தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு! புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்!விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
/

மகளிர்  முன்னேற்றத்திற்காக  முதன் முதலாகப் போராடியவர்!

சூசன் பிரௌனல் ஆன்டோனி என்ற அமெரிக்கப் பெண்மணி 19-ஆவது நூற்றாண்டிலேயே மகளிர் முன்னேற்றத்திற்காக முதன்முதலில் பணியாற்றியவர் ஆவார்.

News image
Updated On :2 செப்டம்பர் 2020, 12:30 am

சூசன் பிரௌனல் ஆன்டோனி என்ற அமெரிக்கப் பெண்மணி 19-ஆவது நூற்றாண்டிலேயே மகளிர் முன்னேற்றத்திற்காக முதன்முதலில் பணியாற்றியவர் ஆவார்.

ஆரம்பத்தில் பள்ளி ஆசிரியையாகப் பணிபுரிந்து வந்த இந்த மாதரசி பின்னர் மதுவிலக்கு இயக்கத்தில் இணைந்தார். இந்த இயக்கம் போதை தரும் ஆல்கஹால் லாகிரிப் பொருள்களைத் தயாரிப்பதையே முழு மூச்சுடன் எதிர்த்து வந்தது.

இருந்தும் சூசன் அம்மையார். பெண் என்ற காரணத்தினால் கூட்டங்களில் கலந்து கொள்ளவோ, மேடைகளில் பேசவோ அரசு இவரை அனுமதிக்கவில்லை.
எதிர்ப்புகளைக் கண்டு சற்றும் கலங்காத இந்தப் பெண்மணி "மாதர் மது
விலக்கு இயக்கம்' என்ற ஒரு அமைப்பை பரபரப்பான சூழ்நிலையில் தொடங்கினார்.

கி.பி. 1889 -ஆம் ஆண்டில் எலிஸபெத் ஸ்டான்டன் என்ற தோழியுடன் தேசிய வாக்குரிமைச் சங்கத்தை நிறுவினார். அக்காலகட்டத்தில் அமெரிக்கப் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கப்படவில்லை. இந்தச் சங்கத்தின் லட்சியம் வயது வந்த அனைத்துப் பெண்களுக்கும் வாக்குரிமை அளிக்கப்பட வேண்டும் என்பதே. இதற்காக சூசன் பல போராட்டங்களை கையில் எடுத்தார். அரசுக்கு எதிராகப் போராடினார்.

கி.பி. 1892- ஆம் ஆண்டில், ஜனாதிபதி தேர்தலில் சூசன் வாக்கு அளிக்கச் சென்றபோது கைதாகி அபராதம் விதிக்கப்பட்டார்.

மேலும், மேலும் எத்தனையோ தொந்தரவுகளுக்கு இடையே சற்றும் தளராமல் பல ஆண்டுகள் போராடினார். அவருடைய விரோதிகளின் பாராட்டுகளையும் பெற்றார். அமெரிக்கப் பெண்கள் சூசனுக்கு ஆதரவாக நின்று குரல் கொடுத்தார்கள். போராட்டங்கள் தொடர்ந்தன. எனினும் அமெரிக்க அரசு சூசனின் கோரிக்கைக்கு சற்றும் செவி சாய்க்கவில்லை.

ஆனால், சூசனின் விருப்பம் முப்பது ஆண்டுகளுக்குப் பின் அதாவது 1920- ஆம் ஆண்டில் நிறைவேறியது. ஆம். அரசு அவரது கோரிக்கையை முழு மனதுடன் ஏற்றுக் கொண்டது. அதுமட்டுமின்றி இதற்காக பெரிய விழாவையும் கோலாகலமாக நடத்தியது அமெரிக்க அரசு.

ஆனால், இதைக் கண்டுகளிக்க மாதரசி சூசன் அம்மையார் உயிரோடு இல்லை. கொண்டாட்டத்திற்குச் சில ஆண்டுகள் முன்பே காலமானார்.

அம்மையாரின் உருவம் பதித்த நாணயங்களையும், அஞ்சல் தலைகளையும் வெளியிட்டுப் பெருமைப் படுத்தியது அமெரிக்க அரசு. மகளிர் முன்னேற்றத்திற்காகச் சிறந்த முறையில் பணியாற்றிய முதல் பெண்மணியான சூசனின் உருவம் பதித்த நாணயம்தான் அமெரிக்க வரலாற்றிலேயே முதல்முதலாக பெண் உருவம் பதித்த நாணயம் ஆகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.