இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த இந்திய கப்பல்கள்! ஈரான் அனுமதி! தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

சென்னையின் உணர்வு!

""நான் 60-களில், திருமணத்துக்குப் பின் சென்னைக்குக் குடி வந்த போது, எங்கள் வீட்டு காம்பவுண்டுக்குள் இருந்த ஒரு பெரிய நாகலிங்க மரம் சூறைக் காற்றில் அடியோடு சாய்ந்தது. 

News image
Updated On :31 மே 2016, 12:03 pm

சாருகேசி

""நான் 60-களில், திருமணத்துக்குப் பின் சென்னைக்குக் குடி வந்த போது, எங்கள் வீட்டு காம்பவுண்டுக்குள் இருந்த ஒரு பெரிய நாகலிங்க மரம் சூறைக் காற்றில் அடியோடு சாய்ந்தது.  காரை வெளியே எடுக்க முடியாது. வெளியே இருந்தும் ஒரு வாகனமும் வந்துவிட முடியாது.  இந்த மரத்தை விற்றால் 200 ரூபாய் கிடைக்கும் என்றார்கள்.  அன்றைக்கு அது பெரிய தொகை. ஆனால் அதை வெட்டினால்தானே வழி கிடைக்கும்.  அதை வெட்டி எடுக்க ஒருவர் வந்தார்.  100 ரூபாய் கேட்டார்.  சரி என்று ஒப்புக்கொண்டு அந்த மரத்தின் வீழ்ச்சியை எப்படியோ சமாளித்தோம்.  அதை ஒரு நிகழ்ச்சியாக பெமினா இதழில் எழுதினேன்.  அதுதான் என் முதல் எழுத்து.  பின்னர் இந்தியன் எக்ஸ்பிரஸ், ஹிந்து பத்திரிகைகளில் பெண்கள் சம்பந்தப்பட்ட விஷயங்களை எழுதினேன்.  ஈவ்ஸ் வீக்லியும் என் கட்டுரைகளை பிரசுரம் செய்தது.   அப்புறம் மெல்ல மெல்ல எழுத ஆரம்பித்தேன். பாரதிய வித்யா பவனில் ஜர்னலிஸம் படித்துவிட்டு, அங்கேயே மாணவ-மாணவிகளுக்கு பேச்சுக்கான ஆங்கிலமும் பத்திரிகைப் பயிற்சியும் கொடுத்தேன் என்கிறார்'' மீரா ராகவேந்திர ராவ்.

டிசம்பரில் சென்னை நகரம் வெள்ளத்தால் தவித்தபோது, "ஸ்பிட் ஆப் சென்னை அய்ட்ஸ்' என்ற நூலை எழுதி ஒரு நிகழ்ச்சியில் வெளியிட்டார் மீரா. ""வீட்டு வேலைக்காரப் பெண்மணிகள் இருவரிடமும், எப்படி உங்கள் வீட்டில் வெள்ளத்தை சமாளித்தீர்கள் என்று கேட்டேன்.  இருவரும் பழைய சேலைகளை அணிந்திருந்தார்கள். எல்லாவற்றையும் இழந்துவிட்டதாகச் சொன்னார்கள்.  கூரையின் மேல் ஏறி உட்கார்ந்துகொண்டு நாட்களைத் தள்ளினார்களாம்.  நான், உங்களைப் பார்த்தால் மிகவும் பாவமாயிருக்கிறது.  பரிதாபப் படுகிறேன் என்று சொன்னேன்.  அவர்கள் சொன்ன பதில் என்னை யோசிக்க வைத்தது: "அப்படி எல்லாம் ரொம்ப வருத்தப்படாதீங்க அம்மா.  இன்னும் கடுமையா வேலை செஞ்சு தொலைச்சதை எல்லாம் மீட்டுடுவோம்' என்றார்கள் அந்த இரண்டு பெண்மணிகளும்.  நான் சிந்தித்துப் பார்த்தேன். நான்தான் முட்டாள்தனமாக அவர்கள் மீது இரக்கம் தெரிவித்தேன்.  சென்னைவாசிகள் தங்கள் இழப்பைப் பெரிதாகச் சொல்லிக்கொண்டு இரக்கம் தேட முயலவில்லை.  அவர்கள் உழைக்கத் தயாராக இருந்தார்கள்.  அதுதான் சென்னையின் உணர்வு என்று சொல்கிறார் மீரா ராகவேந்திர ராவ்.  (பழனியப்பா பிரதர்ஸ் வெளியீடு.)

நாகலிங்கமரம் என்றதும் மறைந்த எழுத்தாளர் ஆர். சூடாமணியின் நினைவு இயற்கையாகவே எல்லாருக்கும் வரும்.  நான் சூடாமணியின் வீட்டுக்குப் போய் அவருடன் பேசியிருக்கிறேன்.  அற்புதமான எழுத்தாளர். பாரதிய வித்யா பவன் தொடர்பு காரணமாக, ப. சிதம்பரம் அவர்களைச் சந்திக்க நேர்ந்தது.  நீங்கள் ஏன் எங்களுடைய இலக்கியச் சிந்தனையில் வந்து அவருடைய கதை ஒன்றைப் பற்றிப் பேசக்கூடாது என்று கேட்டார்.  நான் அங்கே வந்து ஆங்கிலத்தில் பேசினால் நன்றாக இருக்குமா என்று கேட்டேன்.  அதனால் என்ன  நீங்கள் அவருடைய கதையை ஆங்கிலத்தில் விமர்சித்துப் பேசுங்கள் என்றார்.  ஆனால் நான் பேசியதை வெகு அழகான தமிழில் ப. சிதம்பரமே எடுத்துச் சொன்ன போது வியந்து போய்விட்டேன்'' என்று பழைய நாளை நினைவுகூர்ந்தார் மீரா ராகவேந்திர ராவ்.  

ஆரம்பத்தில் ஹைதராபாத்தில் இருந்ததால், அசோகமித்திரனை நன்கு தெரியும் என்றார்.  அதற்குப் பிறகு ஜம்ஷெட்பூருக்குப் போய்விட்டார் மீரா. பின்னர் திருமணத்துக்குப் பின் சென்னை வந்து குடியேறியதும், எழுத்தில் இருந்த ஆர்வம்  ஆசிரியருக்குக் கடிதம் எழுதும் எழுத்தாளராகத் தொடங்கி, இப்போது ஆறு புத்தகங்கள் எழுதிவிட்டார். "மெட்ராஸ் மொசைக்' நகைச்சுவை மிளிரும் படைப்பு. இந்திரா பார்த்தசாரதியும் இவர் அறிந்த இன்னொரு தமிழ் எழுத்தாளர்.  ஜெயகாந்தனின் சில நேரங்களில் சில மனிதர்கள் படம் பார்த்துவிட்டு, அதன் முடிவை அதிர்ச்சியுடன் எதிர்கொண்டேன்.  என்னால் ஜெயகாந்தனின் முடிவை ஏற்க முடியவில்லை.  கதாநாயகி ஏன் தன்னைச் சிறுமைப்படுத்திக்கொண்டு கதாநாயகனிடம் தன்னை ஏற்க வேண்டிக் கெஞ்ச வேண்டும் என்று தோன்றியது.  அதன் முடிவை பாஸிடிவ் ஆகப் பார்த்து, ஒரு சிறுகதை எழுதினேன்.  அது ஈவ்ஸ் வீக்லி இதழில் வெளியாயிற்று என்கிறார் மீரா.  முதல் முதல் பேட்டிக் கட்டுரை எழுதியது, முதல் பெண் தலைவியாக சென்னை பொது மருத்துவ மனையில் பொறுப்பு ஏற்றுக்கொண்ட டாக்டர் சௌமினியைச் சந்தித்த போதுதான்.

பச்சையப்பன் கல்லூரியில் பேராசிரியராக இருந்த எம்.என். ராவ் தெலுங்கிலிருந்து ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த சிறுகதைத் தொகுப்புகளை சென்ற வாரம் ஓர் அரங்கில் வெளியிட்ட போது, அவரை அறிமுகப்படுத்தி வைத்தார் மீரா.  மு.வரதராசனார் தம்முடன் பணியாற்றியதையும் அவர் நிறைய நாவல்கள் எழுதியதையும் நினைவுகூர்ந்து பேசினார் ராவ்.  ராவ் மொழிபெயர்த்த தெலுங்குக் கதைகள் ஐந்தைப் படித்ததும் சமுதாய பிரச்னையில் அவர்கள் எவ்வளவு தூரம் எழுத்தை அழுத்தமாகப் பயன்படுத்துகிறார்கள் என்பது புரிந்தது.  மதுராந்தகம் ராஜாராம், கேது விசுவநாத ரெட்டி, டி. காமேசுவரி (அற்புதமான சிறுகதை ஆசிரியர்-வெகு இயற்கையான உரையாடல்), முகமது காதிர் பாபு என்று பிரமிப்பூட்டக்கூடிய படைப்புகளை அவர் மொழிபெயர்ப்பு மூலம் படித்து ரசிக்க முடிந்தது.

மீரா ராகவேந்திர ராவிடம் அவருக்குப் பிடித்த பெண் எழுத்தாளர்கள் தெலுங்கில் யார் என்று கேட்டபோது, சிறிதும் தயங்காமல், டி. காமேசுவரி, கோடூரி கௌசல்யா தேவி, எட்டரப்புடி யதிஞ்சனா ராணி, மங்களா காண்டூர்  என்று ஒரு சின்னப் பட்டியல் கொடுத்தார்.  

மீரா எழுதிய இன்னொரு முக்கியமான புத்தகம், தாம் மேற்கொண்ட பயணங்கள் குறித்து.  ""எல்லாப் புகைப்படங்களையும் நான் என் சாதாரண டிஜிட்டல் அல்லாத கேமராவில் எடுத்தேன். அது காபி டேபிள் புக் ஆக வெளிவந்தது'' என்கிறார்.  ஸ்லைஸ் ஆப் லைப், "ஜர்னலிஸம் - திங்க் அவுட் ஆப் த பாக்ஸ்' , "சென்னை கொலாஜ்' ஆகியவை மீராவின் சில புத்தகங்கள்.

மீராவின் கணவர் ராகவேந்திர ராவ் நிதியியல் துறை வல்லுனர்.  இவர் எழுதும் அல்லது எடிட் செய்யும் தடி தடியான புத்தகங்கள் எல்லாவற்றையும் அமெரிக்க பதிப்பாளர்கள் வெளியிடுகிறார்கள்.  மனிதர் ரொம்ப அமைதி.  அலட்டிக்கொள்வதே இல்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.