சமையல்! சமையல்! - பனீர் ஸ்பெஷல்

பனீர், தக்காளி, குடைமிளகாய் இவற்றை ஓர் அங்குலமாக நறுக்கிக் கொள்ளவும்.
சமையல்! சமையல்! - பனீர் ஸ்பெஷல்

பனீர் டிக்கா ரோல்

தேவையான பொருட்கள்
பனீர் - 200 கிராம்
குடைமிளகாய் - 2
தக்காளி - 2
தயிர் - அரை கிண்ணம்
இஞ்சி, பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
மிளகாய்த் தூள் - 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
சாட் மசாலாத் தூள் - அரை தேக்கரண்டி
கரம் மசாலாத் தூள் - அரை தேக்கரண்டி
எண்ணெய் - 2 தேக்கரண்டி
சப்பாத்தி - 6
சீஸ் - 50 கிராம்
உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை:

பனீர், தக்காளி, குடைமிளகாய் இவற்றை ஓர் அங்குலமாக நறுக்கிக் கொள்ளவும். தயிர், இஞ்சி- பூண்டு விழுது, மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், சாட் மசாலா, கரம் மசாலா, உப்பு இவைகளை ஒன்றாகச் சேர்த்து நன்கு கிளறி வைக்கவும். இந்தக் கலவையோடு பனீர், தக்காளி இவற்றையும் சேர்த்துக் கிளறி 10 நிமிடம் வைக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு குடைமிளகாய் போட்டு வதங்கியதும் பனீர், தக்காளி கலவையைப் போட்டு 3 நிமிடம் விட்டு விட்டுக் கிளறி இறக்கவும். இதை ஆறு பங்குகளாகப் பிரிக்கவும்.

சப்பாத்தி ரோல் : ஒரு சப்பாத்தியை எடுத்து 1 தேக்கரண்டி சீஸ் தடவி அதன் மேல் பனீர் மசாலாவை ஒருமுனையில் வைத்து சப்பாத்தியை சுருட்டவும். இதைப் போன்று மற்ற சப்பாத்திகளையும் செய்யவும்.


பனீர் கட்லெட் பன்

தேவையான பொருட்கள்:
பனீர் ( உதிர்த்தது) - 100 கிராம்
பன் - 6
உருளைக்கிழங்கு - 3
பிரெட் - 2 துண்டு
பச்சை மிளகாய் (நறுக்கியது) - 3
கொத்துமல்லி ( நறுக்கியது) - 4 தேக்கரண்டி
பிரெட்க்ரம்ஸ் - அரை கிண்ணம்
எண்ணெய் - பொரிப்பதற்கு
தக்காளி சாஸ் - அரை கிண்ணம்
கேரட் துருவல் - அரை கிண்ணம்
கோஸ் துருவல் - அரை கிண்ணம்
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

உருளைக்கிழங்கை வேக வைத்து மசித்துக் கொள்ளவும். பிரெட்டை பொடியாக்கிக் கொள்ளவும். உருளைக்கிழங்கோடு பனீர், பச்சை மிளகாய், கொத்துமல்லி , பொடியாக்கிய பிரெட்,உப்பு சேர்த்து மாவாக பிசைந்து கொள்ளவும். 6 பங்காக இதைப் பிரித்து கட்லெட் போல் செய்து காய்ந்த எண்ணெய்யில் போட்டு பொரித்து எடுக்கவும். பன்னை இரண்டாக வகுத்து ஒரு பக்கத்தில் தக்காளி சாஸ் மேலே ஒரு கட்லெட் வைத்து, சிறிது துருவிய கேரட், கோஸ் போட்டு பன்னின் மற்றொரு பக்கத்தால் மூடவும். மற்ற பன்களையும் இதேபோல் செய்யவும்.


பனீர் சீஸ் மசாலா

தேவையான பொருட்கள்:
பீட்ஸா செய்வதற்கு:
பீட்ஸா பேஸ் ( சிறியது) - 6
பனீர் ( உதிர்த்தது) - 250 கிராம்
சீஸ் ( துருவியது) - 1 கிண்ணம்
எண்ணெய் - 1 தேக்கரண்டி
வெங்காயம் (நறுக்கியது) - 1
பச்சைமிளகாய் ( நறுக்கியது) - 2
தக்காளி ( நறுக்கியது) -1
உப்பு - தேவைக்கேற்ப
மசாலா செய்வதற்கு:
வெண்ணெய் - 2 தேக்கரண்டி
பூண்டு ( பொடித்தது) - 4
வெங்காயம் ( நறுக்கியது) - 1
மிளகாய்த் தூள் - அரை தேக்கரண்டி
தக்காளி ( சாறு எடுக்கவும்) - 2
சில்லி சாஸ் - 1 தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப

சாஸ் செய்வதற்கு:

வாணலியில் வெண்ணெய் மற்றும் பூண்டு, வெங்காயம் சேர்த்து சிவக்கும் வரை வதக்கவும். பிறகு மிளகாய்த் தூள், தக்காளிச் சாறு, உப்பு சேர்த்து நன்கு கலக்கவும். தக்காளி சாஸ், சில்லி சாஸ் சேர்த்து சாஸ் கெட்டியாகும் வரை வதக்கவும்.

செய்முறை:

ஓவனை முன் சூடு படுத்தவும். வாணலியில் எண்ணெய்விட்டு காய்ந்ததும், வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். நறுக்கிய தக்காளி, பனீர், உப்பு சேர்த்து நன்கு கிளறவும். கலந்து வைத்த சாûஸ ஒவ்வொரு பீட்ஸா பேஸ்சிலும் 2 தேக்கரண்டி தடவி, அதன் மேல் சிறிது பனீர் மசாலாவைத் தடவி, சீஸ் துருவலையும் தூவி ஓவனில் 180 டிகிரி சூட்டில் வைத்து சீஸ் உருகும் வரை வேகவிடவும். சூடாக பரிமாறவும்.

பனீர் கார்ன் ரோல்

தேவையான பொருட்கள்:
பனீர் - 250 கிராம்
கார்ன் ( வேக வைத்தது) - கால் கிண்ணம்
கார்ன்ஃப்ளவர் மாவு - 4 தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
பச்சை மிளகாய் - (பொடியாக நறுக்கியது) - 4
கொத்துமல்லி - ( பொடியாக நறுக்கியது) - 4 தேக்கரண்டி
எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

பனீரை உதிர்த்து அதோடு வேக வைத்த கார்ன், உப்பு, சீரகம், கார்ன் ஃபிளவர், பச்சை மிளகாய், கொத்துமல்லித் தழை சேர்த்து நன்கு கிளறவும். சிறு உருண்டைகளாக உருட்டி எண்ணெய் காய்ந்ததும், வாணலியில் போட்டு பொன்னிறமாக எடுக்கவும். புதினா சட்னியுடன் பரிமாறவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com