மிருதுளா!
அசாத்திய உயரம். அபாரமான ஷாட்கள். மிரள வைக்கும் பிளாக்குகள்... சக வீராங்கனைகளுக்குப் பந்தை லாகவமாக எடுத்துத் தரும் பாங்கு.. என வாலிபால் ஆர்வலர்களை ஆச்சர்யப்படவைக்கிறார் மிருதுளா சிந்து. இவர் தமிழக அணி,


அசாத்திய உயரம். அபாரமான ஷாட்கள். மிரள வைக்கும் பிளாக்குகள்... சக வீராங்கனைகளுக்குப் பந்தை லாகவமாக எடுத்துத் தரும் பாங்கு.. என வாலிபால் ஆர்வலர்களை ஆச்சர்யப்படவைக்கிறார் மிருதுளா சிந்து. இவர் தமிழக அணி, பனிமலர் பொறியியல் கல்லூரிக்காக விளையாடி வரும் தேசிய வீராங்கனை.
இவரது வெற்றிகளைப் பார்த்துவிட்டு பனிமலர் பொறியியல் கல்லூரியின் இயக்குநர் சக்திகுமார், இவருக்கு விளையாட்டு கோட்டாவில் பி.இ. படிக்க இடம் கொடுத்தார். கல்விக் கட்டணம், விடுதிக் கட்டணம் என அனைத்தும் இலவசம். சென்னை எழும்பூர் மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்திலுள்ள வாலிபால் மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த அவரைச் சந்தித்தபோது...
எந்த வயதில் வாலிபால் விளையாடத் துவங்கினீர்கள்..?
பதினொரு வயதாக இருக்கும்போதே வாலிபால் விளையாடத் துவங்கிவிட்டேன். சென்னை மாவட்ட வாலிபால் சங்கச் செயலர் சித்திரைப்பாண்டியன் நடத்தும் வாலிபால் பயிற்சி முகாமில் சேர்ந்தபோது எனக்கு வாலிபால் ஆர்வம் தலைகாட்டத் துவங்கியது. அவரது தூண்டுதல், ஊக்கம் ஆகியவற்றால் தொடர்ந்து அந்த விளையாட்டில் ஆர்வம் செலுத்தினேன்.
வாலிபால் விளையாட்டில் ஆர்வம் எப்படி வந்தது?
என் தந்தை ராஜசேகர் ஹாக்கி விளையாட்டு வீரர். அவர் தந்த ஊக்கம், தாய் பொன்னி தந்த உற்சாகத்தால்தான் வாலிபால் மீது ஆர்வம் ஏற்பட்டது. என் ஆர்வத்துக்கு உறுதுணையாக இருந்தவர் நெல்லை பிரண்ட்ஸ் வாலிபால் கிளப்பின் சித்திரைப்பாண்டியன். இப்படித்தான் வாலிபால் விளையாட்டு எனக்குள் வந்தது.
நீங்கள் விளையாடிய போட்டிகள், பெற்ற வெற்றிகள்?
பதினொரு வயதில் வாலிபால் விளையாடத் துவங்கினாலும், போட்டிகளில் பங்கேற்கத் துவங்கியது பதின்மூன்றாவது வயதில்தான். பள்ளி அளவிலான போட்டிகள் என்று துவங்கி, இப்போது கிளப், மாவட்ட, மாநில, தேசிய அளவிலான போட்டிகள் வரை சென்றுள்ளது. இன்று நான் படிக்கும் பனிமலர் பொறியியல் கல்லூரியின் சார்பாக தேசியப் போட்டிகள், பொறியியல் கல்லூரிகளுக்கு இடையிலான போட்டிகளில் பங்கேற்று வருகிறேன்.
2005-ம் ஆண்டில் மினி தேசிய சப்-ஜூனியர் போட்டியில் தமிழக அணியின் சார்பில் பங்கேற்று தங்கம் வென்றேன். 2006-ல் நடைபெற்ற சப்-ஜூனியர் தேசியப் போட்டியில் வெள்ளிப் பதக்கமும் 2008-ல் நடந்த தேசிய ஜூனியர் போட்டியில் வெண்கலப் பதக்கமும் 2009-ல் நடந்த தேசிய இளையோர் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தையும் கைப்பற்றினோம். சாம்பியன்ஸ் டிராபி வாலிபால் போட்டியிலும் தொடர்ச்சியாக 2 ஆண்டுகள் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளோம்.
மாநில அளவிலான ஜூனியர் வாலிபால் போட்டியில் தங்கப் பதக்கத்தையும் மாநில அளவிலான சப்-ஜூனியர் போட்டியில் தங்கப் பதக்கத்தையும் கைப்பற்றியுள்ளோம். கடந்த மார்ச் மாதம் சாஸ்த்ரா பல்கலைக்கழகம் நடத்திய அகில இந்திய வாலிபால் போட்டியில் சாம்பியன் பட்டத்தை பனிமலர் கல்லூரிக்காக வென்றோம்.
சிவந்தி கிளப் அணிக்காகப் பல்வேறு போட்டிகளில் பங்கேற்றுள்ளேன். இப்போது பனிமலர் கல்லூரியின் சார்பாக தேசிய போட்டிகள், கல்லூரிகளுக்கு இடையிலான போட்டிகளில் பங்கேற்று
வருகிறேன்.
உங்களது பயிற்சி நேரம், பயிற்சியாளர்கள்?
பள்ளியில் படிக்கும்போது காலை, மாலை என இரு வேளைகளிலும் 4 மணி முதல் 5 மணி நேரம் பயிற்சி செய்வேன். இப்போது மாலையில் 3 மணி நேரம் பயிற்சி செய்து வருகிறேன்.
முதலில் சித்திரைப்பாண்டியனிடம் பயிற்சி பெற்றேன். பிறகு கேசவன், தங்கநாயகி ஆகியோரிடம் பயிற்சி பெற்றேன். இப்போது கல்லூரி உடற்கல்வி இயக்குநர் ஜெயக்குமாரிடம் பயிற்சி பெற்று வருகிறேன்.
இதுவரை பங்கேற்ற போட்டிகளில் மிகவும் கடினமானதாக உணர்ந்தது எந்தப் போட்டி?
ஜூனியர் தேசிய போட்டி மிகவும் கடினமானதாக இருந்தது. அந்தப் போட்டியில் நாங்கள் கஷ்டப்பட்டு விளையாடி 3-வது இடத்தைப் பிடித்தோம். அந்தப் போட்டியை மறக்கவே முடியாது.
இப்போதுள்ள மாநில மகளிர் அணிகளில் சிறந்த அணி எது?
இப்போது தமிழக அணி மிகவும் சிறப்பாக விளையாடி வருகிறது. பல போட்டிகளில் தமிழக அணி வெற்றியைக் குவித்து வருவது குறிப்பிடத்தத்தக்கது.
வாலிபாலில் எந்த பொசிஷனில் விளையாடுவீர்கள்?
என்னுடைய உயரம் 5 அடி 11 அங்குலம். எனவே எனக்கு செட்டர் பொசிஷன்தான் சரியாக இருக்கும் என்று பயிற்சியாளர் கருதினார். எனவே செட்டர் பொசிஷனில் சிறப்பாக செயல்பட பயிற்சி அளிக்கப்பட்டது.
செட்டர் பணி என்பது மிகவும் கடினமானது. எதிரணியினர் அடிக்கும் பந்துகளை பிளாக் செய்வது, சக வீராங்கனைகளுக்குப் பந்தை எடுத்துக் கொடுத்து ஷாட் அடிக்க உதவுவது என்பது சவாலான பணிதான். ஆனால் சக வீராங்கனைகள் அளிக்கும் உற்சாகத்தில் அதில் ஆர்வமாக ஈடுபட்டு வருகிறேன்.
உங்களுடைய ரோல் மாடல் யார்?
சென்ட்ரல் ரெவின்யூ அணிக்காக விளையாடி வரும் வைஷ்ணவி என்னுடைய ரோல் மாடல். அவரின் ஆட்டம் மிகவும் பிடிக்கும்.
உங்களுக்கு ஊக்கம் அளிப்பவர்கள்?
எனது தந்தை ராஜசேகர், தாய் பொன்னி ஆகியோர் எனக்கு அதிக ஊக்கம் அளிப்பார்கள். இதற்கு அடுத்தபடியாக கல்லூரி இயக்குநர் சக்திகுமார், பயிற்சியாளர் ஜெயக்குமார் ஆகியோர் அதிக ஊக்கம் அளிப்பார்கள். வெற்றி பெற்றுத் திரும்பும்போது இயக்குநர் சக்திகுமார் பரிசளித்துப் பாராட்டுவார்.
வாலிபாலில் உங்களுடைய லட்சியம், எதிர்காலத் திட்டம்?
தேசிய சீனியர் அணியில் இடம்பெற்று சாம்பியன் பட்டம் வெல்லவேண்டும். அதன் பிறகு சர்வதேசப் போட்டிகளில் இந்தியாவின் சார்பில் பங்கேற்கவேண்டும்.
ஒருமுறை தேசிய பயிற்சி முகாமுக்குத் தேர்வு செய்யப்பட்டேன். ஆனால் அணியில் தேர்வு செய்யப்படவில்லை. விரைவில் தேசிய சீனியர் அணிக்குத் தேர்வாக என்னைத் தயார்படுத்தி வருகிறேன்.
வாழ்த்துகள் மிருதுளா...
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...