

உலக அளவில் பலரை பலிவாங்கியிருக்கிற கரோனா தீநுண்மி நோய்த்தொற்று நமக்கும் வந்து விடுமோ என்கிற பயம் எந்த மனிதரையும் விட்டு வைத்ததாகத் தெரியவில்லை. இந்த நோய் இனிமேல் நிரந்தரமாக நிலைத்திருக்கும் என்பதால், மக்கள் தாங்களாகவே தற்காப்பு நடவடிக்கைகளை எடுத்துக்கொள்ள வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரித்துக் கொள்ள ஒவ்வொருவரும் கடும் வெயிலையும் பொருட்படுத்தாது வைட்டமின் மாத்திரைகளையும், கபசுரக் குடிநீரும் வாங்குவதற்காக கால்கடுக்க மருந்துக் கடைகள் முன்பாக பலரும் வரிசையில் காத்திருந்தோம். ஆனால், எந்த நோயையும் அழிக்க வல்ல பேராயுதங்கள் நம் வீட்டு சமையலறையில் உள்ள அஞ்சறைப் பெட்டியிலிருக்கிறது என்பதை மறந்து விட்டோம். நாகரிகத்தின் வளர்ச்சி நம்மை நல்ல பல விஷயங்களிலிருந்து ஒதுக்கித் தள்ளியிருக்கிறது.
எந்த வீடாக இருந்தாலும் நமது வீடுகளில் "அஞ்சறைப்பெட்டி' இல்லாமல் இருக்காது. இது மனிதர்களுக்கு வரும் எந்த நோயையும் தீர்க்கும் அற்புத மருந்துப் பெட்டி. இந்தப் பெட்டியில் மஞ்சள், மிளகு, கடுகு, சீரகம், சோம்பு எனச் சமையலுக்குத் தேவையான அனைத்தையும் உள்ளடக்கியதாக இருக்கும். இந்த ஐந்திலும் பட்டியலிடவே முடியாத வகையில் ஏராளமான மருத்துவக் குணங்கள் உள்ளன.
இது ஆரோக்கியப் பெட்டி. இவை ஒவ்வொன்றும் மிகச் சிறந்த நோய் எதிர்ப்புச் சக்தியைக் கொண்டவை, இவை புற்றுநோயையும் குணப்படுத்தும் வல்லமை உடையவை. முக்கியமாக கரோனா தீநுண்மி நோய்த்தொற்றின் அறிகுறிகளான சளி, தும்மல், தலைபாரம், காய்ச்சல், தொண்டை வலி, மூச்சு விட சிரமப்படுவது, மூக்கடைப்பு உள்ளிட்ட அனைத்தையும் போக்கும் அற்புத மருந்துப் பொருள்கள் இந்த அஞ்சறைப் பெட்டியில்தான் இருக்கின்றன.
அந்தக் காலத்தில் மரத்தால் செய்யப்பட்ட அஞ்சறைப் பெட்டிகளே இருந்தன. செவ்வக வடிவில் 4 சதுர உள்ளறைகளும், நீள் வடிவத்தில் ஒரு உள்ளறையுமாக 5 அறைகள் உள்ள பெட்டி என்பதால், இதற்கு அஞ்சறைப் பெட்டி என்ற பெயராயிற்று. இதன் மூடி இழுப்பு முறையில் திறக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கும். இது இப்போது மருவி அஞ்சரப் பெட்டி எனப்படுகிறது.
சமையலில் கடுகின் பங்கு அதிகமாக இருப்பதால் பெண்கள் இப்போது இந்தப் பெட்டியை "கடுகுடப்பா' என்கிறார்கள். மரத்தால் ஆன அஞ்சறைப் பெட்டிகள் இப்போது புழக்கத்தில் இல்லை. பிளாஸ்டிக், சில்வர், அலுமினியம் ஆகியனவற்றால் செய்யப்பட்டவையே இருக்கின்றன.
மணமகள் திருமணம் முடிந்து சீர் கொண்டு செல்லும்போது படி, உலக்கை, அஞ்சறைப் பெட்டி, வெற்றிலைப் பெட்டி, சிணுக்கருக்கி ஆகியனவும் கொடுக்கும் வழக்கம் அந்தக்காலத்தில் இருந்தது. இந்தக் காலத்தில் மிக்ஸி, கிரைண்டர், பிரிட்ஜ், வாஷிங் மெஷின் இவற்றையெல்லாம் சீராகத் தருகிறார்கள்.
இவை மனிதர்களைச் சோம்பேறியாக்கி விடுவதுடன், நோய் எதிர்ப்புச் சக்தியையும் குறைத்து விடும். இன்றைய இளைய தலைமுறைக்கு அஞ்சறைப் பெட்டியும், வெற்றிலைப் பெட்டியும், சிணுக்கருக்கியும் என்னவென்றே தெரியாத நிலை உள்ளது.
நமது கிராமத்துக்குள் கரோனா தீநுண்மி நோய்த்தொற்று வந்துவிடக் கூடாது என்பதற்காக தெருத் தெருவாக மஞ்சள் நீர் தெளித்ததை தொலைக்காட்சிகளில் பார்த்தோம். மிகச் சிறந்த கிருமிநாசினி என்பதால் வீட்டு வாசற்படிகளிலும், நிலைக் கதவுகளிலும் மஞ்சள் பூசுவதும், வீடு முழுவதும் மஞ்சள் கரைத்தும் தெளிக்கப்படுகிறது. திருவிழாக் காலங்களில் பக்தர்கள் பலரும் ஒரு வெள்ளைத் துணியை மஞ்சள் கலந்த நீரில் முக்கி, மஞ்சள் நிறத் துணியாக்கி, அதற்குள் ஒரு மஞ்சளையும் வைத்து கைகளில் காப்பாக கட்டிக் கொள்வது வழக்கம்.
திருவிழாவைக் காண வரும் பக்தர்களிடமிருந்தும், கூட்ட நெரிசலிலும் வெளியேறும் தும்மல், இருமல், மூச்சுக் காற்று ஆகியன மூலமாக எந்தவித நோய்த்தொற்றும் வந்துவிடக் கூடாது என்பதற்கான தடுப்பு நடவடிக்கைக்காகவே கையில் காப்பு கட்டப்படுகிறது.
எந்த நோயும் மக்களுக்கு பரவிவிடக் கூடாது என்பதற்காக அன்றே நம் முன்னோர்கள் சொல்லி வைத்துதான் "மஞ்சள் இருக்க அஞ்சேல்' என்ற பழமொழி. "ஏழைகளின் குங்குமப்பூ' என்றும் மஞ்சளைச் சொல்லுவதும் உண்டு.
முகத்திற்கு மினுமினுப்பையும், வசீகரத்தையும் தரும் என்பதால், பெண்களுக்கு முகப் பூச்சாகவும் பயன்படுகிறது. மஞ்சள் தேய்த்துக் குளிப்பதற்குப் பதிலாக இன்று பெரும்பாலான பெண்கள் ரசாயனம் கலந்த கிரீம்களையே பூசுகிறார்கள். ஆரோக்கியம், ஆன்மிகம், அழகு என மூன்றுக்கும் தொடர்புடைய இந்த மங்களத் திரவியம் நம் வீட்டு சமையலறையில் உள்ள அஞ்சறைப் பெட்டியில்தான் இருக்கிறது.
"பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் சாப்பிடலாம்' என மிளகின் மகத்துவத்தை ஒரே வரியில் சொல்லி இருக்கிறார்கள்."கருப்புத் தங்கம்' என்ற பெயரும் உண்டு.
"கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது' என்ற பழமொழி கடுகுக்கு உண்டு. குடலில் எந்த நோய்த்தொற்றும் வந்து விடாமல் பாதுகாப்பது உள்பட பல்வேறு மருத்துவக் குணங்கள் உடையது கடுகு.
வாயுத் தொல்லைகள், குடல் புண்கள் தீர்ப்பது உள்பட பல்வேறு மருத்துவக் குணமுடையது சீரகம். வயிற்றைச் சீராக வைப்பதில் முக்கியப் பங்கு வகிப்பதால் இதனை (சீர்+அகம்) சீரகம் என்கிறார்கள். உயர் ரத்த அழுத்த நோய் உள்பட பல நோய்களைத் தீர்க்கும் அருமருந்தே சீரகம்.
"சுக்குக்கு மிஞ்சின மருந்தில்லை, சுப்பிரமணியசுவாமிக்கு மிஞ்சிய தெய்வமில்லை' என்கிறது சுக்கின் மகத்துவம்.
கடந்த 1910-ஆம் ஆண்டில் ஸ்பானிஷ் ஃப்ளு பல்லாயிரக்கணக்கான மக்களைக் கொன்று குவித்தது. அந்த நோய்த்தொற்றுக்கு எதிராக "பெருங்காயம்' செயல்படுவது கண்டுபிடிக்கப்பட்டது. பெருங்காயத்தை தங்களது கழுத்தில் "தாயத்து' மாதிரி அணிந்திருக்கிறார்கள் அமெரிக்கர்கள். "கடவுளின் அமிர்தம்' என்றும் பெருங்காயத்திற்கு பெயரிட்டிருக்கிறார்கள்.
இவை தவிர வெந்தயம், பூண்டு, ஏலக்காய், எள், லவங்கப்பட்டை உள்ளிட்ட மருத்துவக் குணங்கள் உடைய அத்தனையும் நம் வீட்டு சமையலறையில்தான் இருக்கிறது.
இவற்றையெல்லாம் மறந்ததாலும், எப்படிப் பயன்படுத்துவது எனத் தெரியாததாலும் வீட்டிலேயே மருந்துகளை வைத்துக் கொண்டு மருந்துக் கடைகளை நோக்கி ஓடியிருக்கிறோம். எனவே, வீட்டு மருந்துப் பெட்டியான அஞ்சறைப் பெட்டியிலும், சமையலறையிலும் இருக்கும் மருந்துப் பொருள்களைப் பயன்படுத்தி கரோனா என்னும் தீநுண்மியை விரட்டியடிப்போம். நோயில்லாமல் வாழ்பவர்கள் மட்டுமே வசதியானவர்கள், நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.