சுவையான கொழுக்கட்டைகளைச் செய்ய சில ஆலோசனைகள்:
கொழுக்கட்டைக்கு மாவு கிளறும்போது தண்ணீரோடு ஒரு கரண்டி பால் சேர்த்தால் விரிந்துப் போகாது.
பூரணம் கிளறும்போது பாகு அதிகமாகிவிட்டால் பருப்புப் பூரணமாக இருந்தால் கடலை மாவை பொன்னிறமாக வறுத்து சேர்க்க வேண்டும். தேங்காய் பூரணமாக இருந்தால் அரிசி மாவைக் கலக்க வேண்டும் இதனால் பூரணம் கெட்டியாவதுடன் உதிராமல் உருட்டவும் வரும்.
இட்லி தட்டில் வைப்பதற்குப் பதில் மூங்கில் தட்டின் மீது இலை அல்லது துணியை விரித்து அதன் மீது கொழுக்கட்டைகளை வைத்து வேகவிட்டால் சீக்கிரமாக வேகும். மணமாகவும் இருக்கும்.
பச்சரிசிக்குப் பதிலாக புழுங்கல் அரிசி மாவில் கொழுக்கட்டை செய்தால் சுவையும் கூடுதலாக இருக்கும்.
கொழுக்கட்டைகளை உருட்டி சிறிது நல்லெண்ணெய் தடவி ஆவியில் வேகவைத்தால் ஒட்டாமல் உடையாமல் இருக்கும்.
பச்சரிசியை அரை மணி நேரம் ஊறவைத்து நன்கு நைசாக அரைத்து கொஞ்சம் பால் விட்டு நன்றாகக் கரைத்துக் கொள்ள வேண்டும் சட்டியில் இரண்டு கரண்டி தேங்காய் எண்ணெய் விட்டு அதில் கரைத்த மாவை விட்டு அடுப்பில் வைத்து பத்து நிமிடம் நன்றாகக் கிளற வேண்டும் பிறகு அப்படியே நன்றாக மூடி வைத்துவிட்டு சிறிது நேரம் கழித்து நன்றாக பிசைந்து உருட்டி தேவையான பூரணம் வைத்து கொழுக்கட்டை செய்ய வேண்டும்.
கடலைப் பருப்பு பூரணம் அரைக்கும்போது அதை மசிய அரைக்காமல் ஒன்றிரண்டாக அரைப்பதுடன் அதை சுருள கிளறிய பிறகு ஏலக்காய் பொடி, பொடியாக நறுக்கிய தேங்காய் துண்டுகளை போட்டு கொழுக்கட்டை செய்தால் சுவையாக இருக்கும்.
தேங்காய் பூரணத்துக்கு வெல்லம் சேர்க்கும்பொழுது, வெல்லப்பாகில் உள்ள கல்மண்களை நீரில் கரைத்து வடிகட்டி எடுத்த பிறகு பாகு செய்ய வேண்டும்.