

கோடைக்காலம் தொடங்கி விட்டால் வெளியூர்களுக்கு குடும்பத்துடன் ஒரு ஜாலி டூர் போய்விட்டு வந்தால்தான் மனம் திருப்திபடும். முன்பெல்லாம் ஊட்டி, கொடைக்கானல் போக வேண்டும் என்றால்கூட பெரிய திட்டம் போட வேண்டியது இருக்கும். ஆனால் இன்று உலகில் எந்தப் பகுதிக்கு சுற்றுலா போக வேண்டும் என்றாலும் அது எளிதான ஒன்றாக மாறிவிட்டது.
பண வசதி படைத்தவர்களுக்கு வெளிநாடு டூர் போய்விட்டு வந்தால்தான் மனம் திருப்திபடும். அவரவர் நிதி நிலைமைக்கு ஏற்ப வெளிநாடுகளைத் தேர்ந்தெடுத்து குடும்பத்துடன் உல்லாசப் பயணம் செல்வது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவிலிருந்து தாய்லாந்துக்கு உல்லாசப் பயணம் செல்வோர் எண்ணிக்கை அதிகம்.
ஐரோப்பாவின் "அந்தப்புரம்' என்பதால் அந்த ஆசையில் செல்வோரும் உண்டு. ஆனால், தலைநகரமான பாங்காக் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் குடும்பத்துடன் சென்று பார்க்க கூடிய ஏராளமான சுற்றுலா மையங்கள் உள்ளன. அவற்றைப் பற்றிய சிறு குறிப்புகள்:
கிராண்ட் பேலஸ்: நகரின் முக்கிய அடையாளச் சின்னம். 1782-இல் கட்டப்பட்டது. சுமார் 150 ஆண்டுகள் தாய் அரச குடும்பத்தினர் வாழ்ந்த இடம். கலை அழகு மிளிரும் இந்த அரண்மனை, தாய்லாந்து மக்களின் கட்டடக் கலைக்கு ஓர் உதாரணம். இப்போது அரண்மனையில் அரச குடும்பத்தினர் வசிக்கவில்லை. எனினும், அரசின் முக்கிய நிகழ்வுகள் அனைத்தும் இங்குதான் நடைபெறுகின்றன.
அரண்மனை வளாகத்தின் ஒரு பகுதியில், மரகதக் கல்லில் செய்யப்பட்ட சிறிய புத்தர் சிலை கொண்ட கோயில் உள்ளது. இது 14-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. கோயிலுக்கு பின்புறத்தில் "வாட் ஃபோ' புத்தர் கோயில் உள்ளது. இங்கு 46 மீட்டர் நீளமுள்ள புத்தர் சிலை படுத்த நிலையில் உள்ளது. பாதங்கள் மட்டும் 3 மீட்டர் நீளம். சிலை முழுவதும் தங்க முலாம் பூசப்பட்டுள்ளது.
"சாவோ பிரையா' நதி: பாங்காக்கின் மையப் பகுதியில் ஓடும் இந்த நதி, இரவு நேரத்தில் நகரை ஓர் உல்லாசபுரியாக மாற்றி விடுகிறது. மின் அலங்கார விளக்குகளுடன் படகுகளில் இசைக் கச்சேரியும், இரவு விருந்தும் களைகட்டுகிறது. பொருளாதார நிலைக்கு ஏற்ப படகுகளை தேர்வு செய்து ஆற்றில் பயணித்தவாறு உணவருந்தி மகிழலாம். ஆற்றின் கரையோரம் இருக்கும் வானுயர்ந்த கட்டடங்களின் அழகையும் கண்டு ரசிக்கலாம்.
"பையோக் ஸ்கை ரெஸ்டாரண்ட்': தாய்லாந்து நாட்டிலேயே மிக உயரமான 88 மாடி வானுயர்ந்த கட்டடம், பாங்காக்கில் உள்ளது. மொட்டை மாடியில் ஓர் ஏணியை வைத்தால் வானத்தை தொட்டு விடலாம் போல் இருக்கிறது. அதன் 76,78-வது மாடிகளில் சர்வதேச உணவு வகைகளுடன் கூடிய உணவகங்கள் உள்ளன. கடல் உணவு வகைகள் அதிகம். 77-வது மாடியில் இருந்து இரவில் நாலாபுரமும் பார்த்தால் பாங்காக் சொர்க்கபுரியாக தெரிகிறது. 84-வது மாடியில் உள்ள சுழலும் தளத்தில் நின்று பாங்காக்கின் ஒட்டுமொத்த இரவு நேர அழகையும் கண்டு ரசிக்கலாம்.
"மேயிக்லாங் ரயில்வே மார்க்கெட்': பாங்காக் நகருக்கு மேற்கே சுமார் 37 மைல் தொலைவில் உள்ள சமுத் சோங்ரம் நகரில் ஒரு வேடிக்கையான சந்தை உள்ளது. காய்கறிகள், பழ வகைகள், மீன், கருவாடு, ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி, பன்றி இறைச்சி என எல்லாம் உண்டு. சந்தைக்குள் நடந்து செல்லும்போது கீழே குனிந்து பார்த்தால்தான் நாம் ரயில்வே தண்டவாளத்தில் சென்று கொண்டிருப்பது தெரியும்.
ரயில் வரும் சத்தம் கேட்ட உடன் ஆமை தலையை ஓட்டுக்குள் இழுப்பது போல மடமடவென கடைகளைத் தண்டவாளத்திற்கு வெளியே இழுத்து வைத்துக் கொண்டு ரயில் செல்ல வழிவிடுகின்றனர். சந்தைக்கு நடுவே ரயில் செல்கிறது. ரயில் சென்ற பின்பு மீண்டும் கடைகள் ரயில் தண்டவாளத்திற்கு வந்து விடுகின்றன. வியாபாரம் ஜோராக நடைபெறுகிறது. எப்படி எல்லாம் யோசிக்கிறாங்கய்யா!
"மிதக்கும் சந்தை': பாங்காக்கில் இருந்து சுமார் 100 கி.மீ. தொலைவில் உள்ள "டேம்னோன் சதுக்' மிதக்கும் சந்தை புகழ் பெற்றது. இந்த சந்தைக்கு சாலை வழியாகவும் செல்லலாம். நீர்வழிப் போக்குவரத்தும் உண்டு. கால்வாய் வழியாக படகில் செல்வது இனிமையான அனுபவம். இங்கு பொருள்களைப் பேரம் பேசி வாங்கலாம். கட்டுப்படியாகாத விலைக்கு கேட்டால் கழுத்தை அறுப்பது போல சைகை காட்டி தர மறுத்து
விடுகின்றனர்.
"சபாரி வேல்டு அண்ட் மெரைன் பார்க்': பாங்காக்கில் இருந்து சுமார் ஒன்றரை மணி நேர பயண நேரத்தில் இந்த இடத்தை அடையலாம். சுமார் 480 ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்த மிருககாட்சி சாலையில் சிங்கம், புலி, கரடி, ஒட்டகச் சிவிங்கி, காண்டா மிருகம், மான்கள் என கூட்டம் கூட்டமாகத் திரிகின்றன. நமது ஊரில் ஒன்று, இரண்டு விலங்குகளை இரும்பு கூண்டில் அடைத்து வைத்து காட்டுவார்கள்.
அங்கே மிருகங்கள் சுதந்திரமாகத் திரிகின்றன. நாம் மூடப்பட்ட வாகனங்களின் உள்ளே அமர்ந்து 45 நிமிட நேரம் சுற்றி வந்து மிருகங்களைப் பார்த்து ரசிக்கலாம்.
சியாம் பார்க் சிட்டி: சுமார் 120 ஏக்கரில் அமைந்துள்ள நீர் விளையாட்டு மற்றும் தீம் பார்க் இது. இங்குள்ள அலை அடிக்கும் குளம் உலகிலேயே பெரியது என கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. மயிர்க்கூச்செரியும் அதிவேக சாகச விளையாட்டு உபகரணங்களும் இங்கு உண்டு.
இவை தவிர, பாங்காக்கில் சுமார் 15 ஆயிரம் கடைகள் கொண்ட "சதுக் சாக்' என்ற வார இறுதி நாள்கள் சந்தையும் உண்டு. மால்களுக்கு கணக்கே இல்லை. ஆனால் என்ன, பை நிறைய பணம் கொண்டு போனாலும் கை நிறையத்தான் பொருள் வாங்க
முடியும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.