முத்துக்கதை: காலம் கனியட்டும்!

ஒரு விவசாயி தன் தோட்டத்தில் மாங்கன்று ஒன்றை நட்டு, அதைச் சுற்றிலும் நன்றாக நீர்ப் பாய்ச்சி வந்தான். கன்று மெதுவாக வளர்ந்தது.
முத்துக்கதை: காலம் கனியட்டும்!

ஒரு விவசாயி தன் தோட்டத்தில் மாங்கன்று ஒன்றை நட்டு, அதைச் சுற்றிலும் நன்றாக நீர்ப் பாய்ச்சி வந்தான். கன்று மெதுவாக வளர்ந்தது. அதனருகில் முட்செடிகள் அடர்த்தியாக வளரத் தொடங்கின. இடையூறாக இருப்பதாக  எண்ணி அவற்றை விவசாயி வேருடன் பிடுங்கி எறிந்தான்.

அந்த முட்செடிகள் அவனைப் பார்த்து ""எங்களையும் இறைவன்தானே படைத்தான். எங்களால் யாருக்கும் பயனில்லையா?'' என்று வருத்தத்துடன் கேட்டன.

விவசாயியும் அவற்றுக்காக இரக்கப்பட்டு, ""படைத்த இறைவனுக்கு எல்லாம் தெரியும். யார், எப்படி, யாருக்குப் பயன்பட வேண்டும் என்று அறிந்தே படைத்துள்ளான். இறைவன் படைப்பில் பயனற்றது என்று எதுவும் இல்லை'' என்றான்.

அவன் சொன்னதைக் கேட்டு முட்செடிகள் சமாதானம் அடையவில்லை.

மாங்கன்று வளர்ந்து பெரியதாயிற்று. தொடர்ந்து முளைத்த முட்செடிகளும் அழிக்கப்பட்டு, காய்ந்து குவிக்கப்பட்டன. பழுத்து நின்ற மரத்தைப் பாதுகாக்கவும், ஆடு, மாடுகள் மேயாமலும் இருக்க விவசாயி அந்த முட்செடிகளைக் கொண்டு சுற்றிலும் அவற்றை அடுக்கி உயரமான வேலியை அமைத்தான். 

அப்போது விவசாயி அந்த முட்செடிகளைப் பார்த்து,  ""பார்த்தீர்களா? உங்களை எனக்குப் பயன்படும்படி இறைவன் செய்துவிட்டான். காலம் வரும்வரை பொறுமையாகக் காத்திருந்தால், உலகில் எல்லோரும் பிறருக்குப் பயன்படலாம். இறைவன் படைப்பில் பயனில்லாத பொருள்களே இல்லை... தெரிந்து கொள்ளுங்கள்'' என்றான்.

முட்செடிகள் பிறந்து, வளர்ந்து பிறருக்குப் பயன் அளித்ததை எண்ணி மகிழ்ச்சியடைந்தன.  விவசாயிக்கும் நன்றி கூறின.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com