சுப்பராம தீட்சிதர் முதல் சூர்தாஸ் வரை...
ஸுஜாதா விஜயராகவன் ஓர் இசை-நடன ஆர்வலர் மற்றும் நிபுணர், ஆய்வாளர்.


ஸுஜாதா விஜயராகவன் ஓர் இசை-நடன ஆர்வலர் மற்றும் நிபுணர், ஆய்வாளர். ப்ரகா பெஸ்ஸல் அடையாறு லக்ஷ்மணின் மூத்த மாணவி. கலாக்ஷத்ராவில் வருகைப் பேராசியை. பத்ம பூஷண் கலாநிதி நாராயணிடம் அபிநயங்களைச் சிறப்பாகக் கற்றுக்கொண்டவர். இந்தியாவிலும் அயல் நாடுகளிலும் இவர் நிகழ்த்தியிருக்கும் நடன வகுப்புப் பட்டறைகள் ஏராளம். இருவரும் கைகோத்துக்கொண்டு வினரா என்ற நிகழ்ச்சியைத் தயாரித்திருக்கிறார்கள். மொத்தம் 90 நிமிடங்களில் பரத நாட்டியம் மற்றும் கர்நாடக இசையின் சாரத்தை தேன் துளியாக ரசிகர் நாவில் சொட்டும் வகையில் அமைத்திருக்கிறார்கள்:
ஏன், வினரா என்று தலைப்பு வைத்திருக்கிறீர்கள்?
வினரா என்றால் ஓர் ஆணிடம் கேள் என்று சொல்வது. (பெண்ணிடம் என்றால் வினவே) இதில் இசை இருக்கிறது. நடனம் இருக்கிறது. கவிதை இருக்கிறது. வாழ்க்கை முழுதும் நாம் பேசுகிறோம். கேட்பதற்கு ஒருவர் வேண்டுமே? பல சந்தர்ப்பங்களில் ஒரு செய்தியைக் கேட்பது மாதிரி இருக்கும். பல கட்டங்களில், முக்கியமான சமாசாரத்தைச் சொல்கிறார்கள், இல்லையா? அதில் பாவனைகள் இருக்கும். உணர்ச்சிகள் - எமோஷன்ஸ் இருக்கும். உதவி கேட்பது மாதிரி இருக்கும். எடுத்துச் சொல்வது மாதிரி இருக்கும். ஆதரவு கொடுங்கள் என்று விண்ணப்பிப்பது போல் இருக்கும். ஏன், கதை சொல்வதும் அதில் அடங்கியிருக்கும். "சொல்றேன், கேளு' என்று ஆரம்பித்துப் பலர் சொல்வதைக் கேட்டதில்லையா? ஆனால், கேட்க வைப்பது எளிதான விஷயம் அல்ல. கேட்பது எவ்வளவு முக்கியம் என்பதை நாம் உணர்வதில்லை. ஏதோ சொல்ல வருகிறார். அது சந்தோஷ சமாசாரமாகவும் இருக்கலாம். துக்கமான சமாசாரமாகவும் இருக்கலாம். நம்மால் ஆகக் கூடியதாகவும் இருக்கலாம். எதுவானாலும், காதையும் மனசையும் கொடுத்துக் கேட்க வேண்டும். அவர் சொல்வதை அதே அலைவரிசை அனுபவத்தோடு கேட்கிற "எம்ப்பதி' இருக்க வேண்டும். அதிலுள்ள ஆதங்கத்தைப் புரிந்துகொண்டு செயல்படுகிற மனசு வேண்டும். உண்மை என்பது என்ன? ஓர் இதயம் இன்னோர் இதயத்துடன் பேசுவதுதான் உண்மை. "கேளாய்!'
என்கிறார் பாரதி. எனக்குச் செல்வம் வேண்டும். நூறு வயது வேண்டும் என்றெல்லாம் கேட்கிறார்.
சரி, இதை எல்லாம் எப்படி நடனத்தில் கொண்டு வரப் போகிறீர்கள்? அதிலும் ப்ரகா பெஸ்ஸல் அபிநயத்தில் சிறந்தவர்...
அபிநயத்தை கவிதை என்பார்கள். பாலாம்மாவின் அபிநயத்தை பொயட்டிக் என்பார்கள். கலைஞன் கற்பனை வளம் இருந்தால்தான் அபிநயம் சோபிக்கும். ப்ரகா அபிநயத்தில் தேர்ந்தவர். ந்ருத்தாவிலும் தான். ஆனால் இங்கே ந்ருத்தாவுக்கு அதிக இடமில்லை. ந்ருத்தா ஒரேயடியாக இல்லை என்றும் சொல்ல மாட்டேன். தஞ்சை நால்வரின் இரண்டு வர்ணங்களிலிருந்து ஏழெட்டு நிமிடங்களுக்கு இருக்கும். அபிநயத்தில் கற்பனையும், ஜீவனும் இருந்தால்தான் ரசிக்க முடியும். சாதாரணமாக நடன நிகழ்ச்சிகளில், வர்ணம் முடிந்ததும் பலர் அரங்கிலிருந்து வெளியேறி விடுகிறார்கள். இரண்டாம் பகுதியாக வருகிற அபிநய அம்சங்களைப் பார்ப்பதில்லை. அதை ஓரளவுக்குத்தான் திட்டமிட முடியும். அதில் கற்பனை வளத்தைக் காண்பிக்க நடனக் கலைஞருக்கு வாய்ப்புகள் அதிகம். இதில் அதன் முக்கியத்துவத்தைக் காணலாம்.
அப்படியானால் என்னென்ன மொழிகளில் பாடல்கள் யாருடையதை எல்லாம் எடுத்துக்கொண்டிருக்கிறீர்கள்?
தமிழ், தெலுங்கு, சம்ஸ்கிருதம், ஏன் - ஹிந்தி கூட இருக்கிறது. சிலப்பதிகாரம் உண்டு. பாரதியார் உண்டு. கண்ணதாசனும் உண்டு. பகவத் கீதை கூட உண்டு! சூர்தாஸ் பஜன் உண்டு. இவற்றில் ரசிகர்களுக்கு ஏற்கெனவே தெரிந்த பாட்டுகளும் உண்டு. தெரியாத புதிய
பாடல்களும் உண்டு. அதுதான் இந்த நிகழ்ச்சிக்கு சுவாரசியம் உண்டாக்குவது!
நடனத்தில் சிருங்காரம் முக்கிய அம்சம். இதில் அதற்கு இடம் இருக்கிறதோ?
மேற் சொன்ன இரண்டு வர்ணங்களிலும், கூடவே ஒரு பதத்திலும் அதைக் கோடிட்டுக் காட்டியிருக்கிறோம். வாத்சல்யம் என்ற அன்பை வைத்திருக்கிறோம். ஒரு குழந்தையிடம் எந்த சந்தர்ப்பத்தில், எப்படி எப்படி எல்லாம் பேசுவோம்? ஒருவர் இன்னொருவரிடம் மனம் விட்டுப் பேசுவதைக் காண்பிக்க, ராமர் லக்ஷ்மணனிடம் தன் துக்கத்தைப் பகிர்ந்து கொள்வதைக் காட்டுகிறோம். ராவண தர்பாரில் அவனைக் காட்டிலும் உயரே தன் வாலைச் சுருட்டி அமர்ந்தபடி உபதேசம் செய்கிறார் அனுமன். அவன் யாரடா என்று ஒரு "டா' போட்டதற்கு, பல டாக்கள் வீசி அவனை அசத்துகிறார் ராம தூதன் அனுமன். மனிதன் கடவுளோடு பேசுவதைக் காண்பிக்க ஒரு நிந்தாஸ்துதி வைத்திருக்கிறோம். வேறு எந்தச் சமயத்திலும் கடவுளை இப்படி உரிமை எடுத்துக்கொண்டு பேச இடம் இருக்கிறதா என்று தெரியவில்லை! அன்னையின் மடியைத் தேடும் குழந்தையின் ஆதங்கம் வெளிப்படும் சுப்பராம தீட்சிதரின் கீர்த்தனை இருக்கிறது. அநீதி இழைக்கப்பட்ட கண்ணகியின் குரலை சிலப்பதிகாரத்திலிருந்தும், அதர்மத்தை எதிர்த்துக் குரல் எழுப்பும் வகையில் பீமனும் அர்ஜுனனும் பேசுவதை பாஞ்சாலி சபதத்திலிருந்தும் கேட்கலாம்.
இவற்றுக்கெல்லாம் யார் பதில் சொல்ல முடியும்?
யோசித்துப் பாருங்கள். யார் சொல்ல முடியும்? பரம்பொருள்தான் சொல்ல முடியும். அவர் அப்படிச் சொல்லிவிட்டு, "உனக்கு என்ன தோன்றுகிறதோ அதைச் செய்' என்கிறார். நம்முடைய முடிவுக்கே விட்டுவிடுகிறார். இவற்றை எல்லாம் தொண்ணூறு நிமிடங்களில் வழங்க வேண்டும் என்பது பெரிய சவால்தான். ஆனால் அதில்தான் வெற்றியும் இருக்கிறது.
ஸýஜாதா விஜயராகவனும், ப்ரகா பெஸ்ஸலும் சொல்வதைப் பார்த்தால் அவர்களால் முடியும் என்றுதான் தோன்றுகிறது
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...