/

அரங்கம்: விநாயகர் வந்தார்!

இங்கே பாரு நம்ம கணபதியை! விநாயகருக்குத் தூபம் போடறதும், தீபம் காட்டறதும், பூ தூவறதும்... அடாடா என்ன பக்தி!

News image
Updated On :12 செப்டம்பர் 2015, 9:45 am

எஸ். ஆர். ஜி. சுந்தரம்

காட்சி - 1

இடம்: கணபதி வீடு

லதா, கணபதி, ஜகன் - கணபதி பூஜை செய்து கொண்டிருக்கிறான்.

கணபதி: சிந்தித்தவர்க்கருள் கணபதி ஜெய ஜெய

சீரியவானைக் கன்றே ஜெய ஜெய

அன்புடை அமரரைக் காப்பாய் ஜெய ஜெய

இண்டைச் சடைமுடி இறைவா ஜெய ஜெய

ஈசன் தந்தருள் மகனே ஜெய ஜெய!

ஜகன்: ஆகா, என்ன பக்தி, என்ன பக்தி!... லதாக்கா!

லதா: என்ன ஜகன்?

ஜகன்: இங்கே பாரு நம்ம கணபதியை! விநாயகருக்குத் தூபம் போடறதும், தீபம் காட்டறதும், பூ தூவறதும்... அடாடா என்ன பக்தி!

லதா: ஜகன், இவன் பக்தியை மெச்சி, பிள்ளையாரே முன்னால வந்து, ""ஏ, பிள்ளாய் கணபதி! உனக்கு என்ன வரம் வேண்டும். கேள், தருகிறேன்'' என்று சொன்னாலும் சொல்லுவார்!

ஜகன்: அப்போ இவன் என்ன கேட்பான்? ஒருவேளை காளிதாசன் கம்பன்போல தானும் பெரிய கவியாகணும்னு கேட்பானோ?

லதா: சேச்சே. இவனுக்கு அப்படியெல்லாம் கேட்கத் தோணாது. ""பிள்ளையாரே, பிள்ளையாரே! இன்றைக்கு எனக்குப் பலவிதமான கொழுக்கட்டைகள் கிடைக்க அருள்புரியணும்''னு கேட்பான்.

கணபதி: ஏ ஜகன், லதா! என்ன முசுமுசுன்னு பேசிக்கிட்டு---- லதா, நீ போய் கொழுக்கட்டை கொண்டு வா!

லதா: என்ன கொழுக்கட்டையா? அதெல்லாம் எதுவும் செய்யலே! சாதம், மோர் அவ்வளவுதான்.

கணபதி: ஏய், விளையாடாதே! இன்னிக்கு விநாயகர் சதுர்த்தி. விநாயகருக்குக் கொழுக்கட்டை நைவேத்யம் பண்ணனும். போய் கொண்டு வா!

லதா: கொழுக்கட்டை நான் செய்யலே... செய்யவும் முடியாது!

கணபதி: இதோ பார்! உடம்பு சரியில்லாத மாமாவைப் பாக்கத்தான் அம்மாவும் அப்பாவும் அவசரம் அவசரமா ஊருக்குப் புறப்பட்டுப் போயிருக்காங்க. போறதுக்கு முன்னாடி, கொழுக்கட்டை மாவெல்லாம் தயார் பண்ணி வச்சுட்டுத்தான் போயிருக்காங்க. கொழுக்கட்டை தயார் பண்றதைப் பத்தியும் உங்கிட்டே சொல்லிட்டுத்தான் போயிருக்காங்க! செய்ய வேண்டியதுதானே...

லதா: எனக்கு நேரம் இல்லே - செய்ய முடியாது!

கணபதி: இன்னிக்கு விடுமுறைதானே...

லதா: இருந்தாலும் படிக்கற வேலை நிறைய இருக்கு.

கணபதி: அப்படியா, சரி. ரெண்டு பேரும் பிள்ளையாருக்கு பூ போட்டு நமஸ்காரம் பண்ணிட்டுப் போங்க! அண்ணன் சொல்றதைக் கேளுங்க!

லதா: நமஸ்காரம் பண்ண மாட்டேன்... அம்மா சொன்னாதான் செய்வேன்!

ஜகன்: நானும் அம்மா சொன்னாதான் செய்வேன்.

கணபதி: அப்படியா, விநாயகர் மகிமையும், அவர் சக்தியும் உங்களுக்குப் புரியல்லே. விநாயகர்தான் உங்களுக்குப் புத்தி புகட்டணும். சரி. நான் கோயிலுக்குப் போயிட்டு, ஒரு நண்பன் வீட்டுக்குப் போயிட்டு வரேன்! வீட்டைப் பாத்துக்குங்க!

காட்சி - 2

இடம்: கணபதி வீடு

லதா, ஜகன், விநாயகர்

லதா: ஜகன்... வாடா நம்ம கண்ணாமூச்சி ஆட்டம் விளையாடலாம்!

ஜகன்: சரி. ஆனா நீதான் முதல்லே கண்ணைக் கட்டிக்கணும்... நான் ஒளிஞ்சுப்பேன்...

லதா: சரி! (ஜகன் ஒரு மறைவிடத்தில் பதுங்கிக் கொள்ள லதா தேடுகிறாள். அப்பொழுது அங்கு விநாயகர் வருகிறார். லதாவின் பிடியில் அகப்படுகிறார்.) ஆ, மாட்டிக்கிட்டியா நீ? ஐயோ என்ன இது? யானையோட தும்பிக்கை மாதிரி இருக்கு... ம், அட, தலையிலே வேற கிரீடம்... வாயிலே தந்தம் (என்றபடி கண் கட்டை அவிழ்த்துவிட்டுப் பார்க்க) ஆ, பிள்ளையார்! ஜகன்! ஜகன்! இதோ பார், நம்ம வீட்டுக்கு நிஜமாவே பிள்ளையார் வந்து நிக்கறார்!

ஜகன்: ஆமாம்! பிள்ளையாரேதான்! அதே தொந்தி, அதே நடை!

லதா: விழுந்து நமஸ்காரம் பண்ணுவோம்!

பிள்ளையார்: புகழோடு வாழ்க! பிள்ளைகளா, இதுதானே கணபதி வீடு! கணபதி எங்கே?

லதா: வெளியில் போயிருக்கிறான்.

பிள்ளையார்: அவனை நான் பார்க்க வேண்டும்!

லதா: நான்போய் அவனைக் கூட்டிக்கொண்டு வருகிறேன்.

பிள்ளையார்: அலைய வேண்டாம்! கொஞ்சம் பொறுத்துப் பார்ப்போம்!... சரி! நீங்கள்தானே

ஜகன், லதா!

லதா: ஆமாம்!

பிள்ளையார்: என்னை நீங்கள் பூஜை செய்ய மறுத்ததாகக் கேள்விப்பட்டேன். உண்மைதானே?

லதா: இல்லை.. வந்து... வந்து... இப்ப வேணும்னா மலர்பூஜை செய்துடறோம்.

பிள்ளையார்: உம்ம்... ஒழுங்காகப் பூஜை செய்யுங்கள்! கொழுக்கட்டையையும் படையுங்கள்.

லதா: கொழுக்கட்டை... வந்து... வந்து... கொஞ்சம் நேரமாகும்.

பிள்ளையார்: பரவாயில்லை. ஆனால் வெல்லம், தேங்காய், கொழுக்கட்டைகள் படைக்கப்பட வேண்டும்!

லதா: இதோ போகிறேன் விநாயகரே!

ஜகன்: பிள்ளையார் ஐயா, எனக்கு ஒரு சந்தேகம் கேட்க வேண்டும். உங்களுக்கு நான்கு கைகள்தானே... பின் ஏன் இரு கைகளுடன் வந்திருக்கிறீர்?

பிள்ளையார்: நான்கு கைகளுடன் வந்தால் பலர் அச்சம் கொள்வர். அதனால்தான், ஜகன், உன் செல்போனில் என் பதில்களைப் பதிவு செய்து கொள். லதா வந்ததும் அவளைக் கேட்கச் செய்யலாம். அடுத்த சந்தேகம்?

ஜகன்: உங்கள் தந்தங்களில் ஒன்று பாதியாய் உடைந்திருக்கிறதே, ஏன்?

பிள்ளையார்: ஒருமுறை வியாசமுனிவர் பாரதக் கதையைச் சொல்லிக்கொண்டே வந்தார். நானும் எழுதியவண்ணம் இருந்தேன். பாதியில் என் எழுதுகோல் உடைந்துவிட, உடனே என் தந்தத்தின் ஒரு பாதியை உடைத்தெடுத்து எழுதத் தொடங்கிவிட்டேன்.

ஜகன்: உங்கள் முகம் ஏன் யானை முகமாக உள்ளது?

பிள்ளையார்: சொல்கிறேன்... என் முகத்தின் இடப்புறத் தந்தத்திலிருந்து சுழியாகத் தொடங்கி, அப்படியே மேல்நோக்கித் தலைப்பக்கமாகச் சுற்றி, வலது புறமாக கீழிறங்கி துதிக்கைச் சுருளோடு ஒரு கோட்டைக் கற்பனை செய்தால் அது "ஓ' "ஓம்' என்பதுபோலத் தெரியும். தெரிகிறதா?

ஜகன்: ஆமாம், தெரிகிறது!

பிள்ளையார்: இதுதான் ஓம் எனும் பிரணவ மந்திரம். அதன் ஸ்வரூபமே நான்! இந்தப் பிரணவத்திலிருந்துதான் பிரபஞ்சமே உண்டாயிற்று.

ஜகன்: பிள்ளையாரே, நீங்கள் ஏன் போயும் போயும் மூஞ்சூரைத் தங்கள் வாகனமாக்கிக் கொண்டுள்ளீர்கள்?

பிள்ளையார்: அது ஒரு கதை!

லதா: அந்தக் கதையை நானும் கேட்கிறேன்! இன்னும் ஐந்து நிமிடத்தில் கொழுக்கட்டை வெந்துவிடும்... ம்... சொல்லுங்கள்!

பிள்ளையார்: வெகுகாலம் முன் ஒரு முனிவர் இருந்தார். பேர் சபரி. அவர் மனைவி பேர் மனோமாயை! ஒருநாள் சிரவிஞ்சன்கிற கந்தர்வன், மனோமாயையிடம் வம்பு செய்தான். அப்போது அங்கே வந்த சபரி முனிவர், ""சிரவுஞ்சனே! நீ மூஷிகமாகப் போ!'' என்று சாபமிட்டார். சிரவுஞ்சன் தன்னை மன்னிக்கும்படி வேண்டி சாபவிமோசனம் கேட்டு அழுதான். முனிவரும் இரங்கி, ""சிரவுஞ்சா! வெகுவிரைவில் விநாயகராகிய நான் பராசுர முனிவர் ஆசிரமம் வருவேன். அவருக்குப் பிள்ளையாக வளர்வேன்'' அப்பொழுது சாபம் நீங்கிவிடும்'' என்றார். அவ்வாறே நான் வரேணியன் என்னும் ராஜாவிற்குக் குழந்தையாகப் பிறந்தேன். என் உருவம் அந்த ராஜாவிற்குப் பிடிக்கவில்லை. அதனால் பராசுர முனிவர் ஆசிரமம் அருகில் விட்டுவிட்டான். முனிவரும் என்னை வளர்த்து ஆளாக்கினார். இச்சமயத்தில் சிரவுஞ்சன் மூஷிக உருவத்துடன் வந்து முனிவர் ஆசிரம மரங்களை நாசம் செய்தான். உடனே நான் என் "பரசு'ங்கற ஆயுதத்தால அவனை அடக்கி ஜெயிச்சு, எனது வாகனமாக ஆக்கிக் கொண்டேன்.''

லதா: விநாயகரே! இவ்வளவு நாளாக உங்கள் மகிமை தெரியாமல் இருந்துவிட்டோம். இனிமேல் உங்களைப் பூஜிக்காமல் இருக்க மாட்டோம். இருங்கள், கொழுக்கட்டை கொண்டு வருகிறேன்.

ஜகன்: இதோ இரண்டுவித கொழுக்கட்டைகளும்! எடுத்துக் கொள்ளுங்கள்!

பிள்ளையார்: நான் பூஜையறைக்குள் உட்கார்ந்துதான் சாப்பிடுவேன்!

லதா: அப்படியானால் கொழுக்கட்டைகளை பூஜையறைக்குள்ளே வைத்து விடுகிறேன்.

பிள்ளையார்: சரி, கணபதி வந்ததும் நீங்கள் அவனிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். கவலை வேண்டாம்! உங்கள் மூவருக்கும் என் பிரசாதமாகக் கொழுக்கட்டைகளை மீதம் வைப்பேன். நீங்கள் ""ஓம் கணபதியே நம'' என்று சொல்லியபடி, தியானத்திலிருங்கள்.

காட்சி -3

இடம்: கணபதி வீடு

லதா, ஜகன், கணபதி, பெரியவர்

பிள்ளையார் கதவைத் திறந்துகொண்டு வெளியே வந்தபடி

பிள்ளையார்: லதா ஜகன் - உள்ளே பிரசாதம் வைத்திருக்கிறேன். போய் சாப்பிடுங்கள். நான் வருகிறேன்.

லதா: இருங்கள்! நாங்கள் தேர்வில் முதல் மதிப்பெண் எடுக்க வேண்டும்! போட்டிகளில் வென்று பல பரிசுகள் பெற வேண்டும் என்று ஆசைப்படுகிறோம். ஆசி கூறுங்கள்!

பிள்ளையார்: அவ்விதமே ஆகட்டும்!

பெரியவர்: தம்பி கணபதி...

லதா: யார் நீங்கள்?

பெரியவர்: கணபதியை உடனே பார்க்க வேண்டும்.

ஜகன்: அவன் வீட்டிலில்லை.

பெரியவர்: இல்லை, கணபதி வீட்டில்தான் இருக்கிறான். சபாஷ். கணபதி, சபாஷ்! விநாயகர் வேடத்தில் வெளுத்துக் கட்டிவிட்டாய்! குரலை மாற்றி, நடையை மாற்றி, விநாயகர் கதையையும் சொல்லி... பலே பலே!... தம்பி தங்கையை நல்லா நம்ப வச்சுட்டே! வாழ்த்துகள்! நான் எடுக்கப்போற "விநாயகர் விஜயம்' தொடர்லே, நீதான் விநாயகர்!

கணபதி: (விநாயகர் வேடத்தைக் கலைத்தபடி) லதா, ஜகன் என்ன பாக்கறீங்க... உங்க அண்ணா கணபதியேதான் நான்! கோயிலுக்குப் போயிட்டு வரும்பொழுது இப்பெரியவர் என்னை ஏற இறங்கிப் பார்த்தார். ""தம்பி! நீ விநாயகர் மாதிரியே அமைப்பா இருக்கே... விநாயகரா நடிக்க வருகிறாயா? என்று கேட்டார். "சரி' என்றேன். உடனே எனக்கு "விநாயகர் மேக்கப்' போட்டுப் பார்த்தார். ""தம்பி! இப்போ இந்த மேக்கப்போட உன்னை உன் வீட்டுலே கொண்டுபோய் விடறேன். உன் வீட்டில் உன் இஷ்டப்படி நடி. உன் வீட்டிலுள்ளவர்கள் உன்னை அசல் விநாயகர் என்றே நம்பிவிட வேண்டும். அப்படி நடித்து வெற்றி பெற்றுவிட்டால் உனக்கு விநாயகர் வேடம் தயார்'' என்றார். எப்படி என் நடிப்பு?

லதா: கணபதி அண்ணா கெட்டிக்காரன் நீ! ஒரேசமயத்தில் என்னைக் கொழுக்கட்டையும் செய்ய வைத்துவிட்டாய்... விநாயகராக நடிக்கவும் போகிறாய்! வாழ்த்துகள்!

கணபதி: எல்லாம் விநாயகரைப் பூஜை செய்ததால் கிடைத்த பலன்! நீங்களும் பூஜை செய்யுங்க!

திரை

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.