/

அரங்கம்: புதிய பாதை!

பல்லவன்!...பல்லவன்!...எங்கே சென்றாலும் பல்லவன்! அவன் என்ன நாட்டின் தலைவனா?....விளையாட்டு வீரனா? வகுப்பில்..., திடலில்..., பள்ளியின் காலைப் பேரவையில் பல்லவன் புகழ்!

News image
Updated On :20 ஜூன் 2015, 12:31 pm

பூதலூர் முத்து

காட்சி-1

இடம்-பள்ளித்திடல் வேப்பமரத்தடி

மாந்தர்-சேது,ராமு.

சேது: (தனக்குள் எரிச்சலோடு) பல்லவன்!...பல்லவன்!...எங்கே சென்றாலும் பல்லவன்! அவன் என்ன நாட்டின் தலைவனா?....விளையாட்டு வீரனா? வகுப்பில்..., திடலில்..., பள்ளியின் காலைப் பேரவையில் பல்லவன் புகழ்!

(ராமு வருகிறான்)

ராமு: என்னப்பா சேது, என்ன ஆழ்ந்த சிந்தனை? இன்று பல்லவனுக்குப் பிறந்தநாள். என் வீட்டுக்கே வந்து இனிப்பும் பழமும் கொடுத்தான்.

சேது: ராமு, ஏன் எல்லோரும் அவன் புகழைப் பாடுகிறார்கள்?

ராமு: உனக்குத் தெரியாதா? உனக்குத் தமிழில் பிடித்த வார்த்தை "விடுப்பு'...பலநாள் விடுப்பில் இருந்தால் அவனுடைய செயல்களைப்பற்றி உனக்கு எப்படித் தெரியும்?

சேது: சரி, சொல்.

ராமு: மதிப்பெண் வாங்குவதில் முதலிடம்! வகுப்பில் பிறருக்குப் புரியாத பாடப்பகுதியை எளிதாகச் சொல்லுவதில் முதலிடம்! சக மாணவர்களுக்கு உதவி செய்வதில் முதலிடம்! பள்ளியைத் தூய்மை செய்யும் மாணவர் அணிக்குத் தலைவன்! அவன் புகழ் கன்னித்தீவு கதை போல!

சேது: (தனக்குள்) ...அவன் புகழுக்கு இவையெல்லாம் காரணமா?...இன்று பிறந்தநாள்..., மகிழவோடு வருவான்... அந்த மகிழ்ச்சியை எப்படியாவது மாற்ற வேண்டும்.....நான் எவ்வளவோ முயன்றும் படிப்பு வரவில்லை. மதிப்பெண்ணும் நாற்பதைத் தாண்டுவதில்லை. எந்தப் போட்டிக்குப் பெயர் கொடுத்தாலும் அதில் வெற்றி இல்லை! எல்லோரும் முயல்...,முயல்...,என்றால் நான் என்ன செய்ய? முடிந்தால்தானே...பல்லவனை ஒரு சிக்கலில் ஆழ்த்தி அதிலாவது வெற்றி பெறுவேன்.

(ஒரு திட்டம் தீட்டுகிறான்)

காட்சி: 2

இடம்: ஒன்பதாம் வகுப்பு

மாந்தர்: ஆசிரியர் வேலவன், மாணவன் கோபு.

(விளையாட்டுப் பாடவேளை. மற்ற மாணவர்கள் திடலில் விளையாடுதல்)

(கோபு யாருமில்லாத அந்த வகுப்பில் நிற்கிறான். கையில் பேனா மின்னுகிறது. ஆசிரியர் வேலவன் எட்டிப் பார்க்கிறார்)

வேலவன்: கோபு..., என்ன இங்கே நிற்கிறாய்? கையில் சேதுவின் பேனாபோல உள்ளதே...,அதுதான் இப்படி மின்னும்!

(அவன் ஆசிரியரிடம் வந்து ரகசியமாக ஏதோ சொல்கிறான்)

வேலவன்: அப்படியா விஷயம்? உன்னை எனக்குத் தெரியும்..., நீ நல்லவன்! ஆனால் "பனை மரத்துக்குக் கீழே இருந்து பாலைக் குடித்தாலும் இந்த உலகம் நம்பாது' என்ற பழமொழி உனக்குத் தெரியுமே! உன் வேலை முடிந்தபின் வந்து விவரத்தைச் சொல்..., அடுத்த பாடவேளை என்னுடையது. என்ன நடக்கிறதென்று பார்ப்போம்!

(வேலவன் தன் அறைக்குப் போகிறார்)

காட்சி: 3

இடம்: வகுப்பறை

மாந்தர்: ஆசிரியர் வேலவன், சேது, கோபு, வகுப்பு மாணவர்கள், மாணவிகள்.

(வேலவன் பாடத்தைத் தொடங்குகிறார்)

சேது: (எழுத்து) ஐயா.., தங்க முலாம் பூசிய என்னுடைய பேனாவைக் காணவில்லை!

வேலவன்: துபாய் மாமாவிடமிருந்து வந்த பேனாவா?

சேது: ஆமாம், சிலர் அதன் மீது கண்ணாக இருந்தார்கள். இன்று காணோம்?

வேலவன்: உன் பையை நன்றாகப் பார்த்தாயா?

சேது: பார்த்துவிட்டேன். திடலுக்குப் போகுமுன் பையில் வைத்துவிட்டு வந்தேன். இப்போது பார்த்தால் காணோம்.

வேலவன்: விளையாட்டுப் பாடவேளையில் யாராவது இருந்தார்களா?

சேது: தெரியாது ஐயா. நான் கைப்பந்து விளையாட்டில் கவனமாக இருந்தேன்.

கோபு: (மனதில்) ஒரு மாணவன் இப்படியா பொய் சொல்வான்? திடலில் அவன் இல்லை. தலைவலி என்று வகுப்புக்குமுன் உள்ள நடைபாதைக்கு வந்தான்!

வேலவன்: (யோசித்தவாறு) எடுத்தது யாராக இருக்கும்? சேது, உனக்கு யார் மீதும் ஐயம் உள்ளதா?

சேது: ஆமாம் ஐயா..

(தாளில் பெயரை எழுதிகிறான்)

வேலவன்: (தாளைப் பார்க்கிறார்) சரி... நான் இந்த விஷயத்தைக் கவனமாகக் கையாள்வேன்....யார் மீதும் வீண்பழி சுமத்தக் கூடாது. நீ கவலைப்படாதே..., இந்தப் பாடவேளை முடிவதற்குள் உன் பேனாவை உன்னிடம் தரவேண்டியது என் பொறுப்பு!

அதற்குமுன் நடத்த வேண்டிய பாடத்தை நடத்துவோம்.

காட்சி: 4

இடம்: வகுப்பறை

மாந்தர்: ஆசிரியர் வேலவன், மாணவர், மாணவியர்.

(பாடம் முடிகிறது)

வேலவன்: சேது, நீயே சொல்...என்ன செய்யலாம்?

சேது: ஒவ்வொரு பையாக சோதனை போடலாம். குட்டு வெளிப்படும். என் ஆயிரம் ரூபாய் பேனாவும் கிடைக்கும்.

வேலவன்: எல்லோரும் இருக்கிறார்களா?

ஒரு மாணவன்: ஐயா, பல்லவன் மட்டும் இல்லை.

சேது: (முந்திக்கொண்டு) அவன் இல்லாவிட்டால் என்ன, அவனுடைய பை உள்ளது. சோதனை போடலாம்.

வேலவன்: அவன் அனுமதி பெற்றுப் போயிருக்கிறான். உரியவர் இல்லாதபோது சோதனை போடுவது நல்ல முறை...,பண்பு இல்லையே!

(சேது விழிக்கிறான்)

-வாயிலில் குரல் கேட்கிறது-

பல்லவன்: ஐயா, இதோ நான் வந்துவிட்டேன்!

வேலவன்: (பல்லவனிடம் "பேனா காணோம்' என்பதைச் சுருக்கமாகச் சொல்கிறார்)

சரி, சோதனையைத் தொடங்கலாம்.

(சேது உள்ளத்தில் ஒருபுறம் நிம்மதி...மறுபுறம் பதற்றம்)

சேது: வகுப்பு முடிய ஐந்து நிமிடம்தான் உள்ளது. தங்க முலாம் பேனா!

வேலவன்: விலை உயர்ந்த எதையும் வகுப்புக்குக் கொண்டு வரக் கூடாது. முன்பே கூறியிருக்கிறோம். அதைக் கேட்கவில்லை. இப்போது ஏன் பதற்றம்?

சேது: (மனதில்) -என் திட்டமே வேறு! இந்தப் பேனாவை வைத்துத்தான் நாடகம் போட முடியும்!-

வேலவன்: இதோ இன்னும் சற்று நேரத்தில் உன் பேனா வரப் போகிறது!

(சேதுவின் நெஞ்சுத் துடிப்பு மிகுதியாகிறது)

காட்சி:5

இடம்: வகுப்பறை

மாந்தர்: ஆசிரியர் வேலவன், சேது, பல்லவன், கோபு, மாணவ மாணவிகள்.

(சோதனை நடக்கிறது)

வேலவன்: சேது! நீயே ஒவ்வொரு பையாகச் சோதனை போடு! கோபி நீயும் சேவியரும் கண்காணியுங்கள். கடைசி வரிசையிலிருந்து தொடங்கலாம்.

(பல்லவனுடைய பையை எடுத்ததும் சேதுவுக்கு வியர்த்துக் கொட்டுதல். கையை உள்ளே விடுதல். கீழே கொட்டுதல். முகத்தில் பரபரப்பு. பேனா அங்கு இல்லை!

-சேதுவின் தவிப்பை பல்லவன் பார்க்கிறான். ஒன்றும் புரியவில்லை; சேது, தன்னுடையை பையை சோதிக்காமல் போகிறான்.

வேலவன்: சேது, உன் பையையும் சோதனை போடு! அதுதான் முறை!

(அவன் தயக்கமின்றி மேசை மீது பையைக் கவிழ்க்கிறான். தங்கப் பேனா விழுகிறது!! அவனுக்கு மயக்கம் வரும் நிலை!)

சேது: (மனதில்) என்ன இது! இந்த "அநியாயம்' எப்படி நடந்தது?

(அவன் முகத்தில் ஏமாற்றம்; மாணவர்க்குக் குழப்பம்!)

வேலவன்: உன் பேனாதானே?

சேது: ஆமாம் ஐயா!

(மணி அடிக்கிறது)

வேலவன்: (சேதுவிடம்) சரி, நீ மட்டும் என்னோடு என் அறைக்கு வா...ஐந்து நிமிடம் உன்னோடு பேச வேண்டும்.

(சேதுவின் நெஞ்சு படபடக்கிறது)

காட்சி: 6

இடம்: ஆசிரியர் வேலவனின் அறை

மாந்தர்: ஆசிரியர் வேலவன், சேது.

வேலவன்: சேது, உன் விலை உயர்ந்த பேனா உனக்குக் கிடைத்து விட்டது. ஆனால் உன் முகத்தில் அதற்கான மகிழ்ச்சி இல்லையே ஏன்?

சேது: (அமைதியாக நிற்கிறான்)

வேலவன்: உன்னுடைய சோர்வுக்குக் காரணம், பல்லவனின் புகழ்! அப்படித்தானே?

சேது: (மனதில்) உண்மையை அப்படியே சொல்கிறாரே!

வேலவன்: "யாருக்கும் தெரியாது' என்று நாம் ஒரு வேலையைச் செய்தால் அதைப் பார்க்கவும் ஒருவர் இருப்பார்!

சேது: (பணிவாக) யார் பார்த்தார்கள்?

வேலவன்: அது உனக்குத் தேவையில்லை! நீ செய்தது தவறு என்று உனக்குப் புரிய வேண்டும்..., இப்போது பாழ்பட இருந்தது உன் பெயர்தான்! ஏனென்றால் அவன் நல்லவன் என்று எல்லோருக்கும் தெரியும்! மாணவனாகிய நீ அறியாமையால் செய்த செயலையே ஆசிரியராகிய நானும் பின்பற்றுவது சரியா? அதனால்தான் வகுப்பில் எந்த விசாரணையும் வைக்காமல் எந்தச் செய்தியையும் கூறாமல் என் அறைக்கு உன்னை மட்டும் தனியே அழைத்தேன்.

(சேதுவின் கண்கள் கலங்குதல்)

சேது: ஐயா, என்னை மன்னித்து விடுங்கள். பொறாமை உணர்வு என்னைத் தீயவழிக்குக் கொண்டு சென்றது! உங்கள் பெருந்தன்மையால் நான் பிழைத்தேன்.

(காலில் விழப்போகிறான்; அவர் தடுத்து, தோளை ஆதரவாகத் தட்டிக் கொடுக்கிறார்.)

வேலவன்: சேது, நீ உன் தவற்றை உணர்ந்து விட்டாய். இனி உன் பாதை புதிய பாதைதான்! நீ பல்லவனோடு நட்பு கொள்! அந்த நட்பால் உன் பண்புகள் ஒளி பெறும்!

(சேது மனம் திருந்தியவனாக விடை பெறுகிறான்.)

-அவன் உருவம் மறைந்தபின் கோபுவை அழைக்கிறார்-

வேலவன்: கோபு! சேது நடத்திய நாடகத்தில் திருப்புமுனையை உண்டாக்கியது நீதான்! பல்லவனுடைய பையில் சேது பேனாவை வைத்ததை தற்செயலாகக் கவனித்த நீ அறிவுக் கூர்மையுடன் விரைவாகச் செயல்பட்டாய்! பல்லவனுக்கு நேர இருந்த துன்பம் அவனுடைய பார்வைக்கு வராமலே போனது, நீ செய்த செயலின் சிறப்பு! சேதுவுக்கும் அவன் செயலாலேயே இழுக்கு வர இருந்தது. அதையும் தடுத்துவிட்டாய்! உனக்கு என் மனமார்ந்த பாராட்டு!

(திரை)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.