ஒப்பரிய உலக நகரங்கள் பெர்லின்

மறு பெயர் எடுத்து புத்தொளி வீசும் நகரமாகத் திகழ்கிறது பெர்லின்.
ஒப்பரிய உலக நகரங்கள் பெர்லின்
Published on
Updated on
3 min read

மறு பெயர் எடுத்து புத்தொளி வீசும் நகரமாகத் திகழ்கிறது பெர்லின். அழிவிலிருந்து மீண்ட ஆச்சரிய நகரம் என்றே கூறலாம். இந்நகரின் வரலாறு பல ஏற்ற இறக்கங்களைக் கொண்டது.
 கி.பி. 13-ஆம் நூற்றாண்டு முதலே பெர்லினைப் பற்றிப் பல செய்திகள் பதிவாகியுள்ளன.
 சக்கரவர்த்தி பிரெடெரிக் வில்லியத்தின் ஆட்சிக்காலத்தில் பெர்லின் ஜெர்மானிய சாம்ராஜ்யத்தின் தலைநகராக விளங்கியது. பின்னர் பிரஷ்யா. ஜெர்மன் பேரரசு, வெய்மர் குடியரசு ஆகிய நாடுகளின் தலைநகராகத் திகழ்ந்தது. சர்வாதிகாரி ஹிட்லர் ஆட்சிக்காலத்தில், மூன்றாம் ரெய்ச்சின் தலைநகராகவும் இருந்தது. தொன்மைமிக்க வரலாற்றுச் சிறப்பு கொண்டது பெர்லின்.
 இரண்டாம் உலகப் போரில் பெர்லின் பேரழிவைச் சந்தித்தது. போருக்குப் பின்னர் ஜெர்மனும் பெர்லினும் கிழக்கு ஜெர்மனி, மேற்கு ஜெர்மனி என இரண்டாகப் பிளவுபட்டது. பெர்லின் நகரமும் இரண்டாகப் பிரிக்கப்பட்டு இரண்டுக்கும் இடையில் தடுப்புச் சுவரும் எழுப்பப்பட்டது.
 மீண்டும் 1990-ஆம் ஆண்டு இரண்டு ஜெர்மனிகளும் இணைந்தன. ஒன்றுபட்ட ஜெர்மனி குடியரசின் தலைநகராக பெர்லின் இருந்து வருகிறது.
 ஐரோப்பாக் கண்டத்தில் பெர்லின் நகரம் கலை, இலக்கியம் மற்றும் பொருளாதாரத்தில் முக்கிய இடம் வகிக்கிறது. உள்நாடு மற்றும் உலகப் பொருளாதாரச் சந்தையில் பெரும்பங்கு வகிக்கிறது.
 பெர்லின் நகரில் சுமார் நாற்பது லட்சம் மக்கள் வாழ்கின்றனர். ஸ்பிரீ நதிக் கரையில் இது அமைந்துள்ளது.
 பெர்லின் சுவர்: கிழக்கு ஜெர்மனி அரசால் பெர்லின் நகரை இரண்டாகப் பிரிக்கும் வகையில் பெர்லின் சுவர் கட்டப்பட்டது. அமெரிக்கா இச்சுவரில் மூன்று இடங்களில் சாவடிகள் அமைத்துள்ளது. இது "செக் பாயிண்ட் சார்லி' என்று அழைக்கப்பட்டது. பெர்லின் சுவர் இடிக்கப்பட்டபோது இச்சாவடிகளும் மறைந்தன. இச்சுவர் இருந்த இடத்திற்கு தினமும் பார்வையாளர்கள் வந்து செல்கின்றனர்.
 அலெக்சாண்டர் பிளாட்ஸ்: அலெக்சாண்டர் வருகைக்கு முன்னர் ஆக்ஸ் சந்தை என்று அழைக்கப்பட்டு வந்தது. பின்னர் அவர் பெயரால் அழைக்கப்படுகிறது. இந்தச் சதுக்கத்தின் பெரும்பாலான கட்டடங்கள் போரில் சேதம் அடைந்தன.
 ஆனால், இப்போது அங்கு மாபெரும் கட்டடங்களும், உலகப் புகழ்பெற்ற தொலைக்காட்சிக் கோபுரமும் கட்டப்பட்டுள்ளது. பல் தேய்க்கும் குச்சிபோன்ற தோற்றமுடைய இந்தக் கோபுரம் ஐரோப்பாக் கண்டத்தில் உள்ள உயரமான கட்டடங்களில் ஒன்று. 1200 அடி உயரமுள்ள இந்த காங்கிரீட் கோபுரத்தின் உச்சியில் கோள வடிவில் சுழலும் உணவு விடுதி ஒன்று இயங்கி வருகிறது.
 1869-ஆம் ஆண்டு இங்கு உலக நேரங்காட்டியும், உலக நட்புக்கான செயற்கை நீர்ச்சுனை ஒன்றும் உருவாயின. இந்தச் சதுக்கத்தின் அருகில் ஸ்பிரீ நதியையொட்டியுள்ள சிறிய பகுதி புனித நிகோலஸ் மாவட்டமாகும். இங்குள்ள குறுகலான சந்துகளும், பழங்காலக் கட்டடங்களும் உணவு விடுதிகளும் தங்குமிடங்களும், 13-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பழைய தேவாலயம் ஒன்றும் பார்வையாளர்களை அதிகம் கவரும் இடங்களாகும்.
 ரெய்ச் ஸ்டாக்: ஜெர்மனியின் பாராளுமன்ற இருப்பிடமாகவும் பெர்லினின் முக்கிய அடையாளமாகவும் உள்ள இக் கட்டடம் ரெய்ச் ஸ்டாக் என்று அழைக்கப்படுகிறது.
 இக் கட்டடப் பணி 1884-ஆம் ஆண்டு துவங்கி, பத்தாண்டுகளில் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களின் உழைப்பில் உருவானது. இந்தக் கட்டடம் 137 மீட்டர் நீளத்திலும் 97 மீட்டர் அகலத்திலும் பிரமாண்டமாகக் கட்டப்பட்டுள்ளது. 1933-ஆம் ஆண்டு ஏற்பட்ட தீ விபத்தாலும் இரண்டாம் உலகப் போர் தாக்குதலினாலும் இக் கட்டடமும் அதன் மைய மாடமும் அதிலிருந்த அலங்காரங்களும் பெரும் பாதிப்புக்கு உள்ளாயின.
 கிழக்கு, மேற்கு ஜெர்மனிகள் இணைக்கப்பட்ட பிறகு 1999-ஆம் ஆண்டு மைய மாடம் கண்ணாடியால் மீண்டும் உருவாக்கப்பட்டது. ஜெர்மனி பாராளுமன்றம் இங்கு கொண்டு வரப்பட்டது. தனது பழைய பொலிவை மீண்டும் ரெய்ச் ஸ்டாக் பெற்றது.
 பிராண்டன் பர்க் வாயில்: கிழக்கு மற்றும் மேற்கு பெர்லினைப் பிரிக்கும் நுழைவு வாயிலாகவும், இந்த நகரங்களின் இணைப்பு அடையாளமாகவும் இது அமைந்துள்ளது.
 1891-ஆம் ஆண்டில் கட்டப்பட்ட இந்த 60 அடி உயர அலங்கார வாயிலில் கிரேக்க புராணக் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. உடைக்கப்பட்ட பெர்லின் சுவரில், இன்று எஞ்சி நிற்பது இந்த நுழைவாயில்தான்!
 கைசர் வில்கம் நினைவு தேவாலயம்: மேற்கு பெர்லினின் மையமாக அமைந்துள்ள இந்த தேவாலயம் போரினால் அடைந்த அழிவு மற்றும் சீரமைப்புக்கு அடையாளமாகத் திகழ்கிறது. பிரஷ்ய ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட இந்த ஆலயத்தைச் சுற்றி பல வர்த்தக நிறுவனங்களும் இருப்பதால் சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகின்றனர். சேதமடைந்த கோபுரம் மற்றும் அலங்காரப் பொருள்கள் புராதன காலச் சிறப்புக்கு உதாரணமாக விளங்குகின்றன.
 மியூசியம் தீவு: ஸ்பிரீ நதியில் அமைந்துள்ள இந்த அழகான தீவு யுனெஸ்கோ அமைப்பால் அங்கீகரிக்கப்பட்டது. இங்கு தேசியக் காட்சியகமும், பழமை அருங்காட்சியகமும், கைசர் அருங்காட்சியகமும், புதிய அருங்காட்சியகமும் மற்றும் பெர்காமன் அருங்காட்சியகமும் ஆக ஐந்து அருங்காட்சியகங்கள் இங்கு உள்ளன.
 இவற்றில் மன்னர் பிரெடெரிக்கால் கட்டப்பட்ட பழைய அருங்காட்சியகத்தில் மன்னர் குடும்பத்திற்குரிய கலைப் பொருட்கள் காட்சியில் வைக்கப்பட்டுள்ளன. பெர்காமன் அருங்காட்சியகத்தில் கிரேக்க, ரோமானிய அரசைச் சார்ந்த பல்கலைப் பொருட்களையும், புகழ்பெற்ற பாபிலோனின் கதவுகளையும் காணலாம்.
 மியூசியம் தீவில் 1894-ஆம் ஆண்டு கட்டப்பட்ட பெர்லினர் டோம் தேவாலயம் உள்ளது. 414 மீட்டர் நீளமும் 73 மீட்டர் அகலமும் உடைய இந்தத் தேவாலயத்தில் பல வண்ணக் கண்ணாடிகளில் நுணுக்கமான வேலைப்பாடுகள் உடைய உள்ளறை ஒன்றும் அழகான பிரார்த்தனை மேடை ஒன்றும் உள்ளன.
 இரட்டை தேவாலயம்: மியூசியம் தீவில் ஜெர்மானியத் தேவாலயம் ஒன்றும் பிரெஞ்சு தேவாலயம் ஒன்றும் உள்ளன. எதிரெதிரே கட்டப்பட்டுள்ள இந்த இரண்டும் இரட்டைச் சகோதரிகள் போல் அமைந்துள்ளன. பிரெஞ்சு தேவாலயம் 1701-ஆம் ஆண்டும்,
 ஜெர்மனி தேவாலயம் 1709-ஆம் ஆண்டிலும் கட்டப்பட்டவை.
 பிரெஞ்சு தேவாலயத்தில் ஓர் அருங்காட்சியகமும், ஐங்கோண அமைப்பிலுள்ள ஜெர்மானிய தேவாலயத்தில் ஜெர்மனி வரலாறு சம்பந்தமான அரும்பொருட்கள் கொண்ட அருங்காட்சியகம் ஒன்றும் அமைந்துள்ளன.
 பிரெடெரிக் மன்னர் சிலை: 44 அடி உயரத்தில் இந்த வெண்கலச் சிலை மிக நுட்பமான கலை நுணுக்கங்களுடன் அமைக்கப்பட்டுள்ளது. தேசிய நூலகத்தில் கம்பீரமாகக் காட்சி தரும் பிரெடெரிக் மன்னர் சிலை பெர்லின் நகருக்கே பெருமை சேர்க்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. மன்னருடைய பிரியத்திற்குரிய அவருடைய குதிரையின் பெயர் "காண்டே'. அதன்மீது அரசருக்குரிய உடை, முடி மற்றும் காலில் காலணி அணிந்ததுபோல் வடிவமைக்கப்பட்டுள்ளது. சிலையின் பீடத்தில் பிரெடெரிக் மன்னரின் வாழ்வியல் காட்சிகள் தீட்டப்பட்டுள்ளன.
 பெர்லின் நகரம் கேளிக்கைகளுக்கு இருப்பிடமாகவும், கலைகளில் சிறந்தும் விளங்குகிறது. உயர்தரக் கல்வி மற்றும் ஆராய்ச்சி மையமாகத் திகழ்கிறது. சிறப்பு வாய்ந்த 4 பல்கலைக்கழகங்களும் நூற்றுக்கணக்கான கல்லூரிகளும் உள்ளன. ஆண்டுதோறும் லட்சத்திற்கு மேற்பட்ட மாணவர்கள் இங்கு வந்து கல்வி கற்கின்றனர்.
 பல அறிவியல் ஆராய்ச்சி மையங்கள் இங்குள்ளன. ஆராய்ச்சியில் ஈடுபடும் அறிவியல் அறிஞர்களுக்கு உதவியாக லட்சக்கணக்கான புத்தகங்கள் கொண்ட நூற்றுக்கும் மேற்பட்ட நூலகங்கள் பெர்லின் நகரில் இயங்கி வருகின்றன.

 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com