தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

கதை சொல்லும் குறள் - 65: சொல்லே ஆயுதம்!

இந்தியப் பெருங்கடலின் கிழக்கு முகத்தில் அமைந்திருக்கும் பல தீவுகளில் மரகதத்தீவும், சங்குத்தீவும் வெறும் ஐம்பது மைல் இடைவெளியில் அமைந்திருந்தன.

News image
Updated On :2 பிப்ரவரி 2022, 12:30 am

கணேஷ் சுந்தரமூர்த்தி

இந்தியப் பெருங்கடலின் கிழக்கு முகத்தில் அமைந்திருக்கும் பல தீவுகளில் மரகதத்தீவும், சங்குத்தீவும் வெறும் ஐம்பது மைல் இடைவெளியில் அமைந்திருந்தன.

பச்சை பசேல் என்று பலவிதமான மூலிகைகளைத் தன்னகத்தே கொண்ட மலைகள் நிறைந்த இடமாக இருந்ததினால் மரகதத்தீவு என்று அழைக்கப்பட, சங்கு வடிவத்தில் அமைந்திருந்ததால் சங்குத்தீவு என்று அந்த இரண்டு தீவுகளுமே காரணப் பெயர்களால் அழைக்கப்பட்டன.

சங்குத்தீவின் இயற்கை அழகை வர்ணிக்கக் கவிஞர்களும் வார்த்தைகளைத் தொலைப்பர் என்றால் மிகையாகாது. தீவின் அழகைப் போலவே அதில் வாழும் மக்களும் எழில் மிக்கவர்களாகத் திகழ்ந்தனர். தீவின் தலைவன் ராஜ்மோகன், சேரமன்னர் வம்சாவளியில் வந்தவன்.

பதினொன்றாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், கடல் பயணமாக வந்த சேரமாறன் என்கின்ற சேர அரசன், சிலகாலம் சங்குத்தீவில் தங்கியவன், அப்போதைய அத்தீவின் தலைவரின் மகள் மீது காதல் கொண்டு அவளை மணந்துக் கொண்டான். அவர்களுக்கு ஒரு ஆண் மகவும் பிறந்தது.

மீண்டும் தன் நாட்டிற்குச் சேரமாறன் புறப்பட்டபொழுது, அவனின் மனைவி அவனோடு செல்ல மறுத்துத் தன் குழந்தையோடு சங்குத்தீவிலேயே தங்கிவிட்டாள். இப்படி இருவருக்கும் பிறந்த ஆண் பிள்ளையின் வாரிசுகள்தான் வழிவழியாகச் சங்குத் தீவுக்குத் தலைவர்கள் ஆனார்கள்.

எழில், பெயருக்குத் தகுந்தாற்போல எழில் மிக்கவள், சங்குத்தீவின் தலைவர் ராஜ்மோகனின் ஒரே மகள். அழகில் மட்டும் அல்ல, அறிவிலும் தலைசிறந்து விளங்கினாள்.

அமைதியாகப் போய்க் கொண்டிருந்த சங்குத்தீவில் பூகம்பம் வெடித்தது. நிஜ பூகம்பம் இல்லை, ஆனால் அதை ஒத்த அதிர்வுகளை மக்களின் மனதிலும், ராஜ்மோகனின் மனதிலும் ஏற்படுத்தியது.

ஏன் அப்படி என்ன நடந்துவிட்டது?

மரகதத்தீவின் அரசன் மணிமாறன் சங்குத்தீவுக்குள் அத்துமீறி நுழைந்து அங்கே கடற்கரையில் தன் தோழிகளுடன் நீந்தி விளையாடிக் கொண்டிருந்த எழிலைச் சிறைப்பிடித்துச் சென்றுவிட்டான்.

அலறிக் கொண்டு அவன் பின்னே ஓடிய எழிலின் தோழிகளைப் பார்த்து மணிமாறன் இப்படிக் கூறினானாம்.

""போய் உங்கள் அரசனிடம் சொல்லுங்கள், அவர் மகளை நான் உயிருக்கு உயிராகக்காதலிக்கின்றேன், முறையாகப் பெண் கேட்டுப் பலமுறை தூது அனுப்பினேன். அவர் நிராகரித்து விட்டார். அதனால்தான் இப்படிச் செய்துவிட்டேன்; இந்த என் செய்கையினால் போரும் மூளலாம், அதற்கும் நான் தயார்!''

பொங்கி எழுந்தான் ராஜ்மோகன்.

""ஐயோ, இப்படிச் செய்வதற்கு எப்படித் துணிந்தான். என் உயிரைக் கேட்டாலும் கொடுத்திருப்பேனே, அதற்கும் மேலான என் மகளை அபகரித்து விட்டானே. போர் முரசைக் கொட்டுங்கள், புறப்பட்டுச் சென்று என் மகளை மீட்டு வருவோம்''.

""அரசே'' என்று பணிவோடு அழைத்தார் அமைச்சர் முத்துக்கிடாரன்.

""என்ன அமைச்சரே'' என்று தன் விழிகளை உருட்டி உறுமினான் ராஜ்மோகன்.
""மணிமாறன் படை மிகவும் பெரியது. அவனிடம் இரண்டாயிரம் போர் வீரர்கள் இருக்கிறார்கள். இதைத் தவிர யானைப் படை, குதிரைப்படை'' என்று ஐநூறுக்கும் மேல்...

அமைச்சர் முடிக்கும் முன் ராஜ்மோகன் குறுக்கிட்டான், ""என்ன சொல்ல வருகிறீர்கள், நம்மிடம் அவற்றில் பாதி கூடக் கிடையாது என்கிறீர்கள் அப்படித்தானே? படைபலம் இல்லாவிட்டால் என்ன? தன்மானம் என்கின்ற ஆயுதபலம் இருக்கிறது அல்லவா? அநீதியாக நடந்துக் கொண்டவனுக்குத் தக்க பாடத்தைக் கற்றுத் தரவேண்டும். நாளைக் காலை சரியாக ஆறு மணிக்கு நாட்டுமக்களை நம்முடைய பொதுத்திடலில் கூடச் சொல்லுங்கள், மற்றவற்றைப் பிறகு பார்த்துக் கொள்ளலாம்'' என்றான்.

மறுநாள் பொழுது வழக்கம்போலவிடிந்தது. சூரியனின் சிவந்த கிரணங்கள் வானில் கீறல்களாய் மிளிர்ந்தன. இரவு முழுவதும் தூக்கத்தைத் தொலைத்த ராஜ்மோகனின் கண்களும் சிவந்த கோடுகளை ஏந்தி இருந்தன. அங்கே கூடி இருந்த குடிமக்களின் கண்களும் சிவந்தே காணப்பட்டன. அவை தூக்கத்தைத் தொலைத்ததால் மட்டும் அல்ல, தங்கள் நாட்டு இளவரசிக்கு நேர்ந்த கொடுமையை நினைத்து நினைத்து கண்ணீரைச் சிந்தியதால் ஏற்பட்டது.

""ராஜாதி ராஜ, ராஜ கம்பீர சேர வம்சாவளியில் உதித்த, பராக்கிரமன் ராஜ்மோகன் வாழ்க, வாழ்க'' என்று எழுந்த பேரொலி விண்ணையும் பிளந்து விடுமோ என்ற மயக்கத்தை அளித்தது.

""குடிமக்களே வணக்கம். இன்று உங்கள் முன் பெற்ற பெண்ணைத் தொலைத்தவனாக நிற்கின்றேன். பெற்ற மண்ணையும், பெற்ற தாயையும், கட்டிய மனைவியையும், அருமை பெருமையாக ஈன்றெடுத்து, வளர்த்த பெண்ணையும் காப்பது ஒரு சாதாரண மனிதனுக்கு உரிய கடமையாக இருக்கும் பொழுது, அரசனான நான் என் பெண்ணை அந்நியனுக்கு பலி கொடுத்துவிட்டேன்''.

""அரசே அப்படிக் கூறாதீர்கள். எங்கள் உயிரைக் கொடுத்தாவது நாட்டின் இளவரசியை மீட்போம்'' என்று கூடியிருந்த மக்கள் குரல் எழுப்பினர்.

""உங்கள் எல்லோருக்கும் தெரியும்,மரகதத்தீவின் படை வலிமையை விட நம்மிடம் இருக்கும் படை குறைவு. ஆனால் நெஞ்சில் வீரம் இருக்கிறது. அநீதிக்குப் பதிலடி கொடுக்கும் கோபம் தனலாய் எரிகிறது. அந்தத் தனலை எதிரியின் ரத்தத்தைக் கொண்டு அணைக்க உடல் துடிக்கிறது. போர்! போர்! நீர், நிலம், மலை, வயல், காடு என்று எதிலும் நின்று போர் தொடுப்போம், இது போன்ற அவலம் இனி தொடராமல் வழி வகுப்போம். தாய்மார்களும், குழந்தைகளும், பெரியோர்களும், வயதில் மூத்தவர்களும் சங்குத்தீவிலேயே தங்கிவிடுங்கள். நாங்கள் சென்று வெற்றியோடு திரும்புகிறோம் அல்லது வீர மரணத்தைத் தழுவுகிறோம்''.

""அரசே'' என்று ஒரு பெண்ணின் குரல் ஓங்கி ஒலித்தது. பெண்கள் என்றால் வெறும் அடுப்பை எரிப்பதற்கும், சோறு பொங்குவதற்கும், பிள்ளையைப் பெற்றுப் போடுவதற்கும்தான் என்ற மரபை ஒழிப்போம். எங்கள் தேசத்துப் பெண்ணுக்கு அநீதி நேர்ந்திருக்கிறது; அதைப் பார்த்து பெண்களாகிய நாங்கள் ஓடி ஒளிந்துக் கொள்வோமா-? எங்கள் பிள்ளைகள் பெரியவர்களோடு இங்கே இருக்கட்டும்; நாங்களும் உங்களோடு போர் செய்யப் புறப்படுகிறோம்'' என்றதும்,

மற்ற பெண்களும் ""நாங்களும் வருவோம், போர் செய்வோம்'' என்று ஓங்கி குரல் கொடுத்தனர்.

ராஜ்மோகனின் வீர எழுச்சி மிக்கப் பேச்சு, சொல்ல வேண்டிய கருத்துக்களைக் கோர்வையாகச் சொல்லிய பாங்கு, அவனுடைய இனப் பெண்களின் வீரத்தையும் தூண்டிவிட்டு, ஆண்களுக்கு சமமாக போர் புரியப் புறப்பட வைத்துவிட்டது.

சொல்வன்மை மிக்க ஒருவனால் சாதிக்க முடியாதது ஒன்றுமே இந்தப் பூலோகத்தில் இல்லை. ராஜ்மோகன் பேச்சினால் எழுந்த வீரம், அவனுடைய பிரஜைகள் போரிட்ட பாங்கில் தெரிந்தது. மணிமாறன் மண்டியிட்டான், மன்னிப்பை வேண்டினான். காதல் மிகுதியால்தான் செய்த தவறை உணர்ந்து விட்டதாகக் கூறினான்.

ராஜ்மோகன், மணிமாறனின் தலையை வெட்ட எத்தனித்த சமயத்தில், அவனின் மகள் எழில் ஓடி வந்து தடுத்துவிட்டாள். ""தான் தமிழர் மரபில் வளர்ந்த பெண், மணிமாறனால் கடத்தி வரப்பட்ட பின்பு எப்படி வேறு ஒருவருடன் வாழ்வது'' என்றாள்.

ராஜ்மோகனும், அவனுடைய நாட்டு மக்களும் எழிலுக்காக மணிமாறனை மன்னித்தனர். இரண்டு தீவு மக்களும் ஒன்று கூடி ஒரு சுபநாளில் மணிமாறனுக்கும், எழிலுக்கும் திருமணத்தை நடத்தி மகிழ்ந்தனர்.

விரைந்து தொழில்கேட்கும் ஞாலம் நிரந்தினிது
சொல்லுதல் வல்லார்ப் பெறின்.

(குறள் எண்: 648)

பொருள் :
கருத்துகளை ஒழுங்காகக் கோர்த்து இனிமையாகச் சொல்ல வல்லவரைப் பெற்றால், உலகம் விரைந்து அவருடைய ஏவலைக் கேட்டு நடக்கும்.

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.