தடகளத்தில் அமர்க்களம்!
உடலளவில் பலமிருந்தாலும் மனதளவில் பலமிழந்து எத்தனை, எத்தனையோ பேர் வாழும் இந்த நாட்டில் சாதிக்க ஊனம் ஒரு தடையல்ல என்பதை உணர்த்தும் வகையில் மாற்றுத்திறனாளிகளுக்கான சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங


உடலளவில் பலமிருந்தாலும் மனதளவில் பலமிழந்து எத்தனை, எத்தனையோ பேர் வாழும் இந்த நாட்டில் சாதிக்க ஊனம் ஒரு தடையல்ல என்பதை உணர்த்தும் வகையில் மாற்றுத்திறனாளிகளுக்கான சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்கள் பல வென்று தமிழகத்திற்குப் பெருமை சேர்த்து வருகிறார் வீராங்கனை எம்.சங்கீதா. தனியார் நிறுவனத்தில் சொற்ப சம்பளத்தில் வேலையில் இருந்தபோதிலும் கிடைக்கும் ஊதியத்தில் வீட்டுக்குப் பாதியும் பயிற்சிக்கு மீதியும் செலவழிப்பதாகக் கூறுகிறார் இவர்.
""மதுரை புதுராமநாதபுரம் பகுதியில் எங்கள் வீடு உள்ளது. அப்பா மாரியப்பன் தையல் கடை நடத்தி வருகிறார். எனக்கு ஐந்து வயது இருக்கும்போது இளம்பிள்ளைவாத நோயால் கால்கள் செயலிழந்தன. தொடர்ந்து கால்களுக்குப் பயிற்சி அளித்ததால் ஓரளவு நடக்க முடிந்தது. தாய், தந்தையர் உதவியுடன் அருகில் உள்ள பள்ளிக்கு அழைத்துச் செல்லப்பட்டேன். பள்ளி நாள்களில் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க மிகவும் ஆர்வமாக இருப்பேன். ஆனால், எனது உடல்நிலையைக் கருதி ஆசிரியர்களே விளையாட்டில் சேர்க்க அனுமதிக்கமாட்டார்கள்.
12-ம் வகுப்பு முடிந்த பிறகு கூட்டுறவில் பட்டயப் பயிற்சி படித்தேன். தட்டச்சும், கணினியும் பயின்றேன். அச்சமயம்தான், மாற்றுத் திறனாளிகளும் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கலாம் என்பதைத் தென் மண்டல மாற்றுத்திறனாளிகள் நல்வாழ்வு கூட்டமைப்பின் பொதுச் செயலராக உள்ள பூபதி மூலம் தெரிந்துகொண்டேன்.
இப்போட்டிகளில் பங்கேற்பதன் மூலம் நாட்டுக்குப் பெருமை சேர்க்க முடியும் என்பதுடன், அரசு வேலைவாய்ப்பிலும் உரிய முக்கியத்துவம் கிடைக்கும் என்று நம்பிக்கை வார்த்தைகளைக் கூறி அவர் என்னை உற்சாகப்படுத்தினார்.
முதன்முறையாக, 2002-ம் ஆண்டில் மாநில அளவில் நடைபெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான தடகளப் போட்டிகளில் கலந்துகொண்டு முதலிடம் பெற்றேன்.
அதைத்தொடர்ந்து, பெங்களூருவில் நடைபெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அளவிலான தடகள விளையாட்டுப் போட்டியில் பங்கேற்று குண்டு எறிதல் மற்றும் வட்டு எறிதலில் தங்கப்பதக்கமும் சக்கரநாற்காலி பந்தயத்தில் 100 மீட்டரில் வெள்ளிப் பதக்கமும் 200 மீட்டரில் வெண்கலப் பதக்கமும் பெற்றேன்.
2003-ம் ஆண்டில் பெங்களூரில் நடைபெற்ற பேட்மிட்டன் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று வெண்கலப்பதக்கம் பெற்றேன். 2005-ம் ஆண்டில் நாக்பூரில் நடைபெற்ற தேசிய அளவிலான தடகளப் போட்டியிலும் தங்கம், வெண்கலப் பதக்கம் பெற்றேன். 2007-ம் ஆண்டில் தில்லியில் நடைபெற்ற தேசிய அளவிலான போட்டியிலும் குண்டு எறிதலில் தங்கமும் ஈட்டிஎறிதலில் வெண்கலமும் வென்றேன்.
2008-ம் ஆண்டில் தமிழகத்தில் நடைபெற்ற தடகள போட்டியில் வெண்கலப் பதக்கம் பெற்றேன்.
இந்நிலையில், 2009-ம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற சர்வதேச மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டியில் முதன்முறையாக கலந்துகொண்டேன். அதில் வட்டு எறிதலில் வெண்கலம் பெற்றேன்.
2010-ம் ஆண்டில் துபையில் நடைபெற்ற சர்வதேச தடகளப் போட்டியில் வட்டு எறிதலில் ரொக்கப் பரிசு பெற்றேன். அதே ஆண்டு டிசம்பரில் சீனாவில் நடைபெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான சர்வதேச டேபிள் டென்னிஸ் போட்டியில் ஒற்றையர் பிரிவில் வெள்ளிப் பதக்கம் பெற்றேன்.
இதையடுத்து, முதல்வர் கருணாநிதியைச் சந்தித்து பாராட்டுப் பெற்றேன். அதற்குமுன், 2002-ம் ஆண்டில் அகில இந்திய அளவில் தங்கம் வென்றதற்காக அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா அவர்களை நேரில் சந்தித்து பாராட்டுப் பெற்றேன். அப்போது வேலைவாய்ப்புக்கோரி நான் அளித்த மனுவை கனிவுடன் ஏற்ற அவர், ஏதாவது ஒரு துறையில் என்னைப் பணி அமர்த்திட மதுரை மாவட்ட ஆட்சியராக இருந்த தங்கவேலுக்குப் பரிந்துரை செய்தார்.
அப்போது, வேலை தடைச் சட்டம் அமலில் இருப்பதாக கூறி அதிகாரிகள் என்னை தனியார் நிறுவனத்தில் சேர்த்துவிட்டார்கள். அங்கு ஒன்பது ஆண்டுகளாகப் பணியாற்றி வருகிறேன். எனினும், என்னுடைய விளையாட்டு ஆர்வத்தைக் குறைத்துக்கொள்ளாமல் தொடர்ந்து போட்டிகளில் கலந்துகொண்டு வருகிறேன். டேபிள் டென்னிஸில் சுந்தர், மாணிக்கம், தடகள விளையாட்டில் மகாலஷ்மி, வசந்தி ஆகியோரும் பயிற்சி அளிக்கின்றனர்.
தற்போது, தமிழ்நாடு மாற்றுத் திறனுடையோர் சங்கங்களின் கூட்டமைப்பின் தென் மண்டல அமைப்பு மூலம், பாரா ஒலிம்பிக் கமிட்டி ஆஃப் தமிழ்நாடு கமிட்டியின் செயலர் கிருஷ்ணமூர்த்தி பரிந்துரை செய்ததன் பேரில் ஜோர்டானில் வரும் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள 4-வது ஓபன் அவதானி கிளப் டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்துகொள்ள வாய்ப்புக் கிடைத்துள்ளது.
எனினும், அதற்கு ரூ.77 ஆயிரம் போக்குவரத்துச் செலவு தேவை இருப்பதால் ஸ்பான்ஸர்ஷிப் பெறுவதற்காக வழக்கம்போல் நல்ல உள்ளங்களைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளேன். 2009-ம் ஆண்டு தடகளப் போட்டியில் பங்கேற்க அமெரிக்கா செல்வதற்கு வாய்ப்புக் கிடைத்தும் ஸ்பான்ஸர்ஷிப் கிடைக்காததால் செல்ல முடியவில்லை.
தற்போது என்னைப் போன்ற மாற்றுத்திறன் கொண்ட தடகள வீரர், வீராங்கனைகள் 63 பேர் உள்ளனர். அனைவரும் நாட்டுக்கும், தமிழகத்திற்கும் பதக்கங்களால் பெருமை சேர்த்துள்ளோம். ஆனால், அரசு வேலைக்காக தமிழக முதல்வரிடம் மனுக்கொடுத்தும் இன்னும் வேலை கிடைத்தபாடில்லை.
விளையாட்டுகளில் பங்கேற்கும் என்னைப் போன்றவர்களுக்கு அரசு உபகரணம் வழங்குவது மட்டுமே ஊக்குவிப்பு ஆகிவிடாது. குறைந்தது விளையாட்டுச் செலவுகளுக்காக ரூ.3 ஆயிரமாவது மாதந்தோறும் ஊக்கத்தொகை வழங்கிட முன்வர வேண்டும்.
மாற்றுத் திறனாளியாக இருப்பதால் உடல் அளவில் பலமிழந்தவர்களாகத்தான் இருக்கிறோம். அதிலும் பெண்களாக இருந்தால் பலவிதத்திலும் சிரமத்தை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இதை உணர்ந்தாவது அரசு தகுந்த உதவியைச் செய்ய முன்வர வேண்டாமா?
ஒவ்வொரு முறையும் வெளிநாடு செல்வதற்கு "ஸ்பான்ஸர்ஷிப்' பிடிப்பதற்கே பெரும் அலைச்சல் ஏற்படுகிறது.
இதனால், பயிற்சியில் கவனம் செலுத்த முடிவதில்லை. எனினும் மன வைராக்கியம்தான் என்னைப் போன்றவர்கள் வெற்றி பெற பக்கபலமாக உள்ளது. மாற்றுத் திறனாளிகளுக்கான ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொண்டு சாதிக்க வேண்டும் என்பதே என்னுடைய லட்சியம். மாற்றுத் திறனாளிகளுக்காக ஒரு பயிற்சி மையமும் அமைக்கத் திட்டமிட்டுள்ளேன்'' என்று கண்களில் நம்பிக்கைப் பூக்கள் மலர கூறுகிறார் சங்கீதா.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...