கதை சொல்லும் குறள் - 24: இசைபட வாழ்தல்!

திருநெல்வேலி  மகாராஜா நகரில், ஒன்றரை ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்திருந்தது அந்த பங்களா. பங்களாவில் எங்குப் பார்த்தாலும் பணத்தின் ஆதிக்கம் மேலோங்கி இருந்தது.
கதை சொல்லும் குறள் - 24: இசைபட வாழ்தல்!


திருநெல்வேலி மகாராஜா நகரில், ஒன்றரை ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்திருந்தது அந்த பங்களா. பங்களாவில் எங்குப் பார்த்தாலும் பணத்தின் ஆதிக்கம் மேலோங்கி இருந்தது.

பெல்ஜிய நிலைக்கண்ணாடியின் முன் நின்று தன்னை அலங்கரித்துக் கொண்டிருந்தாள் தமயந்தி. அவளே ஒரு பேரழகி, அவளை அழகாக்க பெரியதாக அலங்காரங்கள் தேவைப்படவில்லை. கழுத்தில் மெல்லியதாக ஒரு தங்கச் சங்கிலி, அதில் சிறிய வைரக்கற்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட அன்னப்பறவையின் டாலர், வலது கையில் வைர வளையல்கள் இரண்டு, இடது கையில் ரோலக்ஸ் வாட்ச். ரோஸ் வண்ணத்தில், சிறிய ஜரிகைப் பார்டரோடு அவள் உடலைத் தழுவிக் கொண்டிருந்த மைசூர் சில்க் புடவை, அதற்கு மேட்சான ரவிக்கை. அவளுக்கு மேலும் அழகு சேர்த்தது.

திடீரென தமயந்தியின் கண்களை, இரண்டு கரங்கள் பொத்தின.

"உன் அழகைக் கன்னியர்கள் சொன்னதினாலே.. உள்ளமெல்லாம் உன் வசமாய் ஆனதினாலே..' என்று உள்ளே நுழைந்த தமயந்தியின் தோழி பாட,

""ஏய், ஏய் போதும் நிறுத்து. மீனா உன் விளையாட்டுக்கு அளவே இல்லையா'' என்று தமயந்தி பொய்க்கோபம் காட்ட, கலகலவென்று சிரித்துக் கொண்டே மீனா, தமயந்தியின் முன் வந்தாள். ""இந்த அழகுச் சந்தனச் சிலையைக் கட்டிக்கொள்ள யாருக்குக் கொடுத்து வெச்சுருக்கோ தெரியலையே'' என்றாள்.
அந்தச் சமயத்தில்..

""தமயந்தி'' என்று அழைத்தபடி செல்வநாயகம் உள்ளே நுழைய, இரண்டு பெண்களும் நிமிர்ந்து நின்றனர்.

""அம்மா, அண்ணா எல்லோரும் ரெடி, உனது பட்டமளிப்பு விழா ஐந்து மணிக்குத் தொடங்குகிறது என்றாய், மணி மூணறை ஆகிறது, இப்பக் கிளம்பிச் சென்றால்தான் உன் கல்லூரிக்குச் சரியான நேரத்திற்குப் போகமுடியும்''.

""சரிப்பா நானும் தயாராகிவிட்டேன், வாங்க போகலாம்.''

பென்ஸ் எஸ் கிளாஸ் கார் வேகமாகச் சாலையில் வழுக்கியபடிச் சென்றது. டிரைவர் சீட்டில் தமயந்தியின் அண்ணன் ரவி காரை ஓட்டிச் செல்ல, பக்கத்தில் அப்பாவும் பின் சீட்டில் அம்மா குமுதவல்லியும், தமயந்தியும், மீனாவும் அமர்ந்து சென்றனர்.
பட்டமளிப்பு விழா மிகச் சிறப்பாக நடந்து முடிந்தது. அன்று முதல் தமயந்தி எம்.ஏ., என்பதனோடு எம்.எட்டும் சேர்ந்து கொண்டது. தமயந்தி எம்.ஏ., எம்.எட்., அவளுடைய ஆசை ஓர் ஆசிரியராக வேண்டும் என்பதாகவே இருந்தது. இது அவளுடைய வாழ்க்கையின் குறிக்கோளாகவே இருந்தது.

இந்த நல்ல நிகழ்வைக் கொண்டாட வேண்டும் என்று ரவி திட்டமிட்டு, நட்சத்திர ஹோட்டலில் இரவு உணவுக்காக மேஜையைப் புக் செய்து இருந்தான். பேச்சும் கும்மாளமுமாகப் பொழுது கழிந்தது. மீனாவை அவள் வீட்டில் இறக்கி விட்டுவிட்டு வீடு திரும்பினார்கள்.

மணி நடு இரவைத் தொட்டிருந்தது. இரவு வணக்கத்தைத் தெரிவித்துவிட்டு அவரவருடைய அறைக்குத் தூங்கச் சென்றனர்.
""குமுதா''
""சொல்லுங்க''
""தமயந்தி படிப்பை முடித்துவிட்டாள். இனி அவளுக்குத் தகுந்த மாப்பிள்ளையாகப் பார்த்து திருமணத்தை முடிக்க வேண்டும்'' என்றார் செல்வநாயகம்.
""நீங்க பெரிய பருத்தி தொழிற்சாலைக்கு அதிபர். அதனால் பிஸினஸ் லைனில் இருக்கும் இடமாகப் பாருங்க. உங்க நண்பருடைய பையன் ஒருவன் அமெரிக்காவிலே சாஃப்ட்வேர் பிஸினஸ்லே கொழிக்கிறான்னு கேள்விப்பட்டோமே அவனுக்கு...''
""குமுதவல்லி நிறுத்து, என் ஒரே பெண்ணை அமெரிக்காவுக்கு அனுப்பச் சொல்றியா, அவ்வளவு தூரம் அவளை அனுப்பிட்டு, நான் அவளைப் பார்க்கணும்னா இருபது மணி நேரம் காத்திருக்கணுமா. அம்மாடி என்னாலே முடியாது. இதே திருநெல்வேலியிலே, நான் நினைச்சாப் பத்து நிமிஷத்திலே அவளைப் போய்ப் பார்க்கறாப்போல இருக்கிற இடத்திலேதான் என் பொண்ணைக் கட்டிக் கொடுப்பேன்''.
""உக்கும்... வேறே இடத்துக்குப் போற பொண்ணு மேலே இவ்வளவு பாசம் வைக்கக் கூடாது. சரி இப்ப படுங்க, மிச்சத்தை நாளைக்குப் பேசிக்கலாம்''.
பாவம், குமுதவல்லிக்கு நாளைய உதயத்தைச் செல்வநாயகம் பார்க்க மாட்டார் என்பது தெரிந்திருக்கவில்லை. தூங்கிக் கொண்டிருக்கும்பொழுதே, மாரடைப்பில் அவர் இயற்கை எய்திவிட்டார்.
அழுது அழுது தமயந்திக்குக் கண்களில் கண்ணீரே வற்றிவிட்ட நிலைமை ஏற்பட்டுவிட்டது. இன்று இருப்பார் நாளை யில்லை என்ற பெருமை படைத்தது உலகு என்பார்களே அது இதுதானா? நேற்று நடு ஜாமம் வரை சிரித்துப் பேசிக் கொண்டிருந்த அப்பா இப்ப சடலமாகிவிட்டாரே. "சீ' இது என்ன வாழ்க்கை? இதற்குத்தானா இவ்வளவு பாடு.
நாட்கள் யாருக்காகக் காத்திருக்கின்றன? அது பாட்டுக்கு நகர்ந்து சென்றுகொண்டே இருந்தது. வருடம் ஒன்று உருண்டோடியது, செல்வநாயகத்தின் ஓராண்டு மறைவு தினமும் வந்து போனது. சோகத்தில் இருந்து முழுமையாக மீளா விட்டாலும், தன் கணவருடையக் கடைசி ஆசையான, தமயந்தியின் கல்யாணத்தை நடத்த குமுதவல்லி முடிவு செய்தாள்.
""தமயந்தி, உனக்கு மாப்பிள்ளை பார்க்க நானும், ரவியும் முடிவு செய்திருக்கிறோம், என்ன மாதிரியான பையன் வேண்டும்'' என்று சொல்லேன்.
""அம்மா இப்பொழுது எனக்கு கல்யாணம் வேண்டாம்''.
""ஐயோ, வயசு இருபத்து ஐந்து ஆகப்போகுது, இதுக்கு மேலே எப்போ?''
""இல்லம்மா, எப்பொழுதுமே வேண்டாம்''.
""என்னடி, உங்க அப்பா என் தலையிலே குண்டைப் போட்டுட்டு திடீர்ன்னு போயிட்டார், நீயும் உன் பங்குக்குக் குண்டைத் தூக்கிப் போடறே''.
""இல்லம்மா, கானல் நீரான இந்தப் பூலோக வாழ்க்கையிலே, கல்யாணம், குடும்பம், குழந்தைகள் என்று நான்
அல்லல் படப் போறது இல்ல''.
""பின்ன என்ன செய்யப்போறே?''
""நமக்குச் சொந்தமான, திருநெல்வேலி டவுனைத் தாண்டி ஐம்பது ஏக்கர்லே ஒரு கிராமம் இருக்கே, அதாம்மா புன்னைக்குடி கிராமம், அதை மட்டும் எனக்கு அண்ணாவை எழுதித் தரச் சொல்லு''.
""அது ஒண்ணுக்கும் உதவாத கிராமம், வானம் பார்த்த பூமி, இருநூறு குடும்பங்கள்தான் அங்கே இருக்கு, அதை வெச்சுக்கிட்டு என்ன பண்ணப்போறே?''

""என் தாத்தா வாங்கின கிராமம். வருஷா வருஷம் பொங்கலுக்கு அங்கே போவோம். என்ன அன்பான ஜனங்க. அவங்க புள்ளைகள் எல்லாம் சரியான பள்ளிக்கூடம் இல்லாம, மாடு மேய்ச்சிக்கிட்டுத் திரியிறாங்க. பேருக்கு ஒரு திண்ணைப் பள்ளிக்கூடம் இருக்கு. அதுக்கும் சரியான ஆசிரியர் இல்லை. நான் அங்கே போகப் போறேன். புதுசா பள்ளிக்கூடம் கட்டப்போறேன், அழியாத கல்வியைப் பிள்ளைகளுக்குக் கொடுக்கப் போறேன்''.

""ஏய், உனக்குப் பைத்தியமா புடிச்சிருக்கு. ஏதோ ஆசைப்பட்டியேன்னு படிக்க வெச்சோம். சின்னப்போதிலிருந்தே, டீச்சர் போல சொந்தக்காரப் பசங்களை உட்கார வெச்சு பாடம் எடுப்பே, அதனாலே...''

"அம்மா, நான் முடிவு பண்ணிட்டேன். எனக்கு இனிமே இதுதான் வாழ்க்கை, நிலையில்லாத இந்த வாழ்க்கையில், ஏழைகளின் உயர்வே என் லட்சியம்''.

எவ்வளவோ எடுத்துச் சொல்லியும், கெஞ்சிப் பார்த்தும், தமயந்தி தன் முடிவை மாற்றிக் கொள்ளவில்லை.

முப்பது வயதைக் கடந்த ரவியை இனிக் கல்யாணம் பண்ணிக் கொள்ளாமல், தமயந்திக்காகக் காத்திருக்கச் சொல்வதில் பயன் ஒன்றும் இல்லை என்று புரிந்து போன பின் குமுதவல்லி, மனப்பாரத்தோடு ரவிக்குத் திருமணத்தை முடித்து வைத்தாள். தன் மருமகள் கையில் குடும்பப் பொறுப்பைக் கொடுத்துவிட்டு மகளோடு சேர்ந்து புன்னைக்குடி கிராமம் வந்து சேர்ந்தாள்.

நாற்பது ஆண்டுகள், நாற்பது நிமிடங்களாக ஓடி மறைந்தது. புன்னைக்குடி கிராமமா இது? முன்பு பார்த்தவர் இன்று விழி பிதுங்கி நின்றனர். கரடுமுரடான மண் சாலைகளில் மாட்டு வண்டிகளே அதிகம் பயணம் செய்யும். இன்று திரும்பிய திசைகளில் எல்லாம் தார் ரோடுகள்.

"செல்வநாயகம் ஆரம்பப் பள்ளிக்கூடம், செல்வநாயகம் உயர்நிலைப் பள்ளிக்கூடம், பிராஞ்ச் ஒன்று என்று தொடங்கி மூன்றாகிவிட்டது. இதைத் தவிர குமுதவல்லி பாலிடெக்னிக் கல்லூரி, விமென்ஸ் கல்லூரி' என்று இன்று புன்னைக்குடி மாணவர்களுக்கு மட்டுமல்லாது திருநெல்வேலியிலிருந்தும் அதன் சுற்றுவட்டாரங்களில் இருந்தும் மாணவர்கள் இங்கே வந்து தங்கிப் படிக்கின்றனர்.

கிராமப்புறப் பெண்கள் மேம்பாட்டு மையங்கள், இங்கே பலவிதமானத் தையல்வேலையைக் கற்றுக்கொடுக்கும் சென்டர்கள், மருத்துவ வசதிகளைச் செய்து கொடுக்கும் சுகாதார நிலையங்கள், முதியோர் இல்லங்கள் இவ்வளவையும் ஒரே ஆளாக ஓடி ஓடி உழைத்து உருவாக்கியவள் தமயந்தி என்றால் மிகையாகாது.

புன்னைக்குடி கிராமமே தமயந்தி என்ற ஒற்றைச் சொல்லுக்கு, மரியாதையோடு எழுந்துக் கைகட்டி நிற்கிறது. அந்தக் கிராமத்தின் நிலத்தடி நீர் வளத்தையும் வளப்படுத்தி, உழைத்துப் பாடுபடும் விவசாயிகள் எல்லோருக்கும், அந்த நிலத்தை அவர்களுக்கே உரிமைப்படுத்திக் கொடுத்து தமயந்தி இமயமென அந்த ஏழை மக்களின் உள்ளத்தில் உயர்ந்து வாழ்கிறாள்.

எண்பத்து ஏழு வயதாகும் குமுதவல்லி, இப்பொழுது புரிந்து கொண்டாள் "ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது ஊதியம் இல்லை உயிர்க்கு' என்ற குறளின் முழு அர்த்தத்தை. அதற்கு எடுத்துக்காட்டாக அவள் மகள் தமயந்திதான் வாழ்ந்து காட்டிக் கொண்டிருக்கிறாளே!

ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது
ஊதியம் இல்லை உயிர்க்கு.

( குறள் எண்: 231)

பொருள் :

கொடைத் தன்மையும், குன்றாத புகழும் தவிர வாழ்க்கைக்கு ஆக்கம் தரக்கூடியது வேறெதுவும் இல்லை.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com