கதை சொல்லும் குறள்- 14: நேர்மைக்குப் பரிசு!

""ராசா தங்கராசு, சீக்கிரம் வாப்பா, இட்டிலி சூடாறிப்போகுது''.""இதோ வந்துட்டேம்மா'' என்று குரல் கொடுத்தான் தங்கராசு.
கதை சொல்லும் குறள்- 14: நேர்மைக்குப் பரிசு!


""ராசா தங்கராசு, சீக்கிரம் வாப்பா, இட்டிலி சூடாறிப்போகுது''.
""இதோ வந்துட்டேம்மா'' என்று குரல் கொடுத்தான் தங்கராசு.

பூஜை அறை என்று எல்லாம் பெரிசாக ஒன்றும் இல்லை. ஒத்த அளவு கொண்ட ஓலைக் குடிசை. முன்பக்கத்தை சமையல் செய்வதற்காகவும், நடு இடம் உட்கார்ந்து சாப்பிட, அதையே தாயும் மகனும் படுத்து உறங்கும் இடமாகவும் பயன்படுத்தினார்கள். 

அறையின் மூலையில் இரண்டு டிரங்கு பெட்டிகள், ஒன்றில் தாய் கருப்பாயியின் இரண்டு புடவைகள், மற்றொன்றில் தங்கராசுவினுடைய இரண்டு பேண்ட், சட்டைகள். இந்தப் பெட்டிகளுக்கு மேலே கூரையைத் தாங்கி இருந்த சுவற்றில் இரண்டு படங்கள், ஒன்றில் முருகக் கடவுள் கையில் வேலுடன் புன்னகைக்க, மற்றொன்றில் தங்கராசுவின் அப்பா முனியன் சிரிப்பைத் தொலைத்த முகத்துடன் காட்சி தந்தான்.

படங்களின் மேலே சருகாகக் காய்ந்து கிடந்த எப்பொழுதோ, போட்ட பூச்சரத்தைக் களைந்து எறிந்தான் தங்கராசு. புதுப்பூவைப் போட ஏது காசு?

"முருகப்பெருமானே, இன்றுதான் புது வேலையில் சேரப் போறேன். முதல் மாச சம்பளம் சுளையா ஐயாயிரம் ரூபாய் வரப்போகுது. பிறகு என்ன உனக்கும், என் நைனாவுக்கும் தினம், அரை முழம் பூ வாங்கிப் போடறேன்' என்று வேண்டிக் கொண்டு, ஒரு தகர டப்பாவில் வைக்கப்பட்டிருந்த திருநீறை எடுத்து நெற்றியில் இட்டுக் கொண்டு தாயை நோக்கி வந்தான்.

""ஆத்தா, தினம் பழைய சோறைத்தானே தருவே, இன்னைக்கு  இன்னா இட்டிலியைக் கொடுக்கறே''.

""ஏன் ராசா, என் வயத்துல பூத்த ஒத்த பூவு நீ, உனக்கு இல்லாதது இந்த ஆத்தாவிடம் என்ன இருக்கு சொல்லு? பண்டம், பாத்திரம் கழுவி அதுலே கிடைக்கிற துட்டுலே, உனக்கு அரை வயிறு கஞ்சியாவது ஊத்தி வளர்த்தேன். எப்படியோ உன்னை பன்னென்டாம் கிளாஸ் வரைக்கும் படிக்க வெச்சுட்டேன். பண்ணையார் அம்மா, கைல கால்லே விழுந்து, அவங்க புருஷன் நடத்துற "தண்டாயுதபாணி பஸ் சர்வீஸ்லே' உனக்கு ஒரு வேலையும் வாங்கிக் கொடுத்துட்டேன், அந்த வேலையைக் காப்பாத்தி நல்ல பேரை எடு, கருப்பாயி மகன் தடம் புரண்டு போனான்னு ஒருத்தர் கூட பேசிடக்கூடாது.

எனக்கு இருபது வயசு ஆனப்பவே, உன் அப்பா, உன்னை என் கையிலே குடுத்துட்டு, பாம்பு கடிச்சி செத்துப் போயிட்டாரு. ஒன்னும் புரியாத வயசு, ஆனா வைராக்கியம், நெஞ்சு முழுசும் பரவிக் கிடந்துச்சி. மனசு தடுமாறாம, வழி தவறாம, வாழ்க்கையை ஓட்டி, ஏழ்மையிலும் உன்னை யோக்கியனா, நல்லவனா வளர்த்திருக்கேன், என் பெயரைக் காப்பாத்து''.

ஆத்தா பேசுவதை இமைகள் விரிய கேட்டுக் கொண்டு இருந்தான் தங்கராசு.

""ஆங், இட்லி ஏதுன்னு கேட்ட இல்ல. இன்னைக்கு நீ புதுசா வேலைக்குப் போறேன்னு, ஒரு வாரம் நாயர் கடையிலே நான் குடிக்கிற டீயைத் தள்ளிட்டு, காசைச் சேர்த்தேன். அந்தக் காசுலே நம்ம இட்டிலி கடைப் பொன்னிகிட்டே சுடச்சுட இட்டிலி நாலையும், தேங்காய்ச் சட்டினியையும் வாங்கியாந்தேன்''.

""பாவி மவ, பேசியே இட்டிலியை ஆற உட்டுட்டேன். சாப்பிடு ராசா, சாப்பிடு''.

வார்த்தைகள் வெளிவராமல் தங்கராசுடன் சண்டையிட்டன. ஒரு துண்டு இட்டிலியைப் பிட்டு வாயில் போட்டிருந்தான். அது உள்ளே இறங்க மறுத்தது. பலவிதமான உணர்ச்சிகள் அவன் உள்ளத்தை மெழுகென உருக வைத்தன.

இது வரைக்கும் பொத்திப் பொத்தி உன்ன அடை காத்தேன், இன்னையிலே இருந்து  வெளி உலகத்தைப் பாக்கப்போறே, உஷார், வழி தவறாதே, நல்லவனா நட, நல்ல பெயரை வாங்கு. இதுவே இந்த ஆத்தாவுக்கு நீ செய்யிற கைம்மாறு''.

இரண்டு நாட்கள் வேகமாக நகர்ந்து முடிந்தன. தங்கராசுவின் ஊரான கொண்டலம்பட்டியிலிருந்து, புதுச்சேரி வழியாக சென்னைக்குச் செல்லும் பேருந்தில் நடத்துநராக வேலை பார்ப்பது அவனுக்கு மிகவும் பிடித்துப் போய்விட்டது.

இங்கே இருந்து சென்னை செல்ல நாலரை மணி நேரம், பிறகு சிறிது இடைவெளிக்குப் பிறகு மீண்டும் அங்கே இருந்து கொண்டாலம்பட்டி வந்து சேர அதே நேரம் என்று பத்து மணி நேர உழைப்பு அவனுக்கு அலுக்கவில்லை. முதல் மூன்று மாதங்களுக்கு ஐயாயிரம் ரூபாய் சம்பளம். பிறகு பத்தாயிரம் வரை போகும் என்று உறுதி அளித்திருந்தார்கள்.

முதல் மாத சம்பளத்தில் ஆத்தாவுக்குப் புதுப்புடவை வாங்கணும். முருகன், அப்பா படத்துக்கு தினம் அரைமுழம் புதிய பூவை கொடுக்கும்படி பூக்காரி முனியம்மாவிடம் சொல்ல வேண்டும். இதைத் தவிர பொன்னிகிட்ட மாசத்தில் பதினைந்து நாட்கள் அம்மாவுக்கு இட்டிலியை காலை ஆகாரமாகக் கொடுக்க, கொஞ்சம் பணத்தை அட்வான்ஸாகக் கொடுக்க உறுதி பூண்டான்.

இரண்டு வாரங்கள் ஓடி மறைந்தன. அன்றைய தினம், பயணிகள் டீ சாப்பிடவும், இயற்கை உபாதையை இறக்கி வைக்கவும் பதினைந்து நிமிடங்கள் ஓர் உணவகத்தில் பேருந்தை நிறுத்துவது வழக்கம், என்பதால் பேருந்து அங்கே நிறுத்தப்பட்டது.

""டேய் தங்கராசு'', உரிமையுடன் அவன் தோளில் கையைப் போட்டான் ஓட்டுநராக வேலை பார்க்கும் மாரியப்பன்.

""என்ன அண்ணே'' தன்னைவிட வயதில் மூத்தவர் என்பதால் பவ்வியமாகக் கேட்டான் தங்கராசு.

""ஏன்டா, இதோ இந்த பாண்டிச்சேரி பேருந்து நிலையத்தை ஒட்டியிருக்கும் உணவகத்தில் கடந்த இருபது வருஷமா பேருந்தை நிறுத்தறேன். இதுவரை குடிக்கிற டீக்கும், சாப்பிடற நொறுக்குத் தீனிக்கும் காசு கொடுக்கறது இல்லை. நீ எதைக் கொடுத்தாலும் சாப்பிடறது  இல்லையாம், அப்படியே எப்பவாவது டீயை சாப்பிட்டாலும் காசு கொடுத்திடறியாமே. அப்ப நீ நல்லவன்... நாங்க எல்லாம் கெட்டவங்களா?''

""ஐயோ, அப்படி இல்ல அண்ணே. அவங்க பொருளை விக்கறவங்க, நாம சும்மா சாப்பிட்டா அவங்களுக்கு நஷ்டம்தானே''.

என்னடா நஷ்டம்? நாம இவ்வளவு பயணிகளை இங்கே சாப்பிட இறக்கிவிடறோம் இல்ல, அதனாலே அவங்களுக்கு எவ்வளவு லாபம்? நமக்கு தரதுல என்ன நஷ்டம் வந்துடும் சொல்லு.

டேய், இன்னும் ஒண்ணு உன்கிட்ட சொல்லணும்'', என்று சொல்லியபடி மாரியப்பன் அவனுடைய பேண்ட் பாக்கெட்டில் இருந்து, கத்தையாகப் பேருந்தில் கொடுக்கப்படும் டிக்கெட்டுகளை வெளியே எடுத்தான். 

""அண்ணே, இது...''

""இது நம்ப தண்டாயுதபாணி பஸ் சர்வீஸ்லே கொடுக்கற டிக்கெட்டைப் போலவே போலியாக அச்சடிச்சி நாங்க வெச்சிருக்கோம்''.

""அண்ணே..''

""டேய், கத்தாதேடா, நான் மட்டும் இல்ல, இந்த கம்பெனிலே பல ரூட்டுங்கள்ல வேலை பார்க்கிற ஓட்டுநர்கள் பலர் இப்படி அச்சடிச்சி வெச்சிருக்கோம். பாண்டிச்சேரியைத் தாண்டினவுடனே அவ்வளவு செக்கிங் இருக்காது. அங்கங்கே ஒரு பத்துபேருக்குக் குறையாம இந்தப் போலி டிக்கெட்டுகளைத் தள்ளிவிடு. வர பணத்தை நாம இரண்டு பேரா பங்கிட்டுக்குவோம். யாருக்கும் இது தெரிய வராது. என்னா புரியுதா.

ஏன் இப்படி முழிக்கிற? எல்லா நாளும் இப்படி செய்ய மாட்டோம்.

எப்ப கூட்டம் பெருசா வரும்னு எங்களுக்கு நல்லாத் தெரியும். அந்த சமயத்துக்குத் தகுந்தாப்போல தேதி போட்டு அச்சடிச்சிடுவோம்''.

வெலவெலத்துப் போனான் தங்கராசு. ""அண்ணே என்னால் இப்படியெல்லாம் பண்ணமுடியாது, எனக்கு இப்படிப்பட்ட பணம் வேணாம்''.

""டேய், வேண்டாம்டா, எங்களைப் பகைச்சுக்காதே, வெளியே சொன்னா உன்னைக் கொல்லவும் தயங்கமாட்டோம். எங்களுக்கு என்று ஒரு யூனியன் இருக்கு''.

""யூனியன் என்பது உரிமைகளைத் தட்டிக் கேட்க, இப்படி அநியாயமா பணம் சம்பாதிக்க இல்ல.''

""பெரிய புத்தர் இவரு. நியாயம் சொல்ல வந்துட்டாரு''.

""காந்தி பொறந்த மண்ணிலே பொறந்து ஏன் உங்களுக்கு எல்லாம் இப்படிப் புத்தி போகுது?''

""சரி... சரி, நேரம் ஆயிடுச்சு உனக்கு ஒரு வாரம் டைம் தரேன், அதுக்குள்ள மனசை மாத்திக்கோ'' என்று சொல்லியபடி சென்றுவிட்டான் மாரியப்பன்.
மனம் பொறுக்காமல் தன் தாய் கருப்பாயியிடம், தங்கராசு அனைத்தையும் சொல்லிப் புலம்பினான்.

கருப்பாயி அந்த விஷயத்தைப் பண்ணையார் மனைவியின் காதில் போட, பெரிய பூகம்பம் வெடித்தது. பல புல்லுருவிகள் அடையாளம் காணப்பட்டு, வேலையிலிருந்து நீக்கப்பட்டனர்.

வேலை போனவர்களில் பலர் சிறைச்சாலைக்குச் சென்றனர், சிலரை எச்சரித்துப் பணிநீக்கம் செய்தனர். மனம் கொதித்துப்போன காளான்கள், தங்கராசுவைப் பழிவாங்க சமயம் பார்த்திருந்தனர்.

முதல் மாதச் சம்பளத்தை எண்ணிப் பார்த்த தங்கராசு அதிர்ந்து நின்றான்.

""ஐயா, தவறுதலாக எனக்குப் பத்தாயிரம் ரூபாய் கொடுத்து விட்டீர்கள்'' என்றான். அதற்கு அங்கே காசாளராக வேலை பார்ப்பவர் சொன்னார்,

""தங்கராசு, உன்னுடைய ஊதியத்தை ஐயாதான் பத்தாயிரத்துக்கு உயர்த்திவிட்டார். இது உன் நேர்மைக்குக் கிடைத்த பரிசு'' என்றார்.

தங்கராசு பெருமகிழ்ச்சி அடைந்தான். கடைத்தெருவுக்குச் சென்று ஆத்தாவுக்குப் புதுப்புடவை எடுத்தான். இனிப்பு, காரப் பொட்டலங்கள், முருகன், அப்பா படத்திற்கு முழுசாக இரண்டு முழம் பூவை வாங்கிக் கொண்டான்.

இரவு மணி பதினொன்றைத் தாண்டியிருந்தது. பொடிநடையாக, வீட்டை நோக்கி நடந்து, ஒரு சந்தில் திரும்பும்பொழுது யாரோ பின் தொடர்வது தெரிய, "சடக்' என்று திரும்பினான் தங்கராசு. அங்கே கையில் பளபளக்கும் கத்தியுடன் நின்றிருந்தான் மாரியப்பன்.

""டேய், நான் ஒழிஞ்சு போயிட்டேன் என்று நினைச்சியா, பெயில்ல வெளியே வந்ததே உன்னைத் தீர்த்துக்கட்டத்தானே''.

""அண்ணே''

""அடச்சீ, நான் உன் கூடப்பிறந்தவனா?'' மாரியப்பன் கையை ஓங்க, அவன் பிடறியில் பெரிய அடி ஒன்று விழுந்தது. நிலை தடுமாறிக் கீழே விழுந்தான் மாரியப்பன்.

""டேய் மாதவா, அவனை அமுக்கிப் பிடிடா'' என்று தன் கீழ் வேலை பார்க்கும் போலீஸூக்கு ஆணையிட்டார் இன்ஸ்பெக்டர் முருகவேல்.

ஆம், தங்கராசுவின் நேர்மையும், ஒழுக்கமும் இரவு ரோந்துக்கு வந்த காவல்துறையினரால் காப்பாற்றப்பட்டது.

"வேல் இருக்கப் பயம் இல்லை' என்று தங்கராசுவின் வாய் முணு முணுத்தது.


ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்.

(குறள் எண்: 131)

பொருள் :

ஒழுக்கம், அதை உடையவருக்கு சிறப்பைத் தருவதால், உயிரைக் காட்டிலும் மேலானதாக அதைக் காக்க வேண்டும்.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com