விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

கரோனா கழிவுகளிலிருந்து செங்கல்!

கரோனா தீநுண்மி தொற்று உலகையே கலங்க வைத்திருக்கிறது.  உலகம் முழுவதும் திடீரென முகக்கவசங்களின் தேவை அதிகரித்துவிட்டது.

News image
Updated On :1 செப்டம்பர் 2020, 12:30 am

ந. ஜீவா


கரோனா தீநுண்மி தொற்று உலகையே கலங்க வைத்திருக்கிறது. உலகம் முழுவதும் திடீரென முகக்கவசங்களின் தேவை அதிகரித்துவிட்டது. கரோனா நோயாளிகளுக்கு மருத்துவம் செய்யும் மருத்துவப் பணியாளர்கள், தங்களைப் பாதுகாத்துக் கொள்ள முகக்கவசங்கள் மட்டுமல்லாமல், உடல் முழுக்க மறைத்துக் கொள்ளும் கவுன், தலைமறைப்பான் போன்றவற்றையும் அணிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. கரோனாவிலிருந்து பாதுகாத்துக் கொள்ள பயன்படுத்தப்படும் பாதுகாப்புப் பொருள்கள் பல, பயன்படுத்தியவுடன் தூக்கியெறியப்படுபவையாக இருக்கின்றன.

கரோனா தீநுண்மி மனிதர்களை கடுமையாகப் பாதிப்பதுடன் கூட, இப்படித் தூக்கி வீசப்படும் பொருள்களினால் சுற்றுச்சூழலையும் கடுமையாகப் பாதிக்கும் நிலை ஏற்பட்டுவிட்டது.

மத்திய மாசுக்கட்டுப்பாட்டு கழகம் அளித்த தகவல்களின்படி நமது நாட்டில் கோவிட் -19 நோய் தொடர்புடைய பயோ மெடிகல் கழிவுப் பொருள்கள் ஒரு நாளைக்கு சுமார் 101 மெட்ரிக் டன் பூமியில் கொட்டப்படுகின்றன. இவை தவிர, வழக்கமான மருத்துவக் கழிவுகள் ஒவ்வொரு நாளும் 609 மெட்ரிக் டன் பூமியில் கொட்டப்படுகின்றன. இதனால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பு ஒருபுறம். இன்னொருபுறத்திலோ இதனால் ஏற்படக் கூடிய பல நோய்களும், தொற்றுகளும் அதிகரிக்கும் வாய்ப்பும் அதிகம்.

இந்நிலையில்தான் இப்படித் தூக்கியெறியப்பட்ட கழிவுப் பொருள்களை "பயன்படுத்தப்படும் பொருளாக' மாற்றினால் என்ன என்று பினிஷ் தேசாய் என்ற குஜராத்தைச் சேர்ந்த 27 வயது இளைஞருக்குத் தோன்றியிருக்கிறது. அதன் விளைவாக உருவானதுதான் பி - பிளாக் 2 எனப்படும் கட்டடம் கட்டப் பயன்படுத்தப்படும் செங்கற்கள்.

இந்த பினிஷ் தேசாய் ஏற்கெனவே "ரீ சைக்கிள் மேன்' என்று எல்லாராலும் அறியப்பட்டவர். "ஈகோ எக்லெக்டிக் டெக்னாலஜிஸ்' என்ற நிறுவனத்தை நடத்தி வருபவர். 57 பல்வேறு கழிவுப் பொருள்களிலிருந்து 150 பயன்படக் கூடிய பொருள்களை இந்த நிறுவனம் மூலம் உருவாக்கி வருகிறவர்.

காகித ஆலை கழிவுகளிலிருந்து பி - பிளாக் என்ற செங்கல்லை அவர் ஏற்கெனவே தயாரித்து வந்தார்.

""முகக்கவசங்களைப் பயன்படுத்துவது இப்போது புதிய நடைமுறையாகிவிட்டது. மருத்துவப் பணியாளர்கள் ஒருமுறை பயன்படுத்திவிட்டுத் தூக்கியெறியும் முகக்கவசங்களைப் பயன்படுத்துகிறார்கள். பூமி கழிவுகளால் நிரப்பப்படுகிறது. நான் ஏற்கெனவே இதுபோன்ற கழிவுப் பொருள்களில் இருந்து செங்கற்களைச் செய்து வந்ததனால், இந்த மருத்துவ பாதுகாப்பு கழிவுப் பொருள்களைப் பயன்படுத்தி செங்கற்களை உருவாக்குவது எளிதாக இருந்தது'' என்கிறார் பினிஷ் தேசாய்.

இவர் உருவாக்கிய இந்த பி-பிளாக் 2 செங்கல்லில் 52 சதவீதம் துண்டுகளாக்கப்பட்ட முகக்கவசங்கள், கவுன்கள், தலையில் அணியும் கவசங்கள் போன்ற மருத்துவப் பாதுகாப்புப் பொருள்கள் இருக்கின்றன. 45 சதவீதம் காகிதக் கழிவுகள் இருக்கின்றன. 3 சதவீதம் இவற்றை ஒட்டிச் செங்கல்லாக மாற்றக் கூடிய பசைப் பொருள்கள் உள்ளன.

ஒவ்வொரு செங்கல்லும் 12 அங்குல நீளம், 8 அங்குல அகலம், 4 அங்குல கனம் உள்ளவையாக இருக்கிறது. ஒரு சதுர அடி பரப்பளவு செங்கல்லை உருவாக்க, 7 கிலோ பயோ மெடிகல் பொருள்கள் பயன்படுகின்றன. இது ஏற்கெனவே காகிதக் கழிவுகளால் செய்யப்பட்ட பி - பிளாக் செங்கல்லை விட எடை குறைவாக இருக்கிறது. வலிமையாக இருக்கிறது. இந்த செங்கல் தண்ணீரில் கரையாது. தீயில் எரியாது.

""இந்த செங்கல்லைத் தயாரித்தவுடன் தேசிய அளவிலான ஆய்வகத்தில் சோதனை செய்து பார்க்கவே விரும்பினேன். ஆனால் பொது முடக்கம் காரணமாக அந்த ஆய்வகங்களை அணுக முடியவில்லை. ஆனால் அரசு அங்கீகாரம் பெற்ற ஆய்வகங்களில் இந்த செங்கல் சோதனை செய்து பார்க்கப்பட்டது. வழக்கமான எல்லாச் சோதனைகளிலும் தேர்வு பெற்றதுடன், தரத்திலும் உயர்வானதாகக் கண்டறியப்பட்டது'' என்கிறார் பினிஷ் தேசாய்.

இந்தச் செங்கல்லைப் பெரிய அளவில் தயாரிக்க, தூக்கி வீசப்படும் மருத்துவப் பாதுகாப்புப் பொருள்கள் அதிக அளவில் தேவை. அவற்றைச் சேகரிக்க ஈகோ பின்ஸ் என்ற குப்பைத் தொட்டிகள் ஒவ்வொரு மருத்துவமனை அருகிலும் வைக்கப்படுகின்றன. மருத்துவமனைகள் மட்டுமல்ல, முகக்கவசம் போன்ற பாதுகாப்புப் பொருள்களை அதிகம் பயன்படுத்தும் காவல்நிலையங்கள், மக்கள் குடியிருப்புகள் ஆகியவற்றின் அருகிலும் வைக்கப்படுகின்றன. இதில் போடப்படும் கழிவுகள் நிறைந்துவிட்டதைத் தெரிவிக்கும் குறியீடுகள் தொட்டியில் இருக்கும். ஒரு தொட்டியில் கழிவுப் பொருள்கள் நிறைந்தவுடன் அதை 72 மணி நேரத்துக்கு யாரும் தொட மாட்டார்கள். அதற்குப் பிறகு இந்தக் கழிவுப் பொருள்களில் உள்ள வைரஸ் மற்றும் கிருமிகள் நீக்கப்படுகின்றன. பிறகு அவை சிறு சிறு துண்டுகளாக்கப்பட்டு செங்கற்கள் செய்ய பயன்படுத்தப்படுகின்றன. இந்தச் செங்கற்கள் கட்டடப் பணிகளுக்குப் பயன்படுத்தப்படுகின்றன.

""அதிக செலவில்லாத , இடம் மாற்றக் கூடிய தனிமைப்படுத்தப்பட்ட மருத்துவப் பிரிவுகளை இந்த செங்கற்களைப் பயன்படுத்தி உருவாக்குவதே எனது அடுத்த திட்டம். நாடு முழுக்க அவற்றைப் பயன்படுத்தும் வகையில் அதிக அளவில் உருவாக்க வேண்டும். கரோனா காலத்தில் மட்டுமல்ல, எதிர்காலத்திலும் கூட இப்படிப்பட்ட நெருக்கடியான நிலை ஏற்படும்போது அவை பயன்படும். இந்தச் செங்கல்லைப் பயன்படுத்தி பள்ளிகள், கட்டடங்கள், டாய்லெட்கள் என எதை வேண்டுமானாலும் கட்டலாம்'' என்கிறார் பினிஷ் தேசாய்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.