வித்தியாசமான பணி!

மருந்தியல் துறை மிக வேகமாக வளர்ந்து வரும் தொழில்துறையாக இருந்து வருகிறது.
வித்தியாசமான பணி!

மருந்தியல் துறை மிக வேகமாக வளர்ந்து வரும் தொழில்துறையாக இருந்து வருகிறது. வேதியியல் பிரிவில் ஆர்வமுள்ளவர்கள் மற்றும் மக்கள் ஆரோக்கியமாக, நலமுடன் இருக்க வேண்டும் என்று விரும்புபவர்கள் இத்துறையை தேர்வு செய்து படிக்கலாம். சமூகத்தில் மருந்தாளுநர்களுக்கு என்று தனி மரியாதை எப்போதும் இருந்து கொண்டுதான் இருக்கிறது.  

 மக்களுடன் நேரடியாக தொடர்பில் இருக்க வேண்டும்; அவர்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என நினைப்பவர்கள் மருந்தியல்துறை படிப்புகளைப் படித்து மருந்தாளுநராக பணியாற்றினால் மிக சிறந்த எதிர்காலத்தை உருவாக்கிக் கொள்ள முடியும்.  

சுகாதார கட்டமைப்பிற்குள் மருந்தாளுநர்களின் பணி மிக முக்கியமானது. மருத்துவர்கள் வழங்கும் மருந்து சீட்டிற்கு மருந்து வழங்குவது அல்லது கவுண்டர் சேல் எனப்படும் கடைகள் மூலம் மருந்துகளை விற்பது என எதுவாக இருந்தாலும் குறிப்பிட்ட மருந்தை எந்த அளவில், எந்த நேரம் சாப்பிட வேண்டும்? எப்படி எல்லாம் சாப்பிடவேண்டும்  என்பதைத் தெளிவாக கூறும் மிக பெரும் பொறுப்பு மருந்தாளுநர்களுக்கு இருக்கிறது.   மருத்துவமனைகளில் பணியாற்றும் மருந்தாளுநர்கள் சில மருந்துகளுக்கு சரியான அளவை தீர்மானித்து நோயாளிகளுக்கு தெரிவிக்கக் கூட முடியும். 

மருந்தாளுநர்கள் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சிறிய கிராமம் என்றாலும் சரி, பெரிய நகரம் என்றாலும் சரி  மருந்தகங்கள் இல்லாத தெருக்களே இல்லை என்று சொல்லுமளவிற்கு மருந்தகங்கள் பெருகிவிட்டன. 

இந்தியா முழுவதும் குறிப்பிட்ட பிராண்டட் நிறுவனங்கள், நகரங்கள் தோறும் தங்கள் கிளையை உருவாக்கி நடத்தி வருகின்றன. 

அத்தனை மருந்தகங்களுக்கும் தேவைப்படும் மருந்தாளுநர்கள் கிடைப்பதில் சிரமம் நிலவத்தான் செய்கிறது. எனவே மருந்தியல்துறை படிப்பு படித்தவர்களுக்கு சிறப்பான எதிர்காலம் காத்திருக்கிறது. 

மருத்துவத்துறையில் மருத்துவர்கள், செவிலியர்கள், மற்ற மருத்துவ நிபுணர்கள் போல அல்லாமல் மருந்தாளுநர்களின் பணி மிகவும் நெகிழ்வுத் தன்மையானது. மருந்தாளுநர்கள் 24 மணி நேரமும் பணி செய்ய வேண்டிய அவசியம் இல்லை. அவசர நிலைமையை சமாளிக்க வேண்டிய தேவை இல்லை. ஷிப்ட் அடிப்படையில் வேலை செய்ய முடியும். 

அல்லது பகுதி நேரமாக வேலை செய்ய முடியும். வேலை செய்துகொண்டே புதிய படிப்புகளைத் தொடர முடியும். 

இன்னும் சொல்லப்போனால் எந்தவிதமான மன அழுத்தமும் இல்லாமல் தங்கள் பணிகளை மருந்தாளுநர்கள் செய்யலாம். மருத்துவர்களைப் போன்று குறிப்பிட்ட மணித்துளிகளில் அறுவைச் சிகிச்சை செய்து உயிரை காப்பாற்ற வேண்டிய நிர்ப்பந்தமோ, தேவைப்பட்டால் 24 மணி நேர பணி செய்ய வேண்டிய நிர்ப்பந்தமோ இன்றி நிதானமாக மருந்தாளுநர்கள் செயல்படமுடியும். மருந்தாளுநர்களின் ஒரே பணி சரியான மருந்துகளைப் பரிந்துரைப்பதும், மருந்தை எவ்வாறு பாதுகாப்பாக பயன்படுத்துவது என்பதை கூறுவது மட்டும்தான். 

மருத்துவம் சார்ந்த படிப்புகளில் மற்ற படிப்புகளைக் கற்பதற்கு ஆகும் செலவை விட பார்மசி படிப்பதற்கான செலவு குறைவுதான். ஒருவர் குறைவான செலவில் இளங்கலை மருந்தியல், முதுநிலை மருந்தியல் மற்றும் பட்டயம் படிக்க முடியும். 

இதில் மற்றொரு சிறப்பம்சம் என்னவெனில், ஆன்லைன் மூலமும் மருந்தியல் படிப்புகளை படிக்க முடியும். உலகம் முழுவதும் பல்வேறு பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள் ஆன்லைன் மருந்தியல் படிப்பை வழங்குகின்றன. 

கிளினிகல் ஃபார்மசி, ஃபார்மசி அட்மினிஸ்ட்ரேஷன், ரிசர்ச் ஃபார்மசி, கம்யூனிட்டி பார்மசி, அடிக்சன் பார்மசி என பல்வேறு பிரிவுகள் மருந்தியல் துறையில் உள்ளன. இதில் தேவையானவற்றை இளைஞர்கள் தேர்வு செய்து எதிர்காலத்தைப் பிரகாசமாக்கி கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com