உனையன்றி வேறேதும் பெரிதில்லை பிள்ளாய்... ப. ஜோதி நிர்மலாசாமி ஐஏஎஸ்

பதினைந்து வருடங்களுக்கு முன்பு நான் பார்த்த ஒரு நிகழ்வு...  சென்னையில் உறவினர்களை பார்ப்பதற்காக ஒருநாள் அவர்களது அடுக்குமாடி குடியிருப்புக்கு

பதினைந்து வருடங்களுக்கு முன்பு நான் பார்த்த ஒரு நிகழ்வு...  சென்னையில் உறவினர்களை பார்ப்பதற்காக ஒருநாள் அவர்களது அடுக்குமாடி குடியிருப்புக்கு சென்றிருந்தோம். நாங்கள் சென்ற போது உறவினர்கள் அங்கு இல்லை. எதிர் வீட்டில் விசாரித்த போது அவர்கள் வெளியூர் சென்றிருப்பதாகச் சொன்னவர்கள் அழகான விருந்தோம்பலையும் அளித்தார்கள்.  வீட்டின் உள்ளே அழைத்து அமர வைத்தார்கள்.  பரஸ்பர விசாரிப்புகளினூடே அவ்வீட்டின் தலைமைப் பெண் பரபரப்பாக இருந்தார்.  படுக்கை அறைக்கும் வரவேற்பறைக்கும் நடை பயின்றார்.

அவரே அதற்கு காரணமும் சொன்னார்.  அவரது மகள் பெண் குழந்தையைப் பெற்றெடுத்து ஒரு வாரகாலம் தான் ஆகியிருந்தது.  குழந்தை படுக்கை அறையில் இருந்தது. அக்குழந்தையைக் காட்ட என்னை அங்கு அழைத்து சென்றார்.  குழந்தை மட்டும் அங்கிருந்தது.  பெற்றவளைக் காணவில்லை.  கேட்டே விட்டேன் அவர் எங்கே என்று.  தலைமைப் பெண் நிதானமாகச் சொன்னார், குழந்தை பிறந்து ஒரு வாரம் ஆகிறது.  இக்குழந்தையைப் பெற்ற மறுநாளே எனது மகளுக்கு சிங்கப்பூரில் பணியில் சேர்வதற்காக அழைப்பு வந்தது, எனது மருமகனுடன் அவள் நேற்று சிங்கப்பூர் சென்றிருக்கிறாள். சொல்லும்போதே அவருக்கு பெருமையில் முகம் மின்னியது.  தன் மகள் ஒரு ஐ.டி. பணியாளர் என்பதிலும் அவளுக்கு பன்னாட்டு நிறுவனம் ஒன்றில்  பணி கிடைத்தது என்பதிலும்  அவருக்கு தாங்கொணா பெருமை.  மகள் பெற்று விட்டு, போட்டுச் சென்று விட்ட அந்த மழலை குறித்து உணர்வுப்பூர்வமான எந்த வெளிப்பாடும் இல்லை அவரிடம்.

மறுபடியும் அந்த குழந்தையைப் பார்த்தேன், கீரைக்கட்டைப் போல் கிடந்தது அது.  பாவம். அதற்கு தேர்வு செய்யும் வாய்ப்பு இருந்திருந்தால், தனது தாய் தன்னைப் பெற்ற ஏழு நாட்களுக்குள் பன்னாட்டு நிறுவனப் பணிக்குச் சென்று விடுவார் என்று தெரிந்திருந்தால், அது வேறு ஒரு கருவறையை விரும்பியிருந்திருக்கலாம். தாய்ப்பாலும் அக்குழந்தைக்கு கொடுத்து வைக்கவில்லை. ஆமாம்... தாய்ப்பால் காட்டி விட்டால் அக்குழந்தை ஏங்கிவிடும் என்று அதை அக்குழந்தைக்கு காட்டவே இல்லை என்று அந்த பெரிய மனுஷி விளக்கம் வேறு சொன்னார்.

குழந்தைக்கு தாய்தான் உலகம் என்பது பொருளியல் வசம் வந்து விட்ட இவ்வுலகின் செயற்கை செயல்பாடுகளால் பொய்த்துப் போய் நிற்கின்றது.  தன் தாயின் ரத்தத்தையும் சதையையும் பெற்றுக் கொண்டு அவளை மட்டுமே நம்பி இவ்வுலகில் ஜனித்த அக்குழந்தை என்ன பாவம் செய்தது?  அதிக சம்பளம் தரும் அப்பன்னாட்டு நிறுவனப் பணி. அப்பரிசினை விட அவளுக்கு பெரிதாகிப் போனது.

ஒரு குழந்தைக்கு அதன் தாயினுடனான பிணைப்பு உணர்வு சார்ந்த அறிவியல் காரணம் கொண்டதாகும்.  ஆக்ஸிடோசின் என்ற ஹார்மோன் தாயின்  மூளைக்குள் சுரந்து குழந்தைக்கு தேவைகள் வருகையில் அவளை அதன் சேவைக்கு உந்துகிறது.  தாய்ப்பாலைச் சுரந்து குழந்தையின் பசியாற்றுகிறது. 

தலைமுறைகளுக்கும் தொடரும் வகையில் அருமையான பிணைப்பையும் ஏற்படுத்துகிறது. இயற்கையே இந்த ஏற்பாட்டை செய்திருக்கையில், பெற்ற குழந்தையை செயற்கையாகப் பிரிப்பது உடலையும் உயிரையும் பிரிப்பது போலாகும். 

பிறந்து ஏழு நாட்களுக்குள் குழந்தையைப் பிரிவது என்ற செய்தி கொஞ்சம் அரியதாகப் படலாம்.  ஆனால் இரண்டு வயது அல்லது மூன்று வயது ஆனவுடன் குழந்தைகளை பிறர் பொறுப்பில் விட்டு விட்டு வெளியூர்களுக்கு, வெளிநாடுகளுக்கு வேலைக்குப் போகும் பெண்களையும் நம்மிடையே பார்க்கிறோம், அவர்கள்  தம் மழலைச் சொல்  எனும் இனியதைக் கேட்காமல் பொருளின் பால் ஈடுபாடு காட்டி நிற்கிறார்கள், கேட்டால் சம்பாதிப்பதே அக்குழந்தைக்குதானே என வியாக்கியானம் தருவார்கள்.   

பணம் மட்டும் ஒரு குழந்தைக்கு நல்வாழ்வைத் தந்து விடாது. அந்தந்த பருவத்தில் அந்தந்த புரிதலை அதன் தாய் அதற்கு சொல்லித் தர வேண்டும்.  பிரஷில் பற்பசையை எப்படி வைக்க வேண்டும்.   பாத்ரூம் பிளஷ்ஷை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது முதல் அனைத்து விஷயங்களையும் அறிந்து கொள்வதில் அக்குழந்தை அதன் தாயையே எதிர்பார்த்து நிற்கிறது. இதையெல்லாம் அதற்கு சொல்லித் தரும் சுகத்தை அனுபவிக்காமல் பொருள் ஈட்டுவதை பெரிதாக நினைக்கும் பெண்கள் உண்மையில் பரிதாபத்திற்குரியவர்கள்,  தங்கள் கடமைகளில் தவறுபவர்கள்.

ஆரம்பக் கல்வி முதலே விடுதிகளில் தங்கள் குழந்தைகளை விட்டு விடும் பெற்றோரும் இ ங்கு உண்டு. இரண்டு பேரும் வேலைக்குச் செல்வதால் இப்படி ஏற்பாடு என விவாதிக்கலாம்.  இதனால் அக்குழந்தைகள் இழப்பதை எத்தனை கோடிகள் தந்தாலும் ஈடு செய்ய முடியாது.  பெற்றோர் இழப்பதுவும் இதனில் அடக்கம். எனக்கு தெரிந்த ஓர் அதிகாரி தன் இரண்டு பெண் குழந்தைகளையும்  ஏற்காடு கான்வென்டில் எல்.கே.ஜி முதலே விடுதியில் தங்கி படிக்க விட்டு விட்டார்.  இதற்கு பெரும் செலவாகும் என்பது எல்லோருக்கும் தெரியும்.  அவ்வளவு செலவு செய்வதை பெருமையாகக் குறிப்பிடுவார். சில வருடங்கள் கழித்து ஒரு முறை சந்திக்கையில்  குழந்தைகள் குறித்து அவரிடம்   கேட்டபோது, விடுப்புக்காக வீட்டிற்கு வந்தாலும் விடுதிக்கு திரும்பும் நாளைத்தான் என் குழந்தைகள் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர் என்று சொன்னார்.  தங்களின் வீட்டையே அந்நியமாகப் பார்க்கும் மனநிலைக்கு அக்குழந்தைகள் வந்து விட்டிருக்கிறார்கள்.

- அடுத்த இதழில்...

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com