விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

தெருவோர மக்களுக்கு உணவு!

​இயற்கை பெருஞ்சீற்றமாகட்டும்...  கரோனா  வைரஸ் தொற்றாகட்டும் முதலில் பாதிக்கப்படுபவர்கள்,  தெருவோரத்தில் வாழ்பவர்களே.

News image
Updated On :26 ஆகஸ்ட் 2020, 12:30 am

ந. ஜீவா


இயற்கை பெருஞ்சீற்றமாகட்டும்... கரோனா வைரஸ் தொற்றாகட்டும் முதலில் பாதிக்கப்படுபவர்கள், தெருவோரத்தில் வாழ்பவர்களே. அதிலும் கரோனா பொதுமுடக்க காலத்தில் வேலை செய்ய முடியாமல், தங்குவதற்கு ஓர் இடமும் இல்லாமல், ஒரு வேளை உணவுக்கும் வழியின்றி தவிக்கும்நிலை அவர்களுக்கு ஏற்பட்டுவிட்டது.

தெருவோரம் பசியால் சுருண்டு கிடந்தவர்களுக்கு உணவளித்தது ஓர் அமைப்பு. சமைத்த உணவை அவர்கள் இருக்கும் இடத்துக்குக் கொண்டு சென்று அளித்தனர் "ஃபுட் பேங்க் இந்தியா' என்ற அமைப்பினர். இப்போதும் தந்து கொண்டிருக்கின்றனர்.

ஃபுட் பேங்க் இந்தியா அமைப்பை உருவாக்கி செயல்பட்டுக் கொண்டிருக்கும் சிநேகா மோகன்தாஸூடன் பேசினோம்.

""தெருவோரம் வாழ்பவர்களுக்கு உணவளிக்கும் பணியை நாங்கள் கரோனா வைரஸ் தொற்றுக்கு முன்பாகவே தொடங்கி விட்டோம். சென்னையில் 2015 - ஆம் ஆண்டு ஒரு மாதத்துக்கும் மேலாக விடாமல் மழை பெய்தது. வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. வீடில்லாமல் தெருவாரத்தில் வாழ்ந்தவர்களின் நிலை படுமோசமாகியது. அப்போது சென்னை சைதாப்பேட்டை பகுதியில் உணவு வழங்கும் பணியை நாங்கள் செய்தோம். வீடு கட்டும்போது பயன்படுத்தும் பலகைகளை ஒன்றோடொன்று சேர்த்துக் கட்டி, படகு போலாக்கி அதில் சமைத்த உணவுகளை எடுத்துச் சென்று ஒவ்வொரு நாளும் 500 பேருக்கும் மேல் வழங்கினோம்.

வெள்ளம் சூழ்ந்து கொண்டதால் மின்சாரம் இல்லை. இரவு நேரங்களில் தீப்பந்தத்தை ஏந்திக் கொண்டு தண்ணீருக்குள் சென்று உணவளித்தோம். தண்ணீர் வடிய மூன்று நாள்களுக்கும் மேல் ஆனது. அதற்குப் பிறகு உணவு சமைக்கத் தேவையான அரிசி, பருப்பு, காய்கறி, மளிகைப் பொருள்கள் என எல்லாவற்றையும் எடுத்துச் சென்று கொடுத்தோம்.

இது தனியொருத்தியாக நான் மட்டும் செய்த பணி அல்ல. முகநூல் மூலமாக தொடர்பு கொண்டு நான் உருவாக்கிய குழுவின் பணி. நாங்கள் செய்த இந்தப் பணி எல்லாரும் எங்களைப் பற்றித் தெரிந்து கொள்ள உதவியது.

சிறுவயதில் இருந்தே அநாதை இல்லத்தில் உள்ள குழந்தைகளை வீட்டுக்கு அழைத்து வந்து உணவளிக்கும் வழக்கம் எங்கள் வீட்டில் இருந்தது. மூதாதையர்களின் நினைவுநாள், பிறந்தநாள்களின் போது அனாதை இல்லக் குழந்தைகளுக்கு உணவளித்து வந்தோம். அப்புறம் ஒவ்வொரு வியாழக்கிழமையும் தெருவோரங்களில் வாழ்பவர்களுக்கு உணவளித்து வந்தோம். அவ்வாறு தெருவோரத்தில் உள்ளவர்களுக்கு உணவளிக்கச் செல்லும்போது, சிறிது நேரத்திலேயே அவை தீர்ந்துவிடும். பெரிய அளவுக்கு நிறையப் பேருக்கு உணவளிக்கும் பணியைச் செய்ய வேண்டும் என்றால், அதற்கு நிறையப் பேர் வேண்டும் என்று நினைத்தேன். அதன் விளைவாக, முகநூல் மூலம் தொடங்கியதுதான் இந்த ஃபுட் பேங்க் இந்தியா அமைப்பு.

இதில் தற்போது 120-க்கும் அதிகமானோர் உறுப்பினர்களாக உள்ளனர். கல்லூரி மாணவர்களில் இருந்து ஓய்வு பெற்று வீட்டில் இருப்பவர்கள் வரை பல வயதினர் இதில் உள்ளனர். சென்னையில் பல பகுதிகளில் இந்த அமைப்பினர் இருக்கின்றனர். அவர்கள் வாழும் பகுதிகளில் உள்ள தெருவில் வாழும் மக்களுக்கு உணவளிக்கும் வேலையை அவர்கள் செய்கின்றனர்.

கரோனா வைரஸ் தொற்றால், பொது முடக்கம் அறிவிக்கப்பட்ட உடனேயே, நகரவீதிகள் முடங்கிவிட்டன. வீடு இல்லாதவர்களை தங்க வைப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த முகாம்களில் அவர்களைக் கொண்டு போய்ச் சேர்க்கும் பணியை நாங்கள் தொடங்கினோம். அவர்களுக்கு உணவு, முகக்கவசம், சானிடைசர் என எல்லாவற்றையும் தந்தோம்.

அதுபோன்று வேறுமாநிலங்களில் இருந்து இங்கு வேலை செய்ய வந்த கூலித் தொழிலாளர்கள், வேலையில்லாததால் ஆதரவற்றவர்களாகிப் போனார்கள். அவர்களுக்கும் உணவளித்தோம்.

நகரின் பல பகுதிகளில் தெருவில் வசித்து வந்த "குருவிக்காரர்கள்' என்று அழைக்கப்படுகிற மக்களுக்கும் உணவளித்தோம். உணவு அளிக்க முடியாத நிலைமைகளில் அவர்கள் சமைத்து உண்பதற்காக அரிசி முதலான பல பொருள்களைத் தந்தோம்.

வீட்டைவிட்டு வெளியே வந்தால், கரோனா வைரஸ் தொற்றிக் கொள்ளும் என்று தெரிந்தும், பயமில்லாமல் எங்கள் பணிகளைச் செய்தோம். எங்களுடைய குழுவைச் சேர்ந்த குணசீலன் என்பவருக்குக் கரோனா தொற்று உறுதியாகிவிட்டது. அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று கரோனாவில் இருந்து மீண்டு வந்து, பழைய படி தெருவார மக்களுக்கு உணவளிக்கும் பணியைச் செய்து வருகிறார்.

இதற்காகும் எல்லாச் செலவுகளையும் நாங்களே ஏற்றுக் கொள்கிறோம். யாரிடமும் இதற்காகப் பணம் வாங்க மாட்டோம். யாராவது உணவு சமைத்துத் தந்தால், அதைப் பெற்றுக் கொண்டு, விநியோகம் செய்கிறோம். அரிசி, பருப்பு, எண்ணெய் போன்ற பொருள்களை யாராவது அளித்தால் அதைப் பெற்றுக் கொள்கிறோம்.

நான் இவ்வாறு உணவளிக்கும் பணியைத் தொடங்கியபோது வீட்டில் உள்ளவர்கள் யாரும் தடுக்கவில்லை. ஆனால் பிறருக்குச் செய்யக் கூடிய உதவியை எல்லாருக்கும் தெரியும்படி செய்ய வேண்டுமா? என்று கேட்டார்கள். நல்லது செய்யும்போது எல்லாருக்கும் தெரியும்படி அதைச் செய்வது நல்லது; அப்போதுதான் அதைப் பார்த்து பிறரும் நல்லது செய்வார்கள் என்று நான் நினைத்தேன். நாங்கள் செய்வதைப் பார்த்து பல இடங்களில் எங்களைப் போலவே தெருவோரங்களில் வசிப்பவர்களுக்கு உணவளித்து பலர் உதவுகிறார்கள்.

வருங்காலத்தில் தெருவோரம் வாழ்பவர்களுக்கு உணவளிக்க, சமையல் செய்யும் மையங்களை பல இடங்களில் ஏற்படுத்த வேண்டும். சென்னை மிகவும் பெரிய நகரம் என்பதால், முக்கியமான பகுதிகளில் இந்த சமையல் மையங்கள் அமைக்கப்பட்டு, அதில் 3 வேளைக்கான உணவுகள் தயாரிக்கப்பட வேண்டும். அங்கிருந்து எடுத்துச் சென்று சென்னையின் பல பகுதிகளிலும் அவற்றை விநியோகம் செய்ய வேண்டும். இதுவே எங்களுடைய திட்டம். இதற்காக மத்திய அரசின் "ஃபுட் சேஃப்டி அண்ட் ஸ்டாண்டர்ஸ் அதாரிட்டி ஆஃப் இந்தியா' (எஃப்எஸ்எஸ்ஏஐ) என்ற அமைப்புடன் சேர்ந்து செயல்படத் தயாராக இருக்கிறோம்'' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.