யானைக்கை சங்கு

கடலில் வசிக்கும் மெல்லுடலிகள் வகையைச் சேர்ந்த உயிரினங்களில் ஒன்று யானைக் கை சங்கு. பார்ப்பதற்கு மிக அழகாக இருக்கும் இந்த அரிய வகை உயிரினம் மிக வேகமாக அழிந்து வருகிறது. இதன் சிறப்புகள் குறித்து ராமநாதப
யானைக்கை சங்கு
Updated on
1 min read

கடலில் வசிக்கும் மெல்லுடலிகள் வகையைச் சேர்ந்த உயிரினங்களில் ஒன்று யானைக் கை சங்கு. பார்ப்பதற்கு மிக அழகாக இருக்கும் இந்த அரிய வகை உயிரினம் மிக வேகமாக அழிந்து வருகிறது. இதன் சிறப்புகள் குறித்து ராமநாதபுரத்தில் செயல்பட்டு வரும் மன்னார் வளைகுடா உயிர்க்கோள காப்பக அறக்கட்டளையில் பணியாற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் திட்ட ஒருங்கிணைப்பு அலுவலர் டாக்டர். தீபக் சாமுவேல் கூறியதாவது..

 ""யானைக்கை சங்கு மெல்லுடலிகள் வகையில் கணவாய் மீன் குடும்பத்தைச் சேர்ந்ததாகும். இதன் பொதுப்பெயர் பியர்லி நாடிலிக்ஸ் என்பதாகும். தோற்றத்தில் யானையின் தும்பிக்கையை போன்றே இருப்பதால் இதனை யானைக் கை சங்கு என்று அழைக்கிறார்கள். சுமார் 500 மில்லியன் வருடங்களுக்கும் மேலாக இதன் வெளிப்புற உருவ அமைப்பில் எந்த மாற்றமும் இல்லாமல் அப்படியே இருந்து வருவதும் குறிப்பிடத் தக்கது.

 இவற்றின் அழகிய வெளி ஓடானது இந்த உயிரினத்தைப் பாதுகாக்கிறது. ஓட்டின் உள்ளே இருக்கும் அகன்ற பகுதியில் வாயுவை நிரப்பிக் கொள்ளும் வசதியும் உள்ளது. இந்த வசதியால் தரையில் இருந்து குறைந்த தூரம் மேல்நோக்கி மிதக்கவும் உதவுகிறது. இதன் வெளி ஓடு இதனைப் பாதுகாத்தாலும் அதன் அழகே அதற்கு எதிரியாகி மனிதர்களை மிகவும் கவர்ந்திழுக்கிறது.

 எனவே இவற்றைப் பிடிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போய் இதன் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துவிட்டது. இந்திய அரசு வன உயிரினப் பாதுகாப்புச் சட்டம் 1972- ன்படி இதனைப் பிடிக்கத் தடை விதித்துள்ளது. கணவாய் மீன் இனங்களை விட இதனுடைய எண்ணிக்கை குறைவாகவும், வளர்ச்சி விகிதம் மிக மெதுவாகவும் உள்ளது. இவை பருவம் அடைய 5 முதல் 10 வருடங்கள் வரை ஆவதாலும் முதிர்ச்சி அடைபவை 10 முதல் 15 முட்டைகள் வரை மட்டுமே இடுகின்றன.

 குறைவான முட்டைகளே இடுவதாலும் இதன் எண்ணிக்கை மிகக் குறைந்து விட்டது. கடலின் அடியில் கிடக்கும் கழிவுகளைத் தின்று உயிர் வாழும் இந்த உயிரினம் கடலின் அடிப்பகுதி சுத்தமாக இருக்கவும் உதவுகிறது. மிக மெதுவாகவும் நகர்ந்து செல்லும் இந்த அழகிய, அரியவகை கடல் வாழ் உயிரினத்தை அழிவிலிருந்து காக்க வேண்டியதும் நமது கடமை'' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com