இந்த ஆண்டு தியாகராஜருக்கு 166-வது ஆராதனை விழா. காவிரியின் தென் கரையில் அமைந்துள்ள தியாகராஜரின் ஜீவ சமாதியில் ஜனவரி 27-ல் தொடங்கி 31 வரையில் 5 நாள்கள் இசை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. உலகமெங்கும் உள்ள கர்நாடக இசைக் கலைஞர்கள் 500-க்கும் மேற்பட்டோர் குடும்பமாய் காவிரி கரைக்கு வந்து தியாகராஜர் அருளிய சுமார் 2,400 உருப்படிகளில் (கீர்த்தனைகள்) அவரவருக்கு பிடித்த கீர்த்தனைகளை தனி ஆவர்த்தனமாகவும், தியாகராஜரே ஸ்வரம் அமைத்து பாடிய பஞ்சரத்ன கீர்த்தனைகளையும் பாடி அஞ்சலி செலுத்தினர்.
இசைக் கலைஞர்கள் தியாகராஜருக்கு இசை அஞ்சலி செலுத்துவதை தங்களுக்கு கிடைத்த பெரும் பாக்கியமாகக் கருதுகின்றனர். இந்த ஆண்டு ஆராதனையிலும் நட்சத்திர பாடகர்கள் சுதா ரகுநாதன், பிரியா சகோதரிகள், சீர்காழி சிவ. சிதம்பரம் ஆகியோர் பாடினர்.
இங்கு தியாகராஜ சுவாமிகள் சமாதி அமைந்துள்ள மண்டபத்திற்கே ஓர் வரலாறு உண்டு. சுவாமிகள் 1847-இல் காலமானார். அவரது சீடர்கள் 1904-ல் முதல் ஆராதனை விழாவை நடத்தினர். பின்னர் இசைக் கலைஞர்களுக்குள் பிரிவினை ஏற்பட்டதால் சில காலங்கள் சுவாமிகளின் சமாதி பராமரிப்பின்றி இருந்தது. பெங்களூரைச் சேர்ந்த நாகரத்தினம் அம்மாள் இங்கு வந்து பார்த்தபோது மனம் பதைத்து தனது நகை, சொத்துகளை எல்லாம் விற்று சமாதி இருந்த நிலத்தை வாங்கி அதில் 1925-ல் சுவாமிகளுக்கு மண்டபத்தை கட்டி முடித்து கும்பாபிஷேகம் செய்தார். அதன் பின்பு இந்த 5 நாள் ஆராதனை விழா தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆராதனையில் பெண்களையும் பாடச் செய்த பெருமை நாகரத்தினம் அம்மாளையே சேரும்.
நாகரத்தினம் அம்மாள், 1952-ல் காலமானார். அவர் தனது உயிலில், தன்னை சுவாமிகளுக்கு (சமாதிக்கு) எதிரே அடக்கம் செய்ய வேண்டும் என்றும், தனது சமாதிக்கும், சுவாமிகளுக்கும் இடையில் எவ்வித கட்டடத்தையும் கட்டி பார்வை தடையை ஏற்படுத்தக் கூடாது என்றும் எழுதி வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
அதன்படி, நாகரத்தினம் அம்மாளின் சமாதி, சுவாமிகளின் சமாதிக்கு எதிரே சுமார் 50 மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இரு சமாதிகளுக்கும் இடையில் திறந்தவெளிதான். நாகரத்தினம் அம்மாள் சமாதி முன்பு, அதாவது தியாகராஜருக்கு நேர் எதிரே அமைக்கப்பட்டுள்ள இரண்டு சிறிய மேடைகளில் அமர்ந்துதான் இசைக் கலைஞர்கள் சுவாமிகளை ஆராதனை செய்கின்றனர். பஞ்சரத்ன கீர்த்தனையின்போது, சுவாமிகளுக்கு நேர் எதிரே வலப்புறம் ஆண் இசைக் கலைஞர்களும், இடதுபுறம் பெண் இசைக் கலைஞர்களும் நீண்ட வரிசையாக அமர்ந்து கீர்த்தனைகளைப் பாடி அஞ்சலி செலுத்துவதை நாகரத்தினம் அம்மாள் பார்த்து ஆனந்த கண்ணீர் வடிப்பது போன்று அவர் கைகூப்பிய சிலை வடிவமாய் அங்கு நிலை கொண்டுள்ளார்.
திருவையாறுக்கு கர்நாடக இசைக் கலைஞர்கள் மட்டும்தான் செல்வார்கள், மற்றவர்களுக்கு அங்கு வேலையில்லை என்றில்லை. பரம ரசிகர்களுக்கும், பாமரர்களுக்கும் என அவரவர் ரசனைக்கு ஏற்ப அங்கு இடம் உண்டு.திருவையாறுக்கு ஒரு முறை சென்று வருவது ஓர் புதிய அனுபவம்தான்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு! மாவட்டவாரியாக விவரம்...

மேற்கு வங்க பேரவைத் தேர்தல் 2026! 78.77% வாக்குப்பதிவு- நேரலை

மேற்குவங்க பாஜக எம்எல்ஏ கார் மீது கற்கள் வீசித் தாக்குதல்!

4 வாக்குப்பதிவு இயந்திரங்கள் மாற்றம்! மீண்டும் கோளாறு - காங்கிரஸ் புகார்!
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


