சுய உதவிக் குழுக்கள் மறுபக்கம்
வீட்டுக்குள்ளே முடங்கிக் கிடந்த பல லட்சக்கணக்கான பெண்கள் இன்று மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம், வெளி உலகத்தை தரிசித்துக் கொண்டிருக்கிறார்கள். இப்போதெல்லாம் எந்த வங்கிக் கிளைக்குச் சென்றாலும், அங்கெ


வீட்டுக்குள்ளே முடங்கிக் கிடந்த பல லட்சக்கணக்கான பெண்கள் இன்று மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம், வெளி உலகத்தை தரிசித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இப்போதெல்லாம் எந்த வங்கிக் கிளைக்குச் சென்றாலும், அங்கெல்லாம் சுய உதவிக் குழுப் பெண்களின் கூட்டம் அலைமோதுகிறது. அரசு விழாக்களிலும் சுய உதவிக் குழு பெண்கள் கூட்டம்தான்.
இவற்றையெல்லாம் விட, கடந்த உள்ளாட்சித் தேர்தலின்போது பெண்களுக்காக ஒதுக்கப்பட்ட பஞ்சாயத்துகளில் ஏராளமான சுய உதவிக் குழு பெண்கள் போட்டியிட்டு, மக்கள் பிரதிநிதிகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள்.
இன்னும் சொல்லப் போனால், சுய உதவிக் குழுக்கள் மூலம் குடும்பத்தின் பொருளாதார தேவையை நிறைவேற்றுவதற்குத் தேவைப்படும் பணம் கடனாகக் கிடைக்கிறது. இது பெண்களாலேயே கிடைக்கிறது என்பதால், குடும்பங்களில் பெண்களின் செல்வாக்கு அதிகரித்திருக்கிறது.
இவ்வாறு சுய உதவிக் குழுக்களின் வருகைக்குப் பின் தமிழக பெண்களின் வாழ்வில் ஏற்பட்ட மாற்றங்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.
எனினும், சுய உதவிக் குழுக்களின் வருகைக்குப் பின் பின்னடைவைச் சந்தித்த பெண்களும் ஏராளமாக உள்ளனர்.
இக்குழுக்கள் மூலம் பெண்களுக்குக் கிடைக்கும் கடன் தொகை, எதிலும் முதலீடு செய்யப்படுவதில்லை. திருமணம், காதணி விழா, மருத்துவச் செலவு, கல்விச் செலவு என குடும்பத்தின் வழக்கமான நிகழ்வுகளுக்கே செலவிடப்படுகிறது. அதுவும் கடனை வாங்கி வருவது மட்டும்தான் பெண்களின் வேலை. அதனைச் செலவு செய்பவர்கள் குடும்பத்திலுள்ள ஆண்களாக உள்ளனர். ஆனால், கடனைத் திருப்பிச் செலுத்தும் சுமை மட்டும் பெண் மீது சுமத்தப்படுகிறது.
சுய உதவிக் குழுப் பெண்கள் பெரும்பாலானோர் தினக் கூலித் தொழிலாளர்களாக உள்ளனர். அவர்களுக்கு ஏற்கெனவே கிடைத்து வரும் சொற்பக் கூலியும், குடும்ப செலவுகளுக்கே போதாமல் உள்ளது. இந்நிலையில் சுய உதவிக் குழுவில் வாங்கிய கடனைத் திருப்பி அடைக்க முடியாமல் பெரும்பாலான பெண்கள் விழி பிதுங்கி நிற்கின்றனர்.
அதேபோல் தொழில் பயிற்சி என்ற பெயரில் பினாயில், ஊறுகாய், அப்பளம், மெழுகுவர்த்தி, ஆயத்த ஆடைகள் போன்றவை தயாரிக்க பயிற்சியும், கடனும் வழங்கப்படுகிறது. ஆனால், உற்பத்தி செய்யப்படும் பொருள்களை சந்தைப்படுத்த எவ்வித ஏற்பாடும் இல்லாததால், அந்தத் தொழில்கள் பெரும்பாலும் நஷ்டத்திலேயே முடிகின்றன.
÷எனவே, வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் பெண்கள் தற்கொலை செய்து கொள்வதும், ஊரையே காலி செய்து விட்டு ஓடுவதும், குடும்பத்தில் இருக்கும் நிலம் உள்ளிட்ட சொற்ப சொத்துகளையும் விற்று கடனை அடைப்பதும் தமிழகம் முழுவதும் பரவலாக நடைபெறுகின்றன.
இது குறித்து தமிழ்நாடு பெண்கள் இணைப்புக் குழுவின் தலைவர் ஷீலு கூறியதாவது:
சுய உதவிக் குழுக்களின் வருகைக்குப் பின் வீட்டுச் சிறைகளை விட்டு பெண்கள் வெளியே வந்துள்ளனர் என்பதை யாராலும் மறுக்க முடியாது. எனக்குத் தெரிந்து, சுய உதவிக் குழுவில் கிடைத்த கடன் மூலம் நிலம் வாங்கி சாகுபடி செய்தும், கேண்டீன் நடத்தியும் ஓரிரு வருடங்களிலேயே சொந்த வீடு, சொந்த கார் வாங்கும் அளவுக்கு பெண்கள் முன்னேற்றம் கண்டிருக்கிறார்கள்.
ஆனால், அவ்வாறு முன்னேறியவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். மாறாக, சுய உதவிக் குழுக்களின் கடன் வலையில் சிக்கி, வெளியேற வழி தெரியாமல் தவிக்கும் பெண்கள்தான் லட்சக் கணக்கில் உள்ளனர்.
சுய உதவிக் குழு பெண்களை பொருளாதார ரீதியாகவும், பாலியல் ரீதியாகவும் அரசு சாரா நிறுவனங்கள் சுரண்டுவது மாநிலமெங்கும் நடைபெறுகிறது. குழுக்களின் பெயரில் அந்நிறுவனங்கள் வங்கியிலிருந்து கடன் பெற்று மோசடி செய்தது பற்றிய செய்திகளும் நாள்தோறும் ஊடகங்களில் வருகின்றன. ஆனால், அவர்கள் மீதெல்லாம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை.
தொண்டு நிறுவனங்களின் கட்டுப்பாட்டுக்குள் சுய உதவிக் குழுக்கள் இருந்தவரை அவை பெரும் வெற்றி அடைந்தன. ஆனால், அரசியல் கட்சிகள் தலையிடத் தொடங்கிய பின், அரசின் திட்டமாக மாற்றப்பட்ட பின்னரே இந்த சீரழிவுகள் எல்லாம் ஏற்பட்டன.
எனவே, பாதிக்கப்பட்ட சுய உதவிக் குழுப் பெண்களை மீட்டெடுக்கவும், பாதுகாக்கவும் அரசுக்குப் பொறுப்பு உண்டு. சுய உதவிக் குழுக்களை, பெண்கள் முன்னேற்றத்துக்கான அர்த்தமுள்ள அமைப்புகளாக மாற்றவும், ஏமாற்றுவோரிடமிருந்து பெண்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ளவும் உரிய ஏற்பாடுகளை செய்ய வேண்டியது அரசின் கடமை.
இதற்காக சுய அதிகாரம் படைத்த நிர்வாக அமைப்பு ஒன்றை மாநில அரசு ஏற்படுத்த வேண்டும் என்றார் ஷீலு.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...