இணைய வெளியினிலே...
பசித்த வயிறு, பணமில்லாத வாழ்க்கை, பொய்யான உறவு...இவை கற்றுக்கொடுக்கும் பாடங்களைவேறு யாராலும் எதனாலும் கற்றுக் கொடுக்க முடியாது.


யாருக்கோ பேய் பிடித்ததற்காக,
சம்பந்தமே இல்லாமல்
ஆணியால் அறையப்பட்ட
வேப்பமரத்தைப் போலவேதான்...
யாரிடமெல்லாமோ காட்ட வேண்டிய
கோபங்களுக்கு தன் செவியை
தாராளமாய்த் திறந்துவிட்டு
வலி ஏந்திக் கொள்கிறது நேசம்.
-ரம்யா அருண் ராயன்
பூவை ஏந்துவது எப்படி?
அவர் சொல்லித் தந்தார்...
பூவைச் சூடுவது எப்படி?
இவர் சொல்லித் தருகிறார்...
பூவாக மலர்வது எப்படி?
யார் சொல்லித் தருவார் எனக்கு...
வண்ணதாசன்
பசித்த வயிறு, பணமில்லாத வாழ்க்கை, பொய்யான உறவு...
இவை கற்றுக்கொடுக்கும் பாடங்களை
வேறு யாராலும் எதனாலும் கற்றுக் கொடுக்க முடியாது.
ப்ரியா மனோகரன்
சிறகு முளைத்துக் கொள்கிறது
எனக்கு...
வளி கிழித்து
வான் முட்டி
கிளையமரும்
அந்தப் பறவையைப் பார்த்து
-நா.வே.அருள்
எங்கு சுற்றியாவது கடலைச்
சேர்ந்துவிடத் துடிக்கிறது ஆறு.
வற்ற முடியாமல் ஆவியாகி... விண்ணை அடைகிறது.
கடல் வெளியிலோ...
மழையாகவோ...
இருந்த இடம் நகராத
கூழாங்கல் மட்டும் -
நீரோட்டம் தாண்டியும்
வெட்டவெளியிலும் கண்டடைகிறது,
தனக்குள்ளே தன் வீட்டை.
லக்ஷ்மிவ்வா
மரத்தால் ஒதுக்கி விடப்பட்ட
சுள்ளிகளைக் கொண்டுவந்து
கூடு கட்டுகிறது பறவை...
அதே மரத்தின் கிளையில்!
மாயோன்
வெற்றியும் சரி,
தோல்வியும் சரி, முடிவல்ல.
இவற்றில் என்ன பாடம்
கற்கிறோம் என்பதே
நிதர்சனம் !
கடைநிலை ஊழியன்
பறவை ஸ்நேகிதம்இரண்டு வருடங்கள் இருக்குமா... இருக்கலாம்.
பறவைகளுடனான என் சிநேகிதம்.
""காலை வேளைல என்ன பண்ணுற?''
""7 மணி ஆபிசுக்கு கிளம்புற அவசரத்துல இருப்பேன்''
""மொட்டை மாடி இருக்கா?''
""ம்''
""பறவைகள் வருமா?''
""காக்கா வரும்''
""உனக்கு அதுவே அதிகம்''
""கலாய்ச்சுட்ட''
""சரி... கௌம்புறதுக்கு முன்னால கொஞ்சம் சாதம்... இல்ல அரிசி... வாயகன்ற பாத்திரத்துல தண்ணி வச்சுட்டு போயேன்''
""எதுக்கு?''
""சொன்னா செய்யேன்''
செய்தேன். ஓரிரு காக்கைகள் என்னை உற்றுப் பார்த்தன.
என் மீதான அவநம்பிக்கை அவற்றின் கண்களில். நான் நகர்ந்ததும் பறந்து வந்து முகர்ந்தன. கொத்தி கீழே தள்ளியது ஒன்று.
சொன்னேன் அவளிடம்.
""நீ சொன்னேன்னு செஞ்சேன்... எனக்கு நோஸ் கட்''
""பரவாயில்ல... தொடர்ந்து செய்''
இன்று... இரு வருடங்களுக்குப் பின்... எனக்கு எத்தனை பறவை ஸ்நேகிதங்கள்... சிட்டுக் குருவிகள்... புறாக்கள்...
காகங்கள்...
வெளியூருக்குப் போகும் நாட்களில் மனசு தவித்துப்
போகிறது.
திரும்பி வந்ததும்... மொட்டை மாடிக்கு ஓடத் தோன்றுகிறது.
முகம் திருப்பி கோபமாய் அமர்ந்திருக்கும் பறவைக்கு அருகே பறந்து போய் அமர்ந்து கெஞ்சத் தோன்றுகிறது.
அவை உணர்வுபூர்வமானவை. நம்மை நேசிப்பதை மிக நிதானமாய்ச் சொன்னாலும்... அந்த நேசம் அப்புறம் எந்த
காரணத்தினாலும் மாறுவதேயில்லை.
இப்போதும் என்னுள் அதே கோபங்கள்... குமுறல்கள்... ஆனந்தம்... எல்லா உணர்வுகளும்தான். ஆனால் அவற்றைப் பகிர விண்வெளி சிநேகிதங்கள் உண்டு இப்போது என்னருகே.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...