நம்பிக்கை ஒளியை விதைக்கும் பெண்!

"வருங்காலத் தலைமுறைக்கு விஷம் இல்லாத உணவைத் தரணும். என்னைப் போன்ற பார்வை இல்லாதவர்களும் நம்மால் எதுவும் முடியாதுனு நினைக்காம தொடர்ந்து முயற்சி செய்து வெற்றி பெறணும் இதுதான் என் ஆசை'.
நம்பிக்கை ஒளியை விதைக்கும் பெண்!

"வருங்காலத் தலைமுறைக்கு விஷம் இல்லாத உணவைத் தரணும். என்னைப் போன்ற பார்வை இல்லாதவர்களும் நம்மால் எதுவும் முடியாதுனு நினைக்காம தொடர்ந்து முயற்சி செய்து வெற்றி பெறணும் இதுதான் என் ஆசை'. பார்வையில் ஒளியில்லை என்றாலும் பேசும் ஒவ்வொரு வார்த்தையிலும் ஒரு கோடி நம்பிக்கை ஒளியை விதைக்கிறார் கோவை, தீத்திப்பாளையம் பகுதியைச் சேர்ந்த செல்வராணி. ஓய்வுக்கு "நோ' சொல்லும் 57 வயதான இவரின் பொழுதுபோக்கு, முழு நேர வேலை எல்லாமே இவர் அமைத்திருக்கும் மாடித்தோட்டம்தான். 

20 வகையான காய்கறிகள், கீரைகள், கொடி வகைகள், ஆரஞ்சு பழ மரம், பப்பாளி மரம் போன்றவற்றை அமைத்துப் பராமரித்து வருகிறார். சிறிய நிலம் வாங்கி இயற்கை விவசாயம் செய்ய வேண்டும் என்ற இலக்குடன் பயணித்து வரும் செல்வராணி நம்மிடம் பகிர்ந்ததாவது:

""நான் பிறந்து வளர்ந்தது எல்லாமே திருநெல்வேலியில்தான். அப்பா, அம்மா இருவருமே ஆசிரியர். நான் 8-ஆம் வகுப்பு படிக்கும்போதே அம்மா தவறிவிட்டார். 

அம்மா இறந்தவுடனேயே எனக்குத் திருமணம் செய்து வெச்சுட்டாங்க. மும்பையில்தான் வசித்து வந்தோம். என் இரண்டாவது குழந்தை பிரசவ சமயத்தில் எனக்கு டைஃபாய்டு காய்ச்சல் வந்து நரம்பு பாதிச்சதுல கண் பார்வை போய்விட்டது. கணவர் ஏர் இந்தியாவில் பணியாற்றி ஓய்வுபெற்றதுமே நாங்கள் கோயம்புத்தூர் வந்துவிட்டோம்.

வேளாண் பல்கலைக்கழகத்தில் மாடித்தோட்டம் அமைப்பது குறித்து பயிற்சி எடுத்துக்கிட்டேன். அதுக்கப்பறம் நீண்ட நெடிய முயற்சிக்குப் பின்னர் கடந்த நான்கு வருடமா வெற்றிகரமாக மாடித்தோட்டத்தை செயல்படுத்திட்டு வரேன். செடிகளைத் தொட்டுப் பார்த்தே அதுக்கு நோய் தாக்கியிருக்கா, ஆரோக்கியமா இருக்கிறதானு கண்டுபிடிச்சுடுவேன். தக்காளி, வெண்டைக்காய், கத்தரிக்காய், காலிஃபிளவர், முள்ளங்கி, பச்சை மிளகாய், அவரைக்காய்,  கீரை வகைகள் எல்லாம் தோட்டத்தில் வெச்சிருக்கேன்.

என் வீட்டுக்குத் தேவையான காய்கறிகளை இங்கிருந்தே எடுத்து பயன்படுத்திக்குவேன். கடைகளில் காய்கறி வாங்குவது இல்லை. தேவைப்படுறவங்களுக்கு கொடுத்துட்டும் வரேன். 

இயற்கை உரங்கள் பயன்படுத்துவதால் காய்கறிகளில் அதிக சுவையும், ஆரோக்கியமும் கிடைக்குது. வருங்கால சந்ததிகள் ஆரோக்கியமாக வாழ நம் ஒவ்வொருவருடைய வீட்டிலும் மாடித்தோட்டம் கட்டாயம் அமைக்கணும்.

நான் மாடித்தோட்டம் அமைக்க 12,000 ரூபாய்தான் செலவு செய்தேன். அவ்வப்போது உரத்துக்கு செலவு செய்தால்போதும். சிறிய இடமும், இரண்டு வேளை தண்ணீரும், ஒருநாள் விட்டு ஒருநாள் பஞ்சகவ்யத்தை தெளிச்சு வந்தாலே போதும்.  அழகான மாடித்தோட்டம் உருவாகிவிடும். நானும் என் கணவரும் மருத்துவமனைக்குச் சென்றதே இல்லை. இங்க இருக்கும் செடிகளே நம் உடலுக்கு ஆரோக்கியத்தைக் கொடுத்துடும். 

நிறைய மாணவர்கள் வீடுகளுக்கே  வந்து சந்தேகங்களைக்  கேட்டு தெரிஞ்சுகிட்டு, விதைகளையும், நாற்றுகளையும் வாங்கிட்டுப் போறாங்க. இது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியையும், மனநிறைவையும் கொடுக்கிறது.

நான் தொலைக்காட்சியில் சமையல் நிகழ்ச்சிகளும் செய்து வருகிறேன். பலரும் கண்ணு தெரியலைனா வீட்டில் அடைந்து கிடக்கணும்னு நினைக்கிறாங்க. உனக்கே கண்ணு தெரியல உன்னால என்ன செய்ய முடியும், இதெல்லாம் சரிவராதுனு இப்பவும் சொல்லிட்டுதான் இருக்காங்க. அப்படி சொல்லும்போது எனக்கு கோபம் வரும். 

அதுக்காக எல்லாம் எப்பவும் நான் மனசைத் தளரவிடுவதில்லை. என்னால் எதையும் செய்ய முடியும்ங்கிற தன்னம்பிக்கை எனக்கு இருக்கு. வீட்டு வேலைகள் எல்லாமே செய்வேன். கூடை பின்னுவேன். இனி அடுத்தகட்டமாக நிலம் பார்த்துட்டு இருக்கேன். விரைவில் முழுநேர இயற்கை விவசாயி ஆவேன்'' என்று நம்பிக்கையுடன் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com