/

மரங்களின் வரங்கள்! 

நான் தான் வாழை மரம் பேசுகிறேன்.  என்னுடைய தாவரவியல்  பெயர் முசா பாரடிசிகா. நான் முசாசியே  குடும்பத்தைச் சேர்ந்தவன். உங்கள் வீட்டில் நடக்கும் சுபநிகழ்ச்சிகளில் அனைத்திலும் என்னைக் கண்டு 

News image
Updated On :28 டிசம்பர் 2018, 6:30 pm

வாழைமரம்!

கொடை வள்ளல்   - வாழை மரம்
என்ன குழந்தைகளே நலமா?

நான் தான் வாழை மரம் பேசுகிறேன்.  என்னுடைய தாவரவியல்  பெயர் முசா பாரடிசிகா. நான் முசாசியே  குடும்பத்தைச் சேர்ந்தவன். உங்கள் வீட்டில் நடக்கும் சுபநிகழ்ச்சிகளில் அனைத்திலும் என்னைக் கண்டு மகிழ்ந்திருப்பீர்கள். நான் இன்றும் இறைவனுக்கு அர்ச்சனை பொருளாகவும், மங்கலப் பொருளாகவும் இருக்கிறேன். நான் இல்லாத மங்கல நிகழ்ச்சிகளே இல்லை என்று சொல்லலாம்.  கடையேழு வள்ளல்களுள் ஒரு வள்ளல் கூட இன்று இல்லை என்றாலும், வள்ளலுக்கு வள்ளலாக நான் இருக்கிறேன்.  

எனக்கு என் அம்மாவின் காலடி தான் வீடு.  என் குடும்பத்தில் எப்போதும் ஒரே கூட்டம் தான்.  கூடி இருந்தால் கோடி இன்பம் என்பதால் நான் அண்ணன், அக்கா, தம்பி, தங்கைகளுடன் தான் பிறப்பேன். 

வாழைப்பழம் விளைவிப்பதில் உலகிலேயே உச்சத்தில் நிற்பது நமது இந்தியா தான். ஒவ்வொரு ஆண்டும் 170 லட்சம் டன் வாழைப்பழம் உற்பத்தி செய்யப்படுகிறது.  ஏழைகளின் கனி என்று சொல்லப்படும் வாழைப்பழத்தை மாவீரன் அலெக்சாண்டர் இந்தியாவிற்கு வந்தபோது விரும்பி சாப்பிட்டாராமே.  வாழைப் பழத்தில் மாவுசத்து, நார்சத்து, புரதச்சத்து, சர்க்கரை, இரும்புச் சத்து, சோடியம், பொட்டாசியம் ஆகிய சத்துகள் உள்ளன.  என் பழத்தினை உண்பதினால் வெப்பப் பிணிகள், இரத்தசோகை, மலக்கட்டு, மன அழுத்தம், நெஞ்செரிவு முதலியன நீங்கும்.  ஒரு நாளைக்கு ஒரு வாழைப்பழம் சாப்பிட்டால் உங்கள் உடலுக்கு 220 கலோரி சத்து கிடைக்கும்.  வாழைப்பழக் கழிவுகள் காகிதமாக பயன்படுகின்றன. வாழைக்காயினை சமைத்து உண்டால் வெப்பம், வயிற்றுளைச்சல், உமிழ்நீர்ச்சுரப்பு, இருமல் ஆகியன நீங்கும். இரத்தவிருத்திக்கு இது நல்லது. 

வாழைத் தண்டினை இடித்து பிழிந்த சாற்றினை குடித்தால் சிறுநீர் எரிச்சல், எலும்புருக்கி நோய் குணமாகும், நீரிழிவு நோய் பறந்தோடிடும். இரத்தத்திலுள்ள சர்க்கரை அளவு குறையும், சிறுநீரக கற்கள் கறையும். உங்கள் தொப்பையும் குறையும். என் பட்டை உலர்ந்த பின் பைகள் செய்யவும், துணிகள் நெய்யவும், பூக்கள் தொடுக்கவும் பயன்படுகிறது.  என்னுடைய இலையில் உணவு உண்டால் ஒரு மணம் வருமே, அது உங்கள் பசியைத் தூண்டும்.  மேலும், தீவிபத்தில் மீண்டவர்களையும், தீக்காயமடைந்தவர்களையும்  வாழை இலையில் படுக்க வைத்தால் எரிச்சல் இருக்காது.  புண்கள் சீக்கிரம் ஆறும்.  

உலகத்தில் பூக்கும் பூக்கள் எல்லாம் மேல் நோக்கிப் பூக்கும் என் பூவான வாழைப் பூ மட்டும் கீழ் நோக்கி பூக்கும். அதுவும் ஒரு முறை மட்டுமே பூக்கும். வாழைப் பூவை சமைத்து உண்டால் வயிற்றுப்புண்,   உடல்கொதிப்பு முதலியன நீங்கும். 

வாழை இழைகளைக் கொண்டு பட்டுப் போன்ற மென்மையான துணிகள் நெய்யப்படுகின்றன.  ஜப்பானில் பாரம்பரிய கிமானோ ஆடைகளை உருவாக்கவும், நேபாளத்தில் கம்பளம் தயாரிக்கவும் வாழை இழைகள் பயன்படுகின்றன. 

குழந்தைகளே, திருமண பந்தல்களில் நான் உங்களை வரவேற்க காத்துக் கொண்டிருப்பேன். ஏன் தெரியுமா, நான் என்னுடைய வாழ்நாளில் இலை, பூ, காய், கனி, பட்டை ஆகிய எல்லாவற்றையும் தானமாக கொடுக்கிறேன். என் சேமிப்பு கன்றுகள் மட்டும் தான். இந்த வாழ்க்கைத் தத்துவம் மணமக்களுக்கும் புரிய வேண்டும் என்பதற்காகத் தான் நம்முடைய முன்னோர்கள் மணப்பந்தலில் வாழை மரம் கட்டுவதை பழக்கமாக கொண்டுள்ளார்கள்.  குழந்தைகளே, நான் உங்களுக்கு ஒரு இரகசியம் சொல்லட்டுமே, யாரிடமும் சொல்லாதீங்க.  நான்மரமே இல்லை. நான் ஒரு தாவரம் தான், என்ன செய்வது?.... எனக்குத் தான் மற்ற மரங்களில் இருப்பது போல கடினமான தண்டுப் பகுதியோ, கிளைகளோ இல்லையே.     மரம் மழை கொடுக்கிறது என்பது அறிவியல். மரம் பொருள் கொடுக்கிறது என்பது பொருளியல். மரம் மனிதம் கொடுக்கிறது என்பது வாழ்வியல் என்கிறார் ஒரு கவிஞர்.   நன்றி குழந்தைகளே!

(வளருவேன்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.