ஒப்பரிய உலக நகரங்கள் பீஜிங்

மிகத் தொன்மையான வரலாற்றுச் சிறப்பு கொண்ட நாடு சீனா. இதன் தலைநகரம் பீஜிங்.
ஒப்பரிய உலக நகரங்கள் பீஜிங்
Published on
Updated on
2 min read

மிகத் தொன்மையான வரலாற்றுச் சிறப்பு கொண்ட நாடு சீனா. இதன் தலைநகரம் பீஜிங். பீஜிங் அல்லது பீகிங் என்றால் சீன மொழியில் "வடக்குத் தலைநகரம்' என்று பொருள். பீஜிங், சீனாவின் வடக்குப் பகுதியில் அமைந்திருப்பதால் அப்பெயரைப் பெற்றிருக்கக் கூடும்.
 கி.மு. 1057-ஆம் ஆண்டு முதல் பீஜிங் தலைநகராக இருந்து வருகிறது. அதனைத் தொடர்ந்து பல வம்ச மன்னர்களால் ஆளப்பட்டு, பல முறை பெயர் மாற்றப்பட்டு கி.பி. 1947 முதல் பீஜிங் என்ற பழைய பெயரைப் பெற்றது.
 இந்நகரம் சீனாவின் அரசியல், பொருளாதாரம், கலை ஆகியவற்றின் சின்னமாகவும், பன்னாட்டு வாணிபத்துக்கும், வர்த்தகத் தொடர்புக்கும் ஒரு மையமாகவும் திகழ்கின்றது. புறநகர்ப் பகுதிகளில் சீனாவின் தொழில் வளர்ச்சியை எடுத்துக்காட்டும் வகையில் பல தொழிற்பேட்டைகள் அமைந்துள்ளன. அத்துடன் நகரையொட்டி விவசாயமும் நடைபெற்று வருகிறது.
 பீஜிங் நகரில் ஒன்றரைக் கோடிக்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர். அவர்கள் பேசுவது சீன மொழியின் ஒரு பிரிவான "மண்டாரின்' ஆகும். மே, செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்கள் அங்கு சுற்றுலா செல்ல ஏற்ற மாதங்கள்.
 டியானமன் சதுக்கம்: உலகில் உள்ள சதுக்கங்களில் மிகப் பெரியது இது. சீன வரலாற்றில் புகழ்பெற்ற பல நிகழ்ச்சிகள் இங்கே நடைபெற்றுள்ளன. இந்தச் சதுக்கத்தின் முன் நவீன சீனாவின் நாயகனான மாசேதுங் படம் வரவேற்கிறது. இதனைச் சுற்றி தேசிய அருங்காட்சியகம், மாசேதுங் நினைவு இல்லம், டியானமன் போன்ற பல முக்கியமான கட்டடங்களைக் காணலாம். சூரிய உதயம், அஸ்தமனம் ஆகிய வேளைகளில் கொடி ஏற்றுவதையும், இறக்குகின்ற காட்சியையும் காண பெருமளவில் மக்கள் கூடுவர்.
 சீனப் பெருஞ்சுவர்: உலக அதிசயங்களில் ஒன்றாகப் போற்றப்படுவது சீனப் பெருஞ்சுவர். மனிதனால் கட்டப்பட்டு நிலவிலிருந்து பார்த்தாலும் தெரியும் ஒரே கட்டுமானம் சீனப் பெருஞ்சுவரே!
 இதன் பகுதி பீஜிங் நகரத்தின் அருகிலும் செல்கிறது. இந்தச் சுவரைக் காண ஏராளமான மக்கள் தினமும் வருகின்றனர். இதனைக் கண்டு வியக்காதவர்களே இல்லை.
 கோடை அரண்மனை: சீனாவை ஆண்ட சக்கரவர்த்திகள் கோடைகாலத்தில் இங்கு தங்குவர். இந்த அரண்மனை சுற்றுலாப் பயணிகளை வெகுவாகக் கவர்கிறது. இங்கு குளிர்ச்சியான நீர்நிலைகள், சுனைகள், குன்றுகள், தோட்டங்கள் அமைந்துள்ளன. ஓய்வு நேரத்தை உல்லாசமாகக் கழிக்க உகந்த இடம் இது. ஏரியின் அருகில் இருக்கும் சலவைக் கல்லாலான படகு பண்டைய கலைச் சிறப்பைப் பறைசாற்றிக் கொண்டுள்ளது.
 லாமா ஆலயம்: பீஜிங் நகரில் உள்ள அழகான ஆலயங்களில் ஒன்று இது. இதனை திபெத் ஆலயம் என்றும் கூறுகின்றனர். அழகிய புல்வெளிகளுடன் அமைந்த தோட்டம், வியப்பூட்டும் சிலைகள், அற்புதமான ஓவியங்கள், மிக நுணுக்கமாகச் செதுக்கப்பட்ட மர வேலைப்பாடுகள், பிரமாண்டமான திரைச் சீலைகள், வரவேற்கும் இரட்டைச் சிங்கங்கள் என இந்த ஆலயத்தின் சிறப்பைச் சொல்லிக்கொண்டே போகலாம். அறுபதடி உயரத்தில் ஒரே சந்தன மரத்தில் செதுக்கப்பட்ட புத்தர் சிலை இந்த ஆலயத்தின் சிறப்புகளின் சிகரமாக விளங்குகிறது.
 விலக்கப்பட்ட நகரம்: பீஜிங் நகரத்தின் தொன்மைக்கு அடையாளமாக விளங்கும் அரண்மனைகளே விலக்கப்பட்ட நகரம் என்று அழைக்கப்படுகிறது. இந்த அரண்மனைகள் பல நூற்றாண்டுகளாக நல்ல முறையில் பாதுகாக்கப்படுகின்றன.
 இந்தப் பழமையான அரண்மனைகளில் ஏறத்தாழ 9,900 அறைகள் இருந்தனவாம். இப்போதும் 8,000 அறைகள் காட்சிக்கு உள்ளன. பாதுகாப்புக்காக 20 அடி ஆழத்தில் அகழியும், 30 அடி உயர கோட்டைச் சுவர்களும் உள்ளன. இவற்றைச் சுற்றிலும் அழகான தோட்டங்கள் அமைந்துள்ளன.
 மனிதக் குகை: சுமார் 2 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் மனிதர்கள் வசித்த குகைகள் உள்ளன. பல அடுக்குகளாலான சுண்ணாம்புக் குகைகளில் பீஜிங்கில் வாழ்ந்த மனிதர்கள் விட்டுச் சென்ற பழம்பொருட்கள் தோண்டி எடுக்கப்பட்டுள்ளன.
 பெய்ஹைப் பூங்கா: அரசர்களும், அரசிகளும் உலாவிய பூங்கா இது. இதன் மத்தியில் ஒரு தீவும் அதில் ஒரு வெள்ளை ஆலயமும் உள்ளது.
 சொர்க்க ஆலயம்: பழமையான ஆலயங்களுக்கு பீஜிங் நகரம் பிரபலமானது. அவைகளுள் மிகவும் முக்கியமானது இந்த ஆலயம். சொர்க்கத்தையும் அதன் பெருமையையும் போற்றி வழிபடும் வகையில் கட்டப்பட்டது. சுமார் 3500 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இது சீனக் கட்டடக் கலைக்கு ஓர் எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது.
 பண்டைய காலத்தில் சீனாவில் மன்னர்கள் இறைவனின் மைந்தர்களாகக் கருதப்பட்டனர். மன்னர்கள் நாட்டில் வளம் கொழிக்க வேண்டி பரிவாரங்களுடன் வந்து இந்த ஆலயத்தில் வழிபாடு செய்வார்களாம். இங்கு வரும் மக்கள் இங்குள்ள எதிரொலிக்கும் சுவரைக் கண்டு மகிழ்கிறார்கள்.
 கன்ஃபூசியஸ் ஆலயம்: சீனாவின் மிகப்பெரிய தத்துவ மேதை கன்ஃபூசியஸ். அவர் உலகிற்கு வழங்கிய மதம் கன்ஃபூசியஸ். அவருடைய சித்தாந்தங்கள் மற்றும் அவரது வழியைப் பின்பற்றுகிறவர்களுக்காகக் கட்டப்பட்ட ஆலயம் இது! பண்டிகை காலத்தில் ஆடப்படும் எட்டு வரிசை நடனம் மக்களால் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
 முரசுக் கோபுரம் - மணிக் கோபுரம்: நேரத்தை அறிவிக்க அந்தக் காலத்தில் கட்டப்பட்ட கோபுரங்கள் இவை. மரத்தால் உருவாக்கப்பட்ட கோபுரத்தில் பண்டையக் காலத்தில் 24 முரசுகள் ஒலித்துக் கொண்டிருந்தன.
 இரண்டு அடுக்கு மணிக் கோபுரத்தில் புராதன கால மணி இன்றும் நல்ல முறையில் பராமரிக்கப்பட்டு வருகிறது.
 மீன் காட்சியகம்: உலகப் புகழ்பெற்ற இந்தக் காட்சியகத்தில் பல அரிய வகை மீன்கள், கடல் வாழ் உயிரினங்கள், திமிங்கிலங்கள், சுறா மீன்கள் மற்றும் பவளப்பாறைகள் ஆகியவை பார்வையாளர்கள் கண்களுக்கு அரிய விருந்தாகும். மேலும் பீஜிங்கில் காண வேண்டிய இடங்கள் பட்டுச் சந்தை தாவர இயல் பூங்கா ஆகியவையாகும். ஒருபுறம் வான்முட்டும் கட்டடங்கள், வணிக வளாகங்கள், உயர்தர விடுதிகள், உணவகங்கள் மறுபுறம் யுனெஸ்கோ நிறுவனம் சான்றளித்த புராதனச் சின்னங்கள் என பழமையும் புதுமையும் கலந்த நகரமாக பீஜிங் திகழ்கிறது.

 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com