இரக்கம் காட்டினால்...

சந்நியாசி ஒருவர் குருúக்ஷத்திரத்தை அடைந்து அங்குள்ள கோவில்களையும் தீர்த்தங்களையும் தரிசனம் செய்வதற்காக இரண்டு சிஷ்யர்களை
இரக்கம் காட்டினால்...

சந்நியாசி ஒருவர் குருúக்ஷத்திரத்தை அடைந்து அங்குள்ள கோவில்களையும் தீர்த்தங்களையும் தரிசனம் செய்வதற்காக இரண்டு சிஷ்யர்களை உடன் அழைத்துக் கொண்டு நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்பகுதி நீண்ட நாட்களாக மழையின்றி இருந்தது. எங்கும் வறட்சி! தரை காய்ந்து வெடித்துக் கிடந்தது. நீர் நிலைகள் வற்றிக் கிடந்தன. மக்களின் முகங்கள் மிகவும் வாட்டமடைந்து இருந்தன. இவற்றையெல்லாம் பார்த்துக் கொண்டே சந்நியாசி ஒரு கோவிலை அடைந்தார்.

அந்தக் கோவிலின் அருகே உள்ள குளத்தில் தண்ணீர் வற்றி மீன்கள் இறந்து கிடந்தன. இறந்து கிடந்த மீன்களை சந்நியாசி பார்த்தார். அருகே ஒரு சிறு பள்ளம்! அதில் சிறிதளவு நீர் இருந்தது! அதில் சில மீன்கள் உயிருக்குப் போராடிக்கொண்டு இருந்தன. சுள்ளென்று வெயில் அடித்தது! சூரியனின் வெப்பத்தில் இன்னும் இரண்டு நாட்களில் இந்தத் தண்ணீரும் வற்றி விடும் போலிருந்தது. அதனால் அந்த மீன்களும் இறந்து விடும் என்று சந்நியாசிக்குத் தோன்றியது.

இந்த மீன்களையாவது காப்பாற்ற வேண்டும் என்று அவருக்குத் தோன்றியது. என்ன செய்யலாம் என்று அவர் யோசித்தார்.

அதற்குள் தங்கள் கிராமத்திற்கு ஒரு சந்நியாசி வந்திருக்கிறார் என்ற செய்தி ஊரெங்கும் பரவியது! மக்கள் அனைவரும் ஒன்று கூடி அவரைப் பார்க்க விரைந்து வந்தனர்.

அவர்களில் ஒருவர் சந்நியாசியைப் பார்த்து, ""சுவாமி! இந்தப் பக்கத்தில் மழை பெய்து பல மாதங்கள் ஆகின்றன. அதன் காரணமாக நீர் நிலைகள் வற்றி விட்டன. வயல்களை உழுது பயிரிட முடியவில்லை. நாங்கள் அன்ன ஆகாரமின்றித் தவித்துக் கொண்டிருக்கிறோம். மழை வருவதற்கு தாங்கள் ஏதாவது உபாயம் செய்ய வேண்டும்.'' என்றார். கூட்டமும் அதை ஆமோதித்தது.

அதற்கு அந்த சந்நியாசி, ""நீங்கள் அந்தக் கருணாமூர்த்தியாகிய பகவானை திருப்தி செய்யுங்கள். அவர் உங்களுக்கு உடனே மழையைத் தருவார்.'' என்றார்.

""அவரை எப்படித் திருப்தி செய்வது?...அதற்குரிய வழியையும் தாங்கள்தான் சொல்ல வேண்டும்.'' என்று அவர்கள் கேட்டார்கள்.

அதற்கு அவர், ""இந்தக் குழியில் உள்ள மீன்கள் இன்றோ நாளையோ சாகும் நிலையில் உள்ளன. இவற்றின் மீது நீங்கள் இரக்கம் காட்டினால் பகவான் உங்களுக்கு மழையைக் கொடுப்பார்'' என்றார்.

""எங்களை என்ன செய்யச் சொல்லுகிறீர்கள்?''

""இந்த மீன்கள் சாகாதபடி இந்தக் குழியில் நிறையத் தண்ணீர் கொண்டு வந்து கொட்டுங்கள்!''

""நாங்கள் தண்ணீருக்கு எங்கே போவது? இங்கு எங்கும் தண்ணீரே இல்லையே''

சந்நியாசி பதில் சொல்லாமல் எழுந்தார். தம் சிஷ்யர்களுடன் நடந்து சென்றார். மக்களும் அவரைப் பின் தொடர்ந்தார்கள். அங்கு ஒரு கிணறு தென்பட்டது. அதில் சிறிது தண்ணீரும் இருந்தது. சந்நியாசி அந்தக் கிணற்றில் ஒரு வாளி கொண்டு வரச் செய்து தண்ணீரை இறைத்தார். அந்த நீரை மீன்கள் இருந்த குளத்தில் கொண்டுபோய்க் கொட்டினார்.

""ஆச்சரியமா இருக்கிறதே! இந்தக் கிணற்றில் மட்டும் நீர் இருக்கிறதே?''

""இந்த நீரையும் கொண்டுபோய் அந்தக் குளத்தில் கொட்டச் சொல்கிறாரே இந்தச் சந்நியாசி?''

""மனிதர்கள் இங்கே வாடிக்கொண்டிருக்கிறார்கள்....,இருக்கும் இந்த நீரையும் வீணடிப்பதா?''

 ""இது ஒரு நல்லெண்ணம்தானே! எப்படியும் நாம் பசியால் வாடிக்கொண்டுதான் இருக்கிறோம்...தண்ணீரோ சிறிதுதான் கிடைத்திருக்கிறது. சந்நியாசி சொல்வதைத்தான் கேட்டுப் பார்ப்போமே''

 என்று பலவாறாக பேசிக்கொண்டிருந்து விட்டு முடிவில் சந்நியாசி சொல்படி கேட்பது என்று ஒரு மனதாகத் தீர்மானித்தனர். மக்கள் எல்லோருமே ஆளுக்கொரு வாளி நீரை இறைத்து குளத்தில் கொண்டுபோய்க் கொட்டினர்!

 இப்படி மக்கள் செய்துகொண்டிருந்தபோதே வானில் கருமேகங்கள் சூழ்ந்தன. இடியும் மின்னலும் கலந்து மழை கொட்ட ஆரம்பித்தது! மழையின் வேகம் அதிகரித்து ஊரிலுள்ள நீர் நிலைகள் அனைத்தும் நிரம்பி வழிய ஆரம்பித்தன.

 ""மனதில் ஈரம் இருந்தால்தான் மண்ணிலும் ஈரம் வரும்'' என்றார் சந்நியாசி.

 மக்கள் அனைவரும் அவரை நமஸ்கரித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com