அன்பான தம்பி தங்கைகளே, நாம் இப்போது உள்ளாட்சி அமைப்பின் அடுத்த நிலையான மாவட்ட ஊராட்சி அமைப்பைப் பற்றிக் காணலாம்.
அதாவது, கிராம பஞ்சாயத்து, ஊராட்சி ஒன்றிய வார்டு மற்றும் ஊராட்சி ஒன்றிய அமைப்பு ஆகியவற்றைப் பற்றி வரிசையாகப் பார்த்தோம் அல்லவா! இதன் அடுத்த கட்டம்தான் மாவட்ட ஊராட்சி அமைப்பு.
ஒவ்வொரு வருவாய் மாவட்டமும், ஒரு மாவட்ட ஊராட்சி என்ற அமைப்பாகச் செயல்பட்டு வருகிறது. இதன் தலைவர் எப்படித் தேர்ந்தெடுக்கப்படுகிறார் என்று தெரியுமா?
ஒவ்வொரு மாவட்ட ஊராட்சியும், மாவட்ட ஊராட்சி வார்டுகளாகப் பிரிக்கப்படும். இதை எந்த அடிப்படையில் பிரிக்கிறார்கள்?
அதாவது, ஐம்பதாயிரம் மக்கள் தொகை கொண்ட ஒரு பகுதியானது ஒரு மாவட்ட ஊராட்சி வார்டு என்னும் அடிப்படையில் பிரிக்கப்படும். இதைப்போல, ஒரு மாவட்டத்தை எடுத்துக்கொண்டால் அது ஏறத்தாழ முப்பது மாவட்ட ஊராட்சி வார்டுகளாகப் பிரிக்கப்படும். சில மாவட்டங்களில் இந்த எண்ணிக்கை கூடலாம். சில மாவட்டங்களில் குறையலாம். விழுப்புரம்போன்ற பெரிய மாவட்டங்களில் ஏறத்தாழ நாற்பது மாவட்ட ஊராட்சி வார்டுகள் இருக்கலாம். நீலகிரிபோன்ற சிறிய மாவட்டத்தில் மூன்று மாவட்ட ஊராட்சி வார்டுகள் மட்டுமே இருக்கும்.
இந்த மாவட்ட ஊராட்சி வார்டுகளிலிருந்து அதன் உறுப்பினர்களை மக்களே நேரடியாக ஓட்டுப்போட்டுத் தேர்ந்தெடுப்பார்கள். தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் "மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள்' என்று அழைக்கப்படுவார்கள். இந்த மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் ஓட்டுப்போட்டு, மாவட்ட ஊராட்சியின் தலைவர் மற்றும் அதன் துணைத் தலைவரைத் தேர்ந்தெடுப்பார்கள்.
மாவட்ட ஊராட்சித் தலைவர் மற்றும் துணைத் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் தேர்தலில் வேறு யார் ஓட்டுப்போட முடியும்?
அந்தந்த மாவட்டத்தின் பாராளுமன்ற உறுப்பினர்கள் (ங.ட), சட்டமன்ற உறுப்பினர்கள் (ஙகஅ),மற்றும் அந்த மாவட்டத்தில் வசிக்கும் மாநிலங்கள் அவை உறுப்பினர்கள் ஆகியோரும், மாவட்ட ஊராட்சி அமைப்பின் தலைவர் மற்றும் துணைத் தலைவரைத் தேர்ந்தெடுக்க ஓட்டுப்போடுவார்கள்.
தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர், அந்த மாவட்டத்தின் திட்டக் குழுவின் தலைவராகச் செயல்படுவார்.
மாவட்ட ஆட்சித் தலைவர் (கலெக்டர்), திட்டக் குழுவின் துணைத் தலைவராகச் செயல்படுவார்.
நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்தான் திட்டக் குழுவின் தலைவராக இருக்க முடியும்.
மேலும் ஒவ்வொரு மாவட்ட ஊராட்சிக்கும் ஒரு செயலரை அரசாங்கம் நியமிக்கும். இந்தச் செயலர், மாவட்ட ஊராட்சி அமைப்பின் நிர்வாகப் பணிகளைக் கவனித்துக்கொள்வார். மாவட்ட ஊராட்சியின் கடமைகளை நிறைவேற்றுபவர் இவரே. மாவட்ட ஊராட்சித் தலைவர், துணைத் தலைவர் மற்றும் அதன் வார்டு உறுப்பினர்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து கட்டடம் கட்டவும், சாலைகள் அமைக்கவும் தீர்மானம் போடுவார்கள். செயலர் அந்தத் திட்டங்களை நிறைவேற்றிச் செயல்படுத்துவார்.
அடுத்த வாரம் மாவட்ட ஊராட்சி அமைப்பின் கடமைகள் மற்றும் அதன் அதிகாரங்கள் பற்றிப் பார்ப்போம்.
தொடரும்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.