உனையன்றி வேறேதும் பெரிதில்லை பிள்ளாய்... - பா.ஜோதி நிர்மலாசாமி ஐ.ஏ.எஸ்.

தற்போது பள்ளிப்படிப்பு முடிந்து மருத்துவக் கல்வி பயின்றாலும் அவரது மூத்த மகள் கல்லூரி முடிந்து வீடு வந்த பின் தனது அறைக்குள் சென்று கதவை சாத்திக் கொள்கிறாள் என்றும்

சென்றவார தொடர்ச்சி...

தற்போது பள்ளிப்படிப்பு முடிந்து மருத்துவக் கல்வி பயின்றாலும் அவரது மூத்த மகள் கல்லூரி முடிந்து வீடு வந்த பின் தனது அறைக்குள் சென்று கதவை சாத்திக் கொள்கிறாள் என்றும் தன்னிடமும் தனது மனைவியிடமும் அதிகம் பேசுவதில்லை என்றும் சமீபத்தில் அவர் சொன்னார்.  அவரும் அவரது மனைவியும்  ஒரு மருத்துவரை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் தங்கள் மகளை தேடிக் கொண்டிருக்கிறார்கள். அவளுடன் அவர்கள் பகிர்ந்து கொண்டிருக்க வேண்டிய நாட்கள் என்ன கொடுத்தாலும் திரும்பி வரப் போவதில்லை.

   தனது பால்ய வயதில் தனக்கு தன் பெற்றோர் செய்திருக்க வேண்டிய நேரடி வழிகாட்டுதலை அவர்கள் செய்யத் தவறியதால் தனது கோபத்தை இவ்வகையில் வெளிக்காட்டுகிறாள் அந்த மகள். அந்த பெற்றோரோ சிறந்த ஒன்றென தாங்கள் நினைத்துக் கொண்டிருந்ததையே அவளுக்கு கொடுத்ததாக எண்ணிக் கொண்டு அதிமுக்கியமான அன்பை இழந்து நிற்கிறார்கள்.  கல்லூரியில் சக மாணவ மாணவிகள் எனது அம்மா மூன்று வயதில் எழுத சொல்லித் தந்தார், எனது அப்பா ஐந்து வயதில் நீச்சல் சொல்லித் தந்தார் -   என பெருமையுடன்  சொல்கையில் அதனை இழந்து நிற்கும் குழந்தைகள் ஏக்கம் கொள்கிறார்கள்,  அதனால் எதிர்ப்பைக் காட்டுகிறார்கள்.

  திருநெல்வேலியில் ஐரோப்பிய கன்னியாஸ்திரிகளால் அப்போது நடத்தப்பட்டு வந்த ஆங்கில வழி கல்வி பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்த எனது தாயார், எனது பிறப்புக்காக விடுப்பு எடுத்து எனக்கு ஒரு வயது ஆன பின் வேலைக்கு செல்லத் தொடங்கி இருக்கிறார்.  அவர் காலையில் சென்று விட்டு மாலையில் திரும்பி வந்த நிலையில் என்னை பகலில் கவனிக்கும் பொறுப்பு ஒரு தாதியிடம் தரப்பட்டுள்ளது,  கல்லூரி பேராசிரியரான எனது தந்தையார் ஒரு நாள் சீக்கிரம் வீடு திரும்பிய போது பார்த்த காட்சி எனது தாயாரின் பணி குறித்த முடிவையே மாற்றியது.  ஏதோ காரணத்திற்காக அழுது கொண்டிருந்த இரண்டு வயது நிரம்பியிருந்த என்னை அழாதே என இரு விறகுக் கொள்ளிகளை எனது கண்களுக்கு நேரே காட்டி அந்தத் தாதி மிரட்டி கொண்டிருந்திருக்கிறார். அவரை அப்படியே விரட்டி விட்டார் எனது தந்தையார்.

  பணி முடிந்து வீடு திரும்பிய எனது தாயார் இதனை கேள்விப்பட்டு அன்றைய நாளை தனது பணியின் கடைசி நாளாக ஆக்கிக் கொண்டார்.  அப்புறம் சுமார் இருபது வருடங்கள் கழித்து தனது குழந்தைகள் எல்லாம் படித்தேறியபின் மீண்டும் தனது கனவு பணியான ஆசிரியை பணியைத்  தொடர்ந்து கொண்டார்.  அவரின் இந்த முடிவால் அவருடைய அனைத்து குழந்தைகளையும் நல்ல நிலைக்கு ஆக்கி விட்ட பெருமை இன்றும் அவரிடம் இருக்கிறது. எங்களது தாய் எனக்காக, எங்களுக்காக செய்த இந்த தியாகம் எனது மற்றும் எனது சகோதர சகோதரிகளின் மனதில் இன்றும் நன்றியாய் இனிக்கிறது.

  எனக்கும் இது போன்ற ஒரு வாய்ப்பு நேர்ந்தது.  எனது மகன் பத்தாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தபோது நான் மாவட்ட ஆட்சித் தலைவராக பணியாற்றிக் கொண்டிருந்தேன்.  அழுத்தங்களால் மாற்றங்கள் வரும்போது அதிகாரியின் பிள்ளை என்ன படிக்கிறது என பார்க்கப்படுவதில்லை.  எனது மகனின் பத்தாம் வகுப்பு படிப்பின் சரிபாதி கல்வியாண்டில் எனக்கு மாற்றம் வந்த போது எனது மகன் என்னைப் பார்த்து.   "என்னை என்ன செய்யப் போகிறாய் ?' என்று கேட்டான். "என்ன செய்ய வேண்டும் என அம்மாவுக்கு தெரியும்' என்று சொன்னேன். சென்னைக்கு வந்து பணியில் சேர வேண்டியிருந்தாலும் அப்போது.  அவனது நன்மையைத் தவிர வேறெதுவும் எனக்கு பெரிதாகப் படவில்லை. 

பெரும் பதவியும், பவிசும், இன்ன பிறவும் எல்லாம் நம் பிள்ளைகளுக்குப் பிறகுதான், அவனது மனவுறுதி குறையாமல் இருக்கவும்  எதுவும் நடந்து விடவில்லை என் அம்மா என்னோடுதான் இருக்கிறாள்  என்பதை அவன் உணரும் வகையிலும் உடனடியாக விடுப்புக்கு விண்ணப்பித்தேன்.  மாவட்ட ஆட்சித் தலைவராக வலம் வந்த அதே ஊரில் வாடகைக்கு வீடு எடுத்தோம். என் மகனும் மகளும் நடந்தே பள்ளிக்கூடத்திற்கு செல்லும் தூரத்தில் இருந்த அந்த வீட்டில் ஐ.ஏ.எஸ் என்பதையெல்லாம் மறந்துவிட்டு அவர்களின் தாயாக மட்டும் இருந்து கொண்டு ஐந்து மாதம் கடந்தேன்.

  எந்த மாவட்டம் எனது பணிகளைக் கொண்டாடியதோ அந்த மாவட்டத்திலேயே அம்மாவட்டத்தினருக்கே தெரியாமல் இருந்திருந்து. மகன், பொதுத் தேர்வை முடித்தவுடன் சென்னைக்கு வந்து எனது பணியில் சேர்ந்து விட்டேன். அவனது அன்றைய தேவையை விட பிறவற்றைப் பெரிதென எண்ணி அன்று அவனை விட்டு விட்டு வந்திருந்தால் இன்று  பெருமைக்குரிய தாயாய்  அவன் எனை மதிக்கும் நிலையை நான் பெற்றிருக்க மாட்டேன்.  அவனை விட வேறு எதுவும் எனக்கு பெரிதில்லை என்பதை அவனுக்கு உணர்த்த, எனக்கு கிட்டிய பெரும் வாய்ப்பாக அந்த பணி மாற்றத்தைக் கருதுகிறேன். எனது மகளுக்கும் கூட அவளது பொதுத் தேர்வுகளின்போதெல்லாம் விடுப்பு எடுத்துக் கொண்டு அருகிலேயே இருந்திருக்கிறேன். 

 பொருளீட்டும் நோக்கத்திற்காக தாயை குழந்தையிடம் இருந்து பிரிக்க வேண்டாம்  என்ற இக்கருத்துக்கு நிச்சயம் ஆட்சேபனைகள் இருக்கலாம்.  காலையில் பணிக்கு சென்று மாலையில் வீடு திரும்பும் தாய்மார்கள் இயந்திரங்களையும் தோற்கடிக்கும் வகையில் தம்  குழந்தைகளுக்காக பம்பரமாகச் சுழல்வதை பெரும்பான்மையாகப் பார்க்கிறோம், பெருமையாக குறிப்பிடுகிறோம்.  ஆனால் நான் இங்கு பேசுவது தன் குழந்தைகளை முற்றிலும் பிரிந்து வெளியூர், வெளிநாட்டுக்கு பணி நிமித்தம் செல்லும் பரிதாப தாய்மார்கள் குறித்துதான்.  அவர்கள் பொருளீட்டுவதே பெரிது என்ற தங்கள் மனநிலையை மாற்றிக் கொள்ள வேண்டும்.  பொருளாதார தேவை இருப்பின் அவர்களின் குடும்பத் தலைவர்கள் திரை கடலோடியும் திரவியம் தேடட்டும்.  குழந்தைகள் தங்களின் சுயசார்பைத் தொடங்கும் வரையிலாவது தாய்மார்கள் கூட இருந்து வழி நடத்தட்டும்.  

பள்ளி அல்லது கல்லூரி முடிந்து வீட்டிற்கு திரும்பும் குழந்தைகள்.  "இது எனது வீடு'  என்ற ஈறுமாப்புடன் திரும்ப வேண்டும்.  எனது தாயார் வீட்டில் காத்திருப்பார்  அல்லது வந்து விடுவார், அவர் எனக்காக ஏதுவும் செய்வார்  என்ற நம்பிக்கை அவர்களுக்கு வர வேண்டும். நமது குழந்தைகளைத் தவிர நமக்கு வேறேதுவும் பெரிதில்லை என நாம் நினைப்பதை நமது செயல்களினால் அவர்கள் உணர வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com