மரங்களின் வரங்கள்!: குழந்தைகளின் நண்பன்  - மாசிக்காய்  மரம்

நான் தான் மாசிக்காய் மரம் பேசுகிறேன். எனது தாவரவியல் பெயர் குயிர்கஸ் இன்கானா என்பதாகும். என்னை ஆங்கிலத்தில் காள்நெட் என்று அன்பாக அழைப்பாங்க.
மரங்களின் வரங்கள்!: குழந்தைகளின் நண்பன்  - மாசிக்காய்  மரம்


குழந்தைகளே நலமா, 

நான் தான் மாசிக்காய் மரம் பேசுகிறேன். எனது தாவரவியல் பெயர் குயிர்கஸ் இன்கானா என்பதாகும். என்னை ஆங்கிலத்தில் காள்நெட் என்று அன்பாக அழைப்பாங்க. நான்  கம்ப்ரேடசியே குடும்பத்தைச் சேர்ந்தவன். என் காய்க்கு ஒரு சிறப்பு அம்சம் என்னவென்று உங்களுக்கு சொல்லட்டுமா? என் காய் மற்ற மரங்களின் காயைப் போல் பூவிலிருந்து காய்க்காது.  என் மரத்தின் கிளைகளை பூச்சிகள் துளையிடும். அவ்வாறு துளையிடும் போது, கிளையிலிருந்து பால் வடிந்து, அது உறைந்து,  திரண்டு பின் கெட்டிப்படும், இது மாசிக்காய் எனப்படும். இப்படி வெளிவரும் என் காய்க்கு உன்னதமான பல மருத்துவ குணங்கள் இருக்கு. இது உள் மற்றும் வெளி மருந்தாகப் பயன்படுது. பிறந்த குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு உண்டாகும் நோய்களுக்கு நான் அருமருந்தாவேன். 

பொதுவாக குழந்தைகளுக்கு உரைத்துக் கொடுக்கப்படும் உரை மருந்துகளில் மாசிக்காயும் ஒன்று.  தாய்ப் பால் குடிக்கும் குழந்தைகளுக்கு வயிற்றுப் போக்கு ஏற்பட்டால், புது மண் சட்டியைக் கவிழ்த்துப் போட்டு, அச்சட்டியின் மேல் என் காயை இழைத்து, குழந்தையின் நாவில் தடவி வந்தால் வயிறு உபாதைகள் அனைத்தும் நீங்கும். மாசிக்காய் சிறந்த விஷ முறிவாகவும் பயன்படுது. உங்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் திறன் மாசிக்காயிடம் இருக்கு. எப்படின்னா,  மாசிக்காய் ரத்தத்தை உறைய வைக்கும் தன்மைக் கொண்டது.  அதனால், தசையை இறுகச் செய்வதுடன், புற்றுநோய், அல்சர் வராமலும் தடுக்கும் ஆற்றல் இருக்கு. தேமல், படை, சொறி, சிரங்கு போன்றவற்றின் மீது மாசிக்காய் பொடியை நீரில் குழைத்து தினமும் தடவி வந்தால் அவை இருந்த இடம் தெரியாது. 

மாசிக்காயில் வைட்டமின் ஏ, சி, இரும்புச் சத்து, கால்ஷியம், நார்ச்சத்து அதிகமாகவே உள்ளது.  ரத்த மூலம் இருப்பவர்கள், ஒரு ஸ்பூன் மாசிக்காய் பொடியுடன், சிறிதளவு பனங்கற்கண்டு சேர்த்து கொதிக்க வைத்து, அருந்தி வந்தால் விரைவில் குணமாகி விடும். மாசிக்காய் பொடியை குடிநீரில் கலந்து வாய் கொப்பதளித்து வந்தால், நாக்கில் இருக்கும் புண்கள் ஆறுவதோடு, ஈறுகளும் உறுதி பெறும், ரத்தம் வடிவதும் நிற்கும், பல் சொத்தை மற்றும் வாய் புண்களும் குணமாகும். பல்வேறு காரணங்களால் சிலருக்கு இதயம் படபடக்கும், கை,கால்கள் நடுங்கும், இச்சமயத்தில், மாசிக்காய் பொடியை சிறிது பசும்பாலில் விட்டு குழைத்து நாக்கில் தடவினால், கொஞ்ச நேரத்தில் அந்தப் படபடப்பு வெலவெலத்து போய் ஓடி விடும். 

என் மரப்பட்டையை வெந்நீரிலிட்டு கொதிக்க வைத்து கஷாயமாக அருந்தி வந்தால் மூலம், ரத்த வாந்தி, சிறுநீரில் ரத்தம் போகுதல், ஈறுகளிலிருந்து ரத்தம் வடிதல், வயிற்றுப் போக்கு சட்டென குணமாகும். உங்களுக்கு அடிப்பட்ட காயத்தில் ரத்தம் வெளியேறினால் பயப்படாதீங்க, என் காயை நெருப்பில் சுட்டு, அந்த சாம்பலை ரத்த காயத்தின் மீது வைத்து அழுத்த, ரத்தம் வெளியேறுவது நிற்கும். விஷத் தன்மையை முறிக்கும் ஆற்றலும் எங்கிட்ட இருக்கு.  உடலில் இருக்கும் நஞ்சை நீக்க, மாசிக்காய் தூளை, கொஞ்சமா ஒரு நாளைக்கு மூன்று வேளை உண்டு வந்தால், எந்த நஞ்சும் உடம்பில் தங்காது. 

மாசிக்காயை நன்றாகப் பொடி செய்து, அதை வெந்நீரிலிட்டு வாய் கொப்பளித்து வந்தால், வாய்ப் புண் ஓடி விடும்.  முகப்பரு உள்ளவர்கள் மாசிக்காய் பொடியுடன், சிறிது சாதிக்காய் கொடி, சிறிது எலுமிச்சம் பழம் சாறு சேர்த்து நன்றாகக் கலந்து, இரவு உறங்கும் முன், முகப்பருக்கள் உள்ள இடங்களில் தடவி, பின்னர் காலையில், வெதுவெதுப்பான நீரில் முகத்தைக் கழுவினால், முகப்பரு இருந்த இடமே  தெரியாது. நன்றி குழந்தைகளே, மீண்டும் சந்திப்போம். 

(வளருவேன்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com