல்ல வரவேற்பும் கிடைத்துள்ளது. கடந்த ஏப்.15-ஆம் தேதி தொடங்கினோம். மே 10-ஆம் தேதி வரையிலும் வகுப்புகள் உள்ளன. இதேபோன்று, பெருநிறுவனங்களும் தங்களது ஊழியர்களுக்கு வகுப்புகள் நடத்த கோரியுள்ளன. முடிந்தவரை உதவி வருகிறேன்'' என்றார் ராஜேஷ் கண்ணன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.