தீப்பெட்டி அளவே உள்ள இசிஜி கருவி!
உத்தராஞ்சல் மாநிலம் டேராடூனைச் சேர்ந்தவர் ரஜத் ஜெயின். 25 வயது இளைஞர். 2016 - ஆம் ஆண்டு ஓர் அதிர்ச்சியான செய்தியால் அவர் நிலைகுலைந்து போனார்.


உத்தராஞ்சல் மாநிலம் டேராடூனைச் சேர்ந்தவர் ரஜத் ஜெயின். 25 வயது இளைஞர். 2016 - ஆம் ஆண்டு ஓர் அதிர்ச்சியான செய்தியால் அவர் நிலைகுலைந்து போனார். அவருடைய உயிர் நண்பன் திடீரென மாரடைப்பால் மரணமடைந்த செய்திதான் அது. இதய நோய் அவருடைய நண்பருக்கு இருந்திருப்பது அதற்கு முன்பு யாருக்கும் தெரிந்திருக்கவில்லை.
"" என் நண்பனைப் போல பலரும் இதய நோய் இருப்பது தெரியாமலேயே வாழ்ந்து, திடீர் தாக்குதலில் இறந்து போகிறார்கள். இதயநோயைக் கண்டறிவதற்கான ஒரு சிறிய கருவி அவர்களிடம் இருந்திருந்தால், இப்படி இறந்து போயிருக்கமாட்டார்கள் என்று நானும் நண்பர்களும் நினைத்தோம். அப்படிப்பட்ட ஒரு கருவியை நாம் உருவாக்கினால் என்ன என்ற எண்ணம் எங்களுக்கு ஏற்பட்டது.
இதய நோய் இருப்பதைத் தெரிந்து கொள்ள உதவும் கருவி இதய நோயாளிகளிடம் இல்லை என்பதால் நோய் அவர்களுக்கு இருப்பது தெரியாமல், அதற்கான மருத்துவம் செய்யாமல் நோயாளிகள் இறந்து போகிறார்கள். அவர்கள் இருக்குமிடத்தில் இதய நோயைத் தெரிந்து கொள்வதற்கான மருத்துவமனைகளோ, ஆய்வுக் கூடங்களோ இல்லாவிட்டால், இதயநோய் குறித்து தொடர்ச்சியான கண்காணிப்பை அவர்களால் மேற்கொள்ள முடிவதில்லை. இதனால் நோயின் பாதிப்பு அதிகமாகிவிடுகிறது. இதயநோயின் தொடக்க கட்டத்திலேயே அது இருப்பதைத் தெரிந்து கொள்ளும் பரிசோதனைகளை அவர்கள் செய்திருந்தால், நோயின் பிடியிலிருந்து அவர்கள் மீண்டிருக்க முடியும்.
நாங்கள் வாழும் டேராடூன் பகுதி, மலைப்பகுதி. இங்கு வாழ்பவர்கள், ஓர் ஆரம்ப சுகாதார நிலையத்துக்குப் போக வேண்டும் என்றால் கூட 40 கி.மீ. தூரம் வரை செல்ல வேண்டும். அப்படியே அவர்கள் ஏதேனும் வாகன ஏற்பாடு செய்து அந்த ஆரம்ப சுகாதார நிலையத்துக்குச் சென்றால், அங்கு இதயநோயின் தன்மையைக் கண்டறிவதற்கான இசிஜி கருவி இருக்க வேண்டும்.
அந்தக் கருவி அங்கு இல்லாவிட்டால், இதய நோயின் பாதிப்பு எந்த இளவுக்கு இருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ள முடியாது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் அங்கு இதய நோய்க்கான மருத்துவம் செய்யும்போது பிழைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
இந்த பிரச்னைகளுக்கெல்லாம் ஒரே தீர்வு, எல்லாரும் இதய நோய்களைப் பரிசோதித்துக் கொள்வதற்கான விலை குறைவான ஓர் இசிஜி கருவிதான் என்று நினைத்தோம். இதயநோயாளிகள் எல்லாரிடமும் அது இருக்க வேண்டும்; காய்ச்சலைக் கண்டுபிடிப்பதற்கான தெர்மா மீட்டரைப் போல இதயநோயைக் கண்டுபிடிப்பதற்கான எளிய கருவியாக அது இருக்க வேண்டும் என்று நினைத்தோம்'' என்கிறார் அவர்.
இந்த நோக்கத்துடன் ரஜத் ஜெயினும் அவருடைய நண்பர்கள் செளரப் படோலா, சபித் ரவாத், நிதின் சந்தோலா ஆகிய மூவரும் இணைந்து சன்ஃபாக்ஸ் என்ற ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் ஒன்றைத் தொடங்கினார்கள். அவர்கள் நால்வரும் பொறியியலில் பட்டம் பெற்றவர்கள்.
இந்த நிறுவனத்தின் மூலமாக இவர்கள் கண்டுபிடித்துள்ள கருவிதான் ஸ்பான்டன் இசிஜி கருவி. இது தீப்பெட்டியின் அளவுதான் உள்ளது. உங்களுடைய இதயத்துக்கும், செல்லிடப் பேசிக்கும் இணைப்பை ஏற்படுத்தித் தரும் சந்திப்பு மையமாக இந்தக் கருவி, இருக்கிறது.
முதலில் செல்லிடப்பேசியில் ஸ்பான்டன் இசிஜி என்ற செயலியைப் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.
இந்த கருவியில் இருந்து வரும் ஒரு வயர் உங்கள் செல்லிடப் பேசியில் இணைக்கப்பட வேண்டும். இன்னொரு வயரில் மூன்று மின்முனைகள் (எலக்ட்ரோடுகள்) இருக்கும். அந்த மூன்று மின்முனைகளும் நோயாளின் மார்புப் பகுதியில் பொருத்தப்பட வேண்டும்.
பொருத்தப்பட்ட சிறிது நேரத்திலேயே அது இதயத் துடிப்பை அளக்கத் தொடங்கிவிடும். பின்பு செல்லிடப் பேசியில் உங்கள் இதயம் தொடர்பான தகவல்கள் பளிச்சிடும்.
செல்லிடப் பேசி திரையில் சிவப்பு நிறம் தோன்றினால், நீங்கள் உடனடியாக அருகிலுள்ள இதய நல மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும். மஞ்சள் நிறம் திரையில் தோன்றினால், உங்கள் இதயம் சரிவர இயங்கவில்லை என்று பொருள். பச்சை நிறம் திரையில் தோன்றினால் இதயம் நல்லபடியாக இருக்கிறது என்று தெரிந்து கொள்ளலாம்.
இந்தச் செயலி "எட்ஜ் பேஸ்டு ஏஐ டெக்னாலஜி' என்ற அடிப்படையில் இயங்குகிறது. இது இயங்க இணையத் தொடர்பு இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை.
""இந்தக் கருவியை பொறியியல் படித்த நாங்கள் உருவாக்கினோம் என்றாலும், எங்களுக்கு உதவியாக பல மூத்த மருத்துவர்கள் இருந்தனர். இதயத் துடிப்பு குறித்த பல்வேறு தகவல்களை அவர்களிடம் இருந்து தெரிந்து கொண்டோம். எங்களுடைய இந்தக் கருவி இதய நோய் குறித்த தகவல்களை ஒரு சில விநாடிகளுக்குள் தெரிவிக்கும்.
இதயத்தின் செயல்பாடுகளில் ஏற்படும் 21 விதமான குறைபாடுகளைப் பற்றி 99.7 சதவீதம் துல்லியமாகக் கூறிவிடும். இதயத்தின் செயல்பாடுகளைப் பற்றி இந்த ஸ்பான்டன் இசிஜி கருவி சொல்லும் தகவல்களை டாக்டர்கள் மட்டுமல்ல, யார் வேண்டுமானாலும் எளிதில் புரிந்து கொள்ள முடியும்.
2017 - இல் இந்தக் கருவியின் மாதிரி வடிவத்தை உருவாக்கினோம். இப்போது
1000 -க்கும் மேல் தயாரிக்கப்பட்டுவிட்டது.
10 ஆயிரம் நோயாளிகள் நாங்கள் தயாரித்துள்ள இந்தக் கருவியின் மூலம் சோதனை செய்யப்பட்டுள்ளார்கள். 140-க்கும் மேற்பட்ட இதயநோயாளிகள் முன்கூட்டியே இந்தக் கருவியின் மூலம் தங்களுடைய நோயின் தன்மையைத் தெரிந்து கொண்டதால், அவர்கள் காப்பாற்றப்பட்டிருக்கிறார்கள். அதுவும் இந்த கரோனா தொற்று காலத்தில், பலரைக் காப்பாற்ற எங்கள் கருவி உதவி இருக்கிறது'' என்கிறார் பெருமையுடன் ரஜத் ஜெயின்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...