சவாலே சமாளி: சகலகலாவல்லி சந்திரா!

ஆயத்த ஆடை தயாரிப்பாளர், தையல் பயிற்சியாளர், அழகுக் கலை நிபுணர் என பன்முக தொழில் முனைவோராக காலில் சக்கரம் கட்டாத குறையாக சுற்றிச் சுழல்கிறார், ஈரோடு மாவட்டம் அந்தியூரைச் சேர்ந்த சந்திரா. 12 ஆண்டுகள் ஓய
சவாலே சமாளி: சகலகலாவல்லி சந்திரா!
Updated on
2 min read

ஆயத்த ஆடை தயாரிப்பாளர், தையல் பயிற்சியாளர், அழகுக் கலை நிபுணர் என பன்முக தொழில் முனைவோராக காலில் சக்கரம் கட்டாத குறையாக சுற்றிச் சுழல்கிறார், ஈரோடு மாவட்டம் அந்தியூரைச் சேர்ந்த சந்திரா.

12 ஆண்டுகள் ஓயாத உழைப்பால் இந்தச் சாதனையை இவர் எட்டிப்பிடித்துள்ளார். கரூர் மாவட்டம், பரமத்தி வேலூரைச் சேர்ந்த சேகர் என்பவருக்கும், சேலம் மாவட்டம் மேட்டூரைச் சேர்ந்த சந்திராவுக்கும் 22 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. கூட்டுக் குடும்பமாய் கணவர் வீட்டில் வசித்து வந்த இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் பிறந்தன. ஆண் வாரிசு இல்லை என்பதால் வரதட்சிணைக் கொடுமையால் வதைக்கப்பட்டார் சந்திரா.

இதனால், 12 ஆண்டுகளுக்கு முன்பு கணவர், குழந்தைகளுடன் அந்தியூர் அருகே தவிட்டுப்பாளையத்துக்கு தனிக்குடித்தனம் வந்தார். மாற்றுத்திறனாளியான இவரது கணவர், டிராக்டர் ஓட்டி கிடைத்த குறைந்த வருமானம் குடும்பச் செலவுக்கே போதுமானதாக இல்லை. இதனால், தனக்குத் தெரிந்த தையல் தொழில் மூலம், வீட்டிலேயே பெண்களுக்கான துணிகளை தைத்துக் கொடுத்தார்.

படிப்படியாக இந்தத் தொழிலில் கிடைத்த வருமானத்தைக் கொண்டு, அந்தியூர் பஸ் நிலையம் எதிரில், தனது மூத்த மகள் ஆர்த்தி பெயரில் 10 ஆண்டுகளுக்கு முன்பு பெண்கள் தையல் கடையைத் தொடங்கினார் சந்திரா. ஒரே தையல் இயந்திரத்தைக் கொண்டு துணிகளை தைத்துக் கொடுப்பதோடு, தையல் பயிற்சியும் அளித்து வந்தார். 10 ஆண்டுகளுக்கு முன்பு சிறு நகரங்களில் கூட அழகுக் கலை நிலையங்கள் தலைதூக்கின. இந்த நேரத்தில் அழகுக் கலை படிப்பையும் தொலைநிலைக் கல்வியில் படித்து முடித்தார்.

தனது கடையின் ஒரு பகுதியிலேயே பெண்களுக்கான அழகுக் கலை நிலையத்தை தொடங்கினார். இப்போது தினமும் 10 பெண்களாவது முக அலங்காரத்திற்காக வருகின்றனர். தையல் கடையை படிப்படியாக விரிவுபடுத்தியதில் இங்கு 20 பெண்கள் பணியாற்றுகின்றனர். ஆண்டுதோறும் சுமார் 250 பெண்களுக்கு தையல் பயிற்சியும் அளித்து வருகிறார்.

கணவரை இழந்தோர், கணவரால் கைவிடப்பட்டோர், ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின பெண்களுக்கு இலவசமாக தையல் பயிற்சி அளிக்கிறார். இதுவரை 3 ஆயிரம் பெண்களுக்கு தையல் பயிற்சி அளித்துள்ளார்.

தனது வாழ்க்கைப் பயணம் குறித்து சந்திரா கூறியது:

தொடர் முயற்சியும், உழைப்பும் இருந்தால் வாழ்க்கையில் நல்ல நிலைக்கு வரமுடியும்.  துணிகளைக் கேட்டு, வீடுவீடாக ஏறி இறங்கிய காலம் மாறி, இப்போது 20 பேர் இருந்தும் கடைக்கு வரும் துணிகளை தைத்துக் கொடுக்க நேரமில்லை.  இதேபோல்தான் அழகுக் கலை நிலையத்துக்கு வரும் பெண்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருந்தது. ஆனால் இப்போது இங்கு வருபவர்களுக்கு முக அலங்காரம் செய்ய முடியாமல் அடுத்தநாள் வருமாறு கூறிவருகிறேன். காலை 8 மணிக்கு திறக்கும் கடையை இரவு 9 மணிக்கு பிறகு கூட மூட முடிவதில்லை.

12 ஆண்டுகளுக்கு முன்பு அந்தியூருக்கு வந்தபோது, உணவுக்குகூட கஷ்டப்பட்டேன். இப்போது சொந்தமாக இடம் வாங்கியுள்ளேன், அந்த இடத்தில் புதிய கட்டடம் கட்டி கூடுதலாக தையல் இயந்திரங்களை வாங்கி தொழிலை விரிவுபடுத்துவேன்.

12 ஆண்டுகளுக்கு முன்பு எனக்கு 10 ரூபாய் கடன் கொடுப்பதற்கே இங்குள்ளவர்கள் தயங்கினர். ஆனால் இப்போது 10 லட்சம் ரூபாய் கடன் கொடுப்பதற்கு வங்கி தயாராக இருக்கிறது.

உழைப்பும், தொழில் நேர்மையும் இருந்தால் எத்தகைய சவால்களையும் பெண்கள் சமாளித்து விடலாம். இந்த தன்னம்பிக்கை கொடுத்த முன்னேற்றத்தின் மூலம்தான் மூத்த மகளை பட்டப்படிப்பு வரை படிக்க வைத்து, அவருக்கு சிறப்பான திருமண வாழ்க்கையை அமைத்துக் கொடுத்துள்ளேன். மேலும் நான் நினைத்துக்கூட பார்க்காத தனியார் பள்ளியில் இளைய மகள் அபினாவுக்கு கல்வி வாய்ப்பையும் கொடுத்துள்ளேன்.

தையல் தொழிலில் 50 இயந்திரங்களைப் பயன்படுத்தும் அளவுக்கு வளர்ச்சி பெறுவதே லட்சியம் என்றாலும், அதேவேளையில் என்னைப் போல வாழ்க்கையில் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் பெண்கள் யாராக இருந்தாலும், தன்னைத் தேடிவந்தால், அவர்களுக்கு தொழில் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பேன் என்கிறார் சாதனைப் பெண் சந்திரா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com