காசிக்குத் தாத்தாவும் சென்று வந்தார் - உடன்
களிப்போடு பிள்ளைகள் சூழ்ந்து கொண்டார்.
ஆசையாக் கூடிப் பேசுகையில் - அங்கே
ஆனந்தன் தாத்தாவைக் கேட்கலுற்றான்.
"அத்தையும் காசிக்குச் சென்று வந்தாள் - இனி
அவரைக்காய் தின்பதே இல்லையென்றாள்.
சித்தப்பா காசிக்குச் சென்று வந்தார் - இனி
சிகரெட் பிடிப்பதே இல்லையென்றார்.
பாட்டியும் காசிக்குச் சென்று வந்தாள் - இனி
பாகற்காய் தின்பதே இல்லையென்றாள்.
சீட்டாடும் பழக்கத்தை விட்டே னென்றார் - காசி
சென்று திரும்பிய மாமாவுமே.
இப்படிக் காசிக்குச் சென்றோரெல்லாம் - அங்கே
ஏதேனும் ஒன்றினை விட்டு வந்தார்.
அப்படி நீயும் விட்டதென்ன? தாத்தா
அவசியம் கூறிட வேண்டு'' மென்றான்.
"கோபக்காரன் என்றே ஊரிலுள்ளோர் - என்னைக்
கூறிடுவாரன்றோ? ஆதலினால்
கோபத்தைக் காசியில் விட்டு வந்தேன்'' - என்றே
கூறினார் மறுமொழி தாத்தாவுமே.
கண்ணனும் உடனேயே, ""தாத்தா, தாத்தா நீயும்
காசியில் விட்டதும் என்ன?'' என்றான்.
"இந்நேரம் கோபத்தை விட்டதாய்ச் சொன்னேனே...
எங்கே கவனமோ? '' என்றுரைத்தார்.
முரளியும், ""தாத்தா நீ விட்டதென்ன?'' - என்றே
மீண்டும் ஒரமுறை கேட்டிடவே
திரும்பவும் ""கோபத்தை விட்டே'' னென்றே - தாத்தா
செப்பினர் முரளியும் "ஓகோ'' என்றான்.
அருணனும் கோபுவும் அழகப்பனும் - இன்னும்
அலமுவும் கீதா காவேரியுமே
திரும்பத் திரும்ப இக்கேள்விதனைக் - கேட்கச்
சீறி எழுந்தனர் தாத்தாவுமே!
"வேலையற்ற வெட்டிப் பிள்ளைகளா - என்ன
வேடிக்கையா இங்கே காட்டுகின்றீர்?
தோலை உரித்தே எடுத்திடுவேன்'' என்று சொல்லியே
கையில் தடி எடுத்தார்!
"கோபத்தைக் காசியில் விட்டே னென்றார் - இதோ
குண்டாந்தடியுடன் வந்ததடா!
ஆபத்து! ஆபத்து '' என்றே சொல்லி - உடன்
அனைவரும் ஓட்டம் பிடித்தனரே!
- அழ. வள்ளியப்பா
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

20,400 மெட்ரிக் டன் எல்பிஜிக்களுடன் இந்தியா வந்தடைந்த ஜக் விக்ரம் கப்பல்!

பாட்ஷா பட இயக்குநரின் சாருகேசி படத்தில் ரம்யா பாண்டியன்!

விஜய் அதிமுக, பாஜகவுக்கு சாதகமாக செயல்படுகிறாா்: திருமாவளவன் குற்றச்சாட்டு
ஐபிஎல்: கொல்கத்தா கேப்டன் ரஹானேவுக்கு அபராதம்!
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


