விண்வெளித் திட்டங்கள் - 2021

சர்வதேச அளவில் கடந்த ஆண்டில் ஏராளமான விண்வெளித் திட்டங்கள் வெற்றியடைந்த நிலையில், நிகழாண்டும் (2021) பல விண்வெளித் திட்டங்கள் ஆய்வுப் பணிகளைத் தொடங்கவுள்ளன.
விண்வெளித் திட்டங்கள் - 2021
Updated on
1 min read


சர்வதேச அளவில் கடந்த ஆண்டில் ஏராளமான விண்வெளித் திட்டங்கள் வெற்றியடைந்த நிலையில், நிகழாண்டும் (2021) பல விண்வெளித் திட்டங்கள் ஆய்வுப் பணிகளைத் தொடங்கவுள்ளன. அந்த வகையில், அமெரிக்கா, சீனா, ஐக்கிய அரபு அமீரகம்  ஆகிய நாடுகள் செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பியுள்ள விண்கலங்கள் குறிப்பிடத்தக்கவை.

பெர்செவரன்ஸ்: அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா, செவ்வாய் கிரகத்துக்கு கடந்த ஆண்டு அனுப்பிய விண்கலம் பெர்செவரன்ஸ். செவ்வாய்க்கு நாசா இதுவரை அனுப்பியவற்றில் 5-ஆவது விண்கலமான பெர்செவரன்ஸ் செவ்வாயில் வரும் பிப்ரவரி 18-ஆம் தேதி தரையிறங்கி,  தனது  ஆய்வுப் பணியைத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளனவா என்பதைக் கண்டறிவதுதான் இதன் பிரதான பணி. மேலும், அக்கிரகத்திலிருந்து பாறை மற்றும் மண் மாதிரிகளைச் சேகரித்துக் கொண்டு பூமிக்குத் திரும்புவது கூடுதல் பணியாகும். இந்த விண்கலத்துடன் ஒரு சிறிய ஹெலிகாப்டர் இணைக்கப்பட்டுள்ளது. விண்கலம் தரையிறங்கியதும் அந்த ஹெலிகாப்டர் விண்கலத்திலிருந்து பிரிந்து கிரகத்தில் பறந்து சென்று ஆய்வில் ஈடுபடும். அத்திட்டம் வெற்றி பெற்றால் "வேற்றுக் கிரகத்தில் பறந்த முதல் ஹெலிகாப்டர்' என்ற பெருமை அதற்குக் கிடைக்கும்.

தியான்வென்-1: சீனா கடந்த ஜூலையில் அனுப்பிய தியான்வென்-1 விண்கலம் செவ்வாய் கிரகத்தில் பிப்ரவரியில் தரையிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. செவ்வாயில் தண்ணீர் உள்ளதா என்பதைக் கண்டறிவதே இதன் பிரதான நோக்கம். அக்கிரகத்தில் நீண்ட தரைப்பரப்பைக் கொண்டுள்ள வடபகுதியில் இந்த விண்கலம் தரையிறங்கியதும், அதன் ஆய்வு வாகனம் தனது ஆய்வைத் தொடங்கும்.

ஹோப்: ஐக்கிய அரபு அமீரகம் கடந்த ஜூலையில் செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பிய "ஹோப்' விண்கலமும் பிப்ரவரியில் தரையிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. செவ்வாய் கிரகத்தின் வளிமண்டலம் மற்றும் அதன் அடுக்குகள் குறித்து முழுமையான ஆய்வை நடத்துவதற்காக இந்த விண்கலம் அனுப்பப்பட்டுள்ளது.

கிரக பாதுகாப்புத் திட்டம்: வரும் ஜூலையில் கிரக பாதுகாப்புத் திட்டம் என்ற திட்டத்தை நாசா செயல்படுத்தவுள்ளது. சூரிய மண்டலத்தில் கிரகங்களைப் போலவே ஏராளமான சிறுகோள்கள், விண்கற்களும் சூரியனைச் சுற்றி வருகின்றன. அவ்வாறு ஏதாவது சிறுகோள் பூமியின் மீது மோதும் சூழ்நிலை ஏற்பட்டால், அதைக் கண்டறிந்து அச்சிறுகோள் அல்லது விண்கற்களை திசைதிருப்பிவிடுவதே இத்திட்டம். இதன்படி, பூமிக்கு அருகே சுற்றி வரும் டிடிமோஸ் என்ற சிறுகோள் மீது நாசா அனுப்பும் விண்கலம் அதிவேகமாக மோதி, அதன் சுற்றுவட்டப் பாதையைத் திசைதிருப்பிவிடுவது குறித்து சோதித்துப் பார்க்கப்படும். 

இச்சிறுகோளால் பூமிக்கு எந்த ஆபத்தும் இல்லை எனவும், சோதனைக்காகவே இச்சிறுகோள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் நாசா தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com