75 குழந்தைகளுக்கு அம்மா

மதுரை டி.வி.எஸ் நகரைச் சேர்ந்தவர் குளோரி (43). சமூக ஆர்வலரான இவர் முற்றிலும் மனநலம் பாதிக்கப்பட்ட எச்.ஐ.வி தொற்றால் பாதிக்கப்பட்ட பெண்களை காப்பாற்றி  அரவணைத்து அவர்களை நல்வழிப்படுத்தும்
75 குழந்தைகளுக்கு அம்மா
Updated on
1 min read


மதுரை டி.வி.எஸ் நகரைச் சேர்ந்தவர் குளோரி (43). சமூக ஆர்வலரான இவர் முற்றிலும் மனநலம் பாதிக்கப்பட்ட எச்.ஐ.வி தொற்றால் பாதிக்கப்பட்ட பெண்களை காப்பாற்றி  அரவணைத்து அவர்களை நல்வழிப்படுத்தும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.

எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்ட பெண்களை காப்பாற்றும் எண்ணம் உருவானது எப்படி? குளோரியிடம் கேட்டோம்:

""அப்பா  என்னுடைய சிறுவயதிலிருந்தே செருப்பு தைப்பவர்களுக்கு அதிகம் உதவுவார். அவர்களுடைய குழந்தைகள் கல்வி பெற வேண்டுமென்பதற்காக பள்ளி ஒன்றை ஆரம்பித்தார். அவர்களுக்கு  இலவசமாக மதிய உணவும் கொடுத்தார். என்னுடைய பாட்டி-தாத்தா சாப்பாடு பார்சல் செய்து என்னிடம் சாலையோரத்தில் இருப்பர்வளுக்கு கொடுக்க சொல்வார்கள். இப்படியாக சிறுவயதில் இருந்தே உதவும் எண்ணத்தை மனதில் விதைத்து விட்டனர். 

நான், படித்து முடிந்ததும் தனியார் எய்ட்ஸ் அமைப்பு ஒன்றில் வேலை செய்தேன். அப்போதெல்லாம் ஆதரவற்ற பெண்கள், குழந்தைகளைக் காப்பாற்றி காப்பகங்களில் சேர்த்து கொண்டார்கள். ஆனால் மன நலம் பாதிக்கப்பட்ட,  எச்.ஐ.வி நோயால் பாதிக்கப்பட்டவர்களை சேர்த்து கொள்ள மறுத்துவிட்டார்கள். இவர்களுக்கு என்று அடைக்கலம் இல்லையே என்று நினைத்து  உருவாக்கியது தான் "நியூ கிரியேஷன்' அறக்கட்டளை. குறிப்பாக எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டு அதனால் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்கள், ஆதரவற்றவர்கள் என 75 நபர்களை என்னுடைய குழந்தைகளாக நினைத்து பராமரித்து வருகிறேன். 

அவர்களுக்கு முறையாக பயிற்சியளித்து, ஊக்கமளிப்பதன் மூலம் அவர்களுடைய வேலையை அவர்களே செய்து கொள்கிறார்கள். மன நலம் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு முறையான வாழ்க்கை முறை, கல்வி கற்பித்து, வேலை வாய்ப்பை ஏற்படுத்தி அவர்களுக்கு திருமணம், குழந்தை பிறப்பு வரை பார்த்துக்கொள்கிறேன். கரோனா காலத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட ஆண்களைக் காப்பாற்றி பராமரித்து வந்தேன்.  

என்னுடைய நிறுவனத்தில் பணியாளர்கள் என்று யாரும் கிடையாது. அவர்களுக்கு ஊதியம் கொடுக்கும் அளவு என்னிடம் பணமும் கிடையாது. அதனால்  மீட்டெடுக்கும் பெண்களேயே போதுமான பயிற்சி கொடுத்து அவர்களை அனைத்து அலுவல் சார்ந்த விஷயங்கள், சமையல் வேலை, துணி வைப்பது, பாத்திரம் கழுவுவது போன்ற விஷயங்களுக்கு தயார்படுத்தியுள்ளேன். 

நண்பர்கள் தெரிந்தவர்கள் கொடுக்கும் பணத்தில் தான் அவர்களுக்கு வேண்டியதை செய்கிறேன். கரோனா காலத்தில் மதுரை மாநகராட்சி நிர்வாகமும், கலெக்டர் அலுவலகத்திலிருந்து வந்து தேவையான உதவிகளை செய்தார்கள். தற்போது சொந்தமாக வாங்கிய நிலத்தில் சிறிய இல்லம் ஒன்றை அமைத்துள்ளேன். இனி வரும் காலங்களில் பாதிக்கப்பட்ட பெண்கள் அங்கு வசிப்பதற்கு ஏற்பாடு செய்துள்ளேன். யாரிடமும் உதவி என்று கேட்பதில்லை. உதவி செய்ய வருபவர்களிடம் வேண்டாம் என்று சொல்வதில்லை.

ஒரு பெண்ணாக ஒரு பெண் பாதிக்கப்பட்டு நடு ரோட்டில் நிற்பதை என்னால் 
பார்த்துக்கொண்டிருக்க முடியவில்லை. அதனால் எத்தனை சவால்கள் வந்தாலும் இந்த சமூக சேவையை கைவிடுவதில்லை'' என்கிறார் குளோரி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com