
சுற்றுலாப் பயணிகளின் சொர்க்கமாகத் திகழ்வது இஸ்தான்புல் நகரம். கி.மு. 3000-இல் மக்கள் குடியேறி வசித்த இடம். கி.மு. 7-ஆம் நூற்றாண்டில் பைஸாஸ் மன்னர் "பைஸôண்டியம்' என்ற பெயரில் குடியேற்றம் ஒன்றை ஏற்படுத்தினார். அந்நகரம் பின்னர் ரோமானிய ஆட்சியின் கீழ் வந்தது.
ரோமானியப் பேரரசர் கான்ஸ்டான்டைன் என்பவர் கி.பி. 306-ஆம் ஆண்டு பைஸôண்டியம் நகரத்தை ரோமானியப் பேரரசு முழுமைக்கும் தலைநகரமாக ஆக்கினார். அதுமுதல் அந்நகரம் அரசரின் பெயரிலேயே "கான்ஸ்டான்டிநோபிள்' அழைக்கப்பட்டது.
ஆசியா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா என்ற மூன்று கண்டங்களுக்கும் இடைப்பட்ட வணிக நகரமாக விளங்கியதால், அடுத்த பல நூற்றாண்டுகளுக்கு பாரசீகர்கள், அரபியர்கள் மற்றும் பலரின் இடைவிடாத தாக்குதலுக்குள்ளான நகரம் கான்ஸ்டான்டி நோபிள்.
கி.பி. 1453-ஆம் ஆண்டு சுல்தான் இரண்டாவது மெஹமத் தலைமையில் ஒட்டோமென் துருக்கியர்கள் ஆட்சியைக் கைப்பற்றினர்.
கான்ஸ்டான்டி நோபிள் நகரம் "இஸ்தான்புல்' என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு ஒட்டோமென் சுல்தான்களின் தலைநகரமாகவும், அரசியல், கலை, பொருளாதாரம் முதலிய பல்துறைகளிலும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த மாநகரமாக வளர்ச்சி பெற்றது.
கி.பி. 1923-ஆம் ஆண்டில் நடைபெற்ற சுதந்திரப் போருக்குப் பின் துருக்கிய குடியரசு உதயமானது. அதன் தலைவர் கமால் ஆடா டர்க் நாட்டின் தலைநகரை அங்காரா நகருக்கு மாற்றியபோதிலும் இஸ்தான்புல் நகரின் வளர்ச்சியும், பெருமையும், புகழும் நாளுக்கு நாள் வளர்ந்துகொண்டேதான் இருக்கிறது.
இஸ்தான்புல் நகருக்குச் சென்று வர ஏற்ற மாதங்கள் ஏப்ரல் முதல் ஜூன் மற்றும் செப்டம்பர், அக்டோபர் மாதங்கள். ஆசியா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா ஆகிய பெரிய கண்டங்களை இணைக்கும் இயற்கையான பாலம்போல அமைந்துள்ள இஸ்தான்புல். உலகின் பெரிய நகரங்கள் பலவற்றுடன் விமான சேவை மூலம் இணைக்கப்பட்டுள்ளது.
தோப் கபி அரண்மனை: ஓட்டோமன் ஆட்சியின் சின்னமாக விளங்கும் தோப் கபி அரண்மனை சுற்றுலாப் பயணிகள் பார்த்து மகிழ வேண்டிய இடங்களில் மிக முக்கியமானதாகும். ஓட்டோமன் வம்ச சுல்தான்கள் 25 பேர்களின் அரசு இல்லமாகத் திகழ்ந்தது இந்த அரண்மனை.
பாஸ்பரஸ் ஜலசந்தி மற்றும் மர்மரா கடல் ஆகியவற்றை நோக்கியபடி கம்பீரமாகக் காட்சியளிக்கிறது இந்த அரண்மனை. இதில் உள்ள அடுக்கடுக்கான முற்றங்கள், அந்தப்புரங்கள், அழகான தோட்டங்கள் போன்றவை காண்போர் கண்களுக்கு அரிய விருந்து. அந்தக்கால ஆடை, ஆபரணங்கள், ஓட்டோமென் மற்றும் இஸ்லாமியக் கலைப் பொருட்கள், பீங்கானிலான அலங்கார உபயோகப் பொருள்கள் ஆகியவை இன்றும் காட்சியளிக்கின்றன.
19-ஆம் நூற்றாண்டில் சுல்தான் அப்துல் மெசித்தால் தோல்மஹபஸ் அரண்மனை சுல்தானின் மற்றொரு இருப்பிடமாக விளங்கியது. பாஸ்பரஸ் ஜலசந்தியின் கரையில் அமைந்துள்ள இந்த அரண்மனையில் உள்ள அழகிய தோட்டங்கள் கோடை மற்றும் வசந்த காலங்களில் பேரழகுடன் காட்சியளிப்பவை. தற்காலத் துருக்கிக் குடியரசைத் தோற்றுவித்த முஸ்தாபா கமல் ஆடாடர்க் வாழ்ந்து மறைந்ததும் இந்த அரண்மனையில்தான்.
ருமெலி கோட்டை: ஓட்டோமன் மன்னர்களால் இஸ்தான்புல் கடல் பிரதேசத்தைக் காப்பதற்காக
ருமெலி கோட்டை கட்டப்பட்டது. பெரிய பீரங்கிகள் பல, இந்தக் கோட்டையையும் நகரத்தையும் கடல்வழி எதிரிகளிடமிருந்து காத்துள்ளன.
அருங்காட்சியகம்: இஸ்தான்புல்லில் பல அருங்காட்சியகங்கள் உள்ளன. பல அரிய பண்டைக்காலப் பொருட்கள் வைக்கப்பட்டுள்ளன. அற்புதமான கிரேக்க, ரோமானிய, எகிப்திய, துருக்கிய சிலைகள், கலைப் பொருட்கள், வழிபாட்டுத் தலங்களின் பகுதிகள், வேலைப்பாடுகள் நிறைந்த கல்லால் ஆன சவப்பெட்டிகள் ஆகியவை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
ராணுவ அருங்காட்சியகத்தில் ஓட்டோமன் கால பீரங்கிகள், போர்த் தளவாடங்கள், ராணுவச் சீருடைகள் ஆகியவை இடம்பெற்றுள்ளன.
துருக்கிய கவிஞர் சுனே அகின் கி.பி. 2005-ஆம் ஆண்டில் அமைத்த பொம்மைகள் கண்காட்சியும் இங்கு உண்டு. உலகக் குழந்தைகள் விளையாடப் பயன்படுத்தும் சுமார் 7000-க்கும் மேற்பட்ட பொம்மைகள் வைக்கப்பட்டு பார்வையாளர்களை மகிழ்விக்கிறது.
ஹகியா சோபியா: ரோமானிய மன்னர் கான்ஸ்டான்டினால் கட்டப்பட்ட இந்தக் கட்டடம் புனித ஞான தேவாலயம் என்றழைக்கப்படுகிறது. ரோம சாம்ராஜ்ய வல்லமையையும் செழிப்பையும் பறைசாற்றும் வகையில் அமைந்துள்ளது. காண்போரை பிரமிக்க வைக்கும் கட்டடக் கலைத்திறனுடன் அமைந்த இந்த ஆலயம் ஒருகாலத்தில் உலகின் மிகப்பெரிய கிறிஸ்துவ தேவாலயமாகத் திகழ்ந்தது.
அடுத்தது புனித சேவியர் தேவாலயம். அதில் உள்ள வண்ணச் சித்திரங்களுக்காக புகழ்பெற்றது. இதன் சுவர்களிலும், கூரையிலும் இயேசுநாதரின் மரணம், அவர் மீண்டும் உயிர்த்தெழுதல் பற்றிய அழகிய பல சித்திரங்கள் காணப்படுகின்றன.
மசூதிகள்: இஸ்தான்புல் நகரத்தை "மசூதிகளின் நகரம்' என்று கூறலாம். துருக்கிய கட்டடக் கலை வல்லுநரான மிமார்சினான் என்பவரால் 16-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட "சுலைமானியா மசூதி' மிகவும் வனப்பு மிகுந்ததாகும். 7 ஆண்டுகளில் கட்டி முடிக்கப்பட்ட இந்த மசூதியின் அருகில் மதம், மருத்துவம் ஆகியவற்றைப் போதிக்கும் பள்ளிகள், யாத்ரீகர்கள் தங்குமிடங்கள் அமைந்துள்ளன.
சுல்தான் அகமது மசூதி உட்புறத்தில் நீலநிற ஓடு மற்றும் சதுரக்கல் ஆகியவற்றால் 17-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. அற்புதமான அலங்காரங்கள் கொண்ட இது "நீல மசூதி' என்று அழைக்கப்படுகிறது.
இஸப் மசூதி நகரின் புனிதமான மசூதி என்று கருதப்படுகிறது. ஓட்டோமன் சுல்தான்களின் முடிசூட்டும் வைபவங்கள் இங்குதான் நடைபெறுவது வழக்கமாம்.
நிலத்தடி தண்ணீர் தொட்டி: 4-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட மிகப்பெரிய நிலத்தடித் தண்ணீர்த் தொட்டியான இது காண்போரை வியப்பில் ஆழ்த்துகிறது. ஐஸ்டியானினஸ் மன்னனால் 336 தூண்களுடன் இது அமைக்கப்பட்டது. ஹகியா சோபியா தேவாலயத்திற்கு எதிரில் அமைந்துள்ளது. இந்நீர்த் தொட்டியைக் காற்றில் கலந்துவரும் இனிய இசையைக் கேட்டுக்கொண்டே சுற்றிப்பார்ப்பது ஓர் இனிய அனுபவம்.
வணிக வளாகம்: உலகின் மிகப் பெரியதாகக் கருதப்படும் கட்டட அமைப்பில் ஒன்று. இஸ்தான்புல் நகரின் முக்கியப் பகுதியில் அமைந்துள்ள மிகப் பழைமையானது. இங்கு 65 கடைவீதிகள் உள்ளன. பல நூற்றாண்டுக் காலமாக வணிகர்கள் வணிகம் செய்யும் இடமாக இது திகழ்கிறது. எப்போதும் இங்கே மக்கள் கூட்டம் நிரம்பி வழியும். இங்கு தரை விரிப்புகள், அணிகலன்கள், தோல் பொருட்கள், அலங்காரப் பொருட்கள் மற்றும் பலவும் உள்நாட்டு, வெளிநாட்டுப் பயணிகளைக் கவர்கின்றன. இங்குள்ள அங்காடிகளில் பொருட்கள் வாங்குவது ஒரு தனி அனுபவமாகும்.
நூற்றுக்கணக்கான வாசனைத் திரவியங்கள் விற்கும் எகிப்திய பஜார் 17-ஆம் நூற்றாண்டில் ஓட்டோமன் அரசர்களால் அமைக்கப்பட்டது. இந்த வணிக வளாகம் கமகமக்கும் வாசனையையும் நாவிற்குச் சுவைதரும் பல பொருட்களும் கிடைக்கும் இடமாகத் திகழ்கிறது.
கலை இலக்கியக் கலாசாரத்தின் அடையாளமாகவும், வியாபார நகரமாகவும், சுற்றுலாத் தலமாகவும் திகழ்கிறது இஸ்தான்புல் நகரம். இது ஐரோப்பாக் கண்டத்தின் மூன்றாவது சிறந்த நகரமாகவும், உலகின் எட்டாவது அழகிய நகராகவும் கருதப்படுகின்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.