டால்ஃபின்

சிர்வின்..  இது உன்னோட முறை.. வடதிசையில என்ன உருவம் இருக்குனு எதிரொலியின் மூலம் கண்டுபிடிச்சு சொல்லு... 
டால்ஃபின்

காட்சி : 1
இடம் : ஆழ்கடல்
நேரம் : காலை
டால்ஃபின்கள் : டெல்ஃபி, டாலி மற்றும் பிற டால்ஃபின் மீன்கள்.

டெல்ஃபி : சிர்வின்..  இது உன்னோட முறை.. வடதிசையில என்ன உருவம் இருக்குனு எதிரொலியின் மூலம் கண்டுபிடிச்சு சொல்லு... 
(சிர்வின் வடதிசையில் ஒலியைச் செலுத்தி சிறிது நேரம் காத்திருக்கிறது..)

சிர்வின் : ம்ம்ம்.. அது ஒரு கடல் ஆமை.. !
டெல்ஃபி  : அருமை.. சரியா சொல்லிட்டே..
(சுற்றி இருக்கும் டால்ஃபின்கள் ஆர்ப்பரிக்கின்றன.)

டெல்ஃபி :  மாறா..  நீ வா..  உனக்கு தென்கிழக்கு.. 
(மாறா தென்கிழக்கு திசையில் ஒலியைச் செலுத்தி சிறிது நேரம் காத்திருக்கிறது..)

மாறா : ம்ம்ம் .. அது ஒரு..  ஒரு பழைய கப்பலின் நங்கூரம்.. 
டெல்ஃபி  :  அருமை..  நீயும் சரியா சொல்லிட்டே..
(சுற்றி இருக்கும் டால்ஃபின்கள் ஆர்ப்பரிக்கின்றன.)

டெல்ஃபி : அடுத்தது டாலி..  ம்ம்ம்.. உனக்கு சுலபமானதாவே கொடுக்கறேன்..  மேற்கு..
(டாலி மேற்கு திசையில் ஒலியைச் செலுத்தி சிறிது நேரம் காத்திருக்கிறது.)

டாலி : (தயங்கிக்கொண்டே)  அது.. அது.. அது ஒரு ப்ளூ டாங்க் மீன்..
டெல்ஃபி : இல்லை..  அது ஒரு பவளப்பாறை..
டாலி : ( சோகமாக)  ஓ ..
(சுற்றி இருக்கும் டால்ஃபின்கள் கேலியாகச் 
சிரிக்கின்றன.) 

காட்சி : 2
இடம் : ஆழ்கடல்
நேரம் : மாலை
டால்ஃபின்கள் : டாலி , அம்மா
(டாலி சோகமாக இருக்கிறது.)

அம்மா :  ம்ம்ம்.. இன்னிக்கும் அதே பிரச்சனையா,  
டாலி  ?
(டாலி வேறு பக்கம் திரும்பிக்கொள்கிறது.) 

அம்மா : அப்போ..  நான் சொன்னது சரி..  இன்னிக்கும் நீ உன் தோழிகள்கிட்ட  மாட்டிக்கிட்ட..
டாலி : ( பின்புறம் திரும்பியபடி)  ம்மா..  உங்களுக்கும் என்னைப் பார்த்தா கிண்டலா இருக்கு.. 
அம்மா :   நான் இப்போ எதுவும் கேலி  பண்ணலியே..  உண்மையைத்தானே சொன்னேன்..
டாலி :  ( பின்புறம் திரும்பியபடி)  உண்மைதான்..  எனக்கு எக்கோலொக்கேஷன் வரல..  வரவும் வராதுனு தோணுது ..  என்னென்ன எல்லாம் முடியுமோ எல்லாத்தையும் சொல்லி சிரிச்சுக்கங்க.. 
(டால்ஃபின் அம்மா அமைதியாகப் பார்க்கிறது.)

அம்மா : (திடீரென) சரி,  நாம ஒரு இடத்துக்குப் போவோமா ..?
டாலி : (புரியாமல்) எங்க..?

காட்சி : 3
இடம் : ஆழ்கடல்
நேரம் : இரவு
டால்ஃபின்கள் : டாலி , அம்மா.
(டாலி சுற்றிச் சுற்றி ஆச்சர்யமாகப் பார்க்கிறது.)

அம்மா : ம்ம்ம்..  மொதல்ல நான் கேட்கறதுக்கு பதில்சொல்..  எக்கோலொக்கேஷன்னா என்ன..?  அதை நீ எப்படி செயல்படுத்துற..?
டாலி : ( தயக்கமாக)  ம்ம்ம்..  நம்மள மாதிரி டால்ஃபின்கள்  தூரத்துல இருக்க உருவத்தைத் தெரிஞ்சிக்கப் பயன்படுத்துற முறை எக்கோலொக்கேஷன்..
(அம்மா டால்ஃபின் அமைதியாகக் கவனிக்கிறது.)

டாலி : நான் ஒலியை ஒரு பக்கமா  செலுத்தி எதிரொலி மூலமா அந்தப் பொருள் என்னனு சொல்றேன்,  தப்புத் தப்பா..
அம்மா : (சிரித்துவிட்டு)  சரி..  இப்போ,  ம்ம்ம்ம்.... அங்க..  மேற்குப்பக்கமா என்ன இருக்குனு கண்டுபிடி..
(டாலி மேற்குதிசையில் ஒலியைச் செலுத்தி சிறிது நேரம் காத்திருக்கிறது.)

டாலி : (ஆர்வமின்றி)  ஏதோ முக்கோணமா இருக்.. 
(அம்மா டால்ஃபின் அசையாமல் பார்க்கிறது.)

அம்மா : டாலி, இப்போ உனக்குத் தேவை பயிற்சி..

காட்சி : 4
இடம் : ஆழ்கடல்
நேரம் : வெவ்வேறு நேரங்கள்
டால்ஃபின்கள் : டாலி , அம்மா

முதல் வாரம் :
(டாலி கிழக்குதிசையில் ஒலியைச் செலுத்துகிறது. அம்மா டால்ஃபின் அருகில் இருக்கிறது.)
இரண்டாம் வாரம் :
டாலி ஏதோ சொல்கிறது.
அம்மா மறுப்பதுபோல் தலையசைக்கிறது.
மூன்றாம் வாரம் :
டாலி பதில் சொல்கிறது.
அம்மாவின் முகம் மாறாமல் இருக்கிறது.

காட்சி : 5
இடம் : ஆழ்கடல்
நேரம் : மதியம்
டால்ஃபின்கள் : டாலி , அம்மா, சிர்வின், மாறா
(டாலியும் அம்மாவும் பேசிக்கொண்டே வருகிறார்கள்.) 


அம்மா : இன்னும் சரியா வரலை, டாலி..  நீ நல்லா 
ஒருமுகமா செயல்படணும்..
டாலி : ( சோகமாக)  என்னால முடியிலியே..
(சட்டென அவர்கள்மேல் நிழல்போல் ஏதோ 
செல்கிறது.)

டாலி : அம்மா..  என்ன அது..?
அம்மா : ஏதோ பெரிய கப்பல்.. 
(டாலி மிகுந்த ஆச்சர்யத்துடன் பார்க்கிறது.)

டாலி : அய்யோஓஓஓ..  இவ்ளோ பெரிய கப்பலா..!
(இருவரும் வியக்கிறார்கள்.)
டாலி : (திடீரென)  அம்மா....  அவங்க வம்பிழுப்பாங்க..  எதுவும் பேசாதீங்க.. 
(சிர்வினும் மாறாவும் வருகிறார்கள்.)

சிர்வின் : டாலி..  கொஞ்ச நாளா  என்னென்னமோ ட்ரெயினிங்  எடுத்துக்கிறயாம்..  எங்களுக்கும் சொல்லிக்கொடேன்.. 
மாறா : (ஏளனமாக) இந்த ஒன்னுமே இல்லாத விஷயத்துக்
கெல்லாம்  நமக்கெதுக்கு ட்ரெயினிங்.. ? சொல்லிக்கொடுக்கறது புரியலைனா என்னைக் கூப்பிடச்சொல்லு.. எக்கோலொகேஷன்ல நான் எக்ஸ்பெர்ட்..!
(இருவரும் கேலியாகச் சிரித்துச் செல்ல,  டாலியின் முகம் வாடுகிறது.)

காட்சி : 6
இடம் : ஆழ்கடல்
நேரம் : மாலை
டால்ஃபின்கள் : அம்மா, டாலி


அம்மா : (ஆவேசமாக) டாலி..  வா.  போலாம்.. 
டாலி : (கலக்கமாக)  எங்க..?
அம்மா : பயிற்சி பண்ண..  அவங்க சிரிச்ச சிரிப்பு என்னை என்னமோ செய்யுது..  நான் இதை விடப்போறதில்ல..  உன்னால முடியும்னு  எனக்குத் தெரியும்.
டாலி :  இல்லம்மா..  நான் வரல..  எனக்கு இதெல்லாம்..  (இடைமறித்து)
ஆமை : ( வழியில் சந்தித்து)  அய்யோ..  ஆபத்து..  ஆபத்து..  எல்லாரும் ஓடுங்க.. 
அம்மா : ( பதற்றமாக)  என்ன..  என்ன விஷயம்..?
ஆமை : ( நடுங்கியபடி)  ஏதோ கப்பல்ல விபத்தாம்..  கடல்தண்ணி முழுக்க கறுப்பா ஆகிட்டிருக்கு.. 
அம்மா : ( அச்சம்கொண்டு)  ஆஆஆ.. 
ஆமை : (தப்பித்துச் செல்கையில்)  அந்த கருப்பு பட்டதும் மீன்களுக்கெல்லாம் என்னமோ ஆகுது..  சீக்கிரம் எடத்தை காலி பண்ணுங்க..
அம்மா :  ஓ. . அது எண்ணைக் கப்பல்..  கடல் கலக்கறதெல்லாம் கச்சா எண்ணை..  கௌம்பு நாம இங்கிருந்து புறப்படணும்.. 
(டாலி எதிர்புறமாக நீந்திச் செல்கிறது.)

அம்மா : டாலி!.....  டாலி!.....

காட்சி : 7
இடம் : ஆழ்கடல்
நேரம் : மாலை 
டால்ஃபின்கள் : டெல்ஃபி, டாலி மற்றும் இதர மீன்கள்.
(மீன்கள் அங்குமிங்குமாகச் சென்றுகொண்டிருக்கின்றன)

டெல்ஃபி  : (அதிர்ந்து) டாலி இங்க எதுக்கு வந்த ? ஆபத்து.. சீக்கிரமா இந்த இடத்தை விட்டுக் கிளம்பு..
டாலி : (புரியாமல்) மேடம், இங்க என்ன நடக்குது ?
 டெல்ஃபி : ஒரு திரவம் தண்ணீல கலந்து நம்மள நோக்கி வந்துகிட்டிருக்கு..
கடல் குதிரை : (நகர்ந்தபடியே) இப்ப பேசிட்டிருக்க நேரமில்லை.. சீக்கிரம் அந்த இடத்தை விட்டுக் கிளம்புங்க..
டாலி : கிளம்பறதா ? எந்தப் பக்கம் போகணும்னு தெரியலையே..
டெல்ஃபி : எக்கோலொக்கேஷன் மூலமா வழியைக் கண்டுபிடிக்கலாம்.. நான் உதவறேன்.. வா, போயிரலாம்.
(திடீரென்று இருவருக்கும் இடையே கருப்பு திரவம் கலந்துவிடுகிறது. இரண்டு டால்பின்களும் பிரிகின்றன.)

டெல்ஃபி : ( பதற்றமாக ) டாலி .. டாலி .. 
(டாலி எதிர்ப்புறமாகச் செல்வதை டெல்ஃபி அதிர்ச்சியாகப் பார்க்கிறது.)

காட்சி : 8
இடம் : ஆழ்கடல் / வெவ்வேறு இடங்கள்
நேரம் : வெவ்வேறு நேரங்கள்
டால்ஃபின்கள் : டாலி , மீன்கள்

இடம் 1 : மீன்கள் விரைவாக நீந்துகின்றன. புரியாமல் 
நிற்கிறது. 
இடம் 2 : டாலி எதிரொலியை எழுப்புகிறது. அந்தப்
பக்கம் நீந்திச் செல்கிறது 
இடம் 3 : டாலி, சில கடல்விலங்குகள் பின்தொடர 
வருகிறது.

காட்சி : 9
இடம் : ஆழ்கடல்
நேரம் : மாலை 
டால்ஃபின்கள் : டெல்ஃபி, டாலி மற்றும் இதர மீன்கள்
(அனைத்து மீன்களும் வந்து சேர்கின்றன.) 

மீன் 1 : நாம பவளப்பாறை கிட்ட வந்துட்டோம் ..
மீன் 2: இனி இந்த இடத்தில் பாதுகாப்பாத் தங்கிக்கலாம்..
மீன் 3 : நல்லவேளை.. எந்தப் பக்கம் போறதுன்னு தெரியாம சுத்திட்டிருந்த நமக்கு ஒரு வழி கெடச்சுதுது..
மீன் 4: இதோ.. இந்த டால்பின்..  இதுக்கு தான் நாம நன்றி சொல்லணும்..
அனைத்து மீன்களும் :  நன்றி டால்ஃபின்
சிர்வின் : எங்கள மன்னிச்சிடு டாலி.. மத்தவங்க கூட சேர்ந்து நானும் உன்னை ரொம்ப கேலி பண்ணிட்டேன்.. 
மாறா : திறமை இருந்தாலும் ஒரு ஆபத்து வரும்போது எங்களால எந்த உதவியும் பண்ண முடியல.. 
சிர்வின் : உங்க அம்மா முன்னாடியே உன்னை கிண்டல் பண்ணிட்டோம்.. அவங்க எங்க..? அவங்க முன்னாடியே நாங்க மன்னிப்பும் கேட்டிர்றோம்..
டாலி : உண்மையிலேயே நீங்க அவங்களுக்கு நன்றிதான் சொல்லணும்..
சிர்வின் : (புரியாமல்) ஏன்..? 
டாலி : ஆபத்து போயிடலாம்னு சொன்ன உடனே அவங்க எந்த திசையைக் காட்றாங்கனு தெரியாம நான் இங்க வந்துட்டேன்.....  அப்புறம் நடந்ததெல்லாம் உங்களுக்கே தெரியுமே ..
மாறா : அப்ப நீ தெரிஞ்சு எங்களுக்கு உதவி பண்ண வரலையா.. 
டாலி : இல்ல.. தெரியாமதான் இந்தப் பக்கம் வந்தேன்..  என்னோட எக்கோலொகேஷன் திறமை எப்படியோ வெளியே வந்துடுச்சு..  என்ன இருந்தாலும்..  நமக்கு நடந்து நல்லது தானே..
சிர்வின் : அடப்பாவமே !
மாறா : இந்த ட்விஸ்ட்ட நான் எதிர்பார்க்கலையே .. 
(டாலியும் அம்மாவும் சந்திக்கிறார்கள்.)

(திரை)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com