

ஆப்பிள் பழத்தை அப்படியே கடித்து சுவைத்து சாப்பிடுபவரா நீங்கள்? அப்படியானால் அண்மைக் காலத்தில் அதன் சுவையில் ஏதோ ஒரு மாற்றம் இருப்பதை உணர்ந்திருப்பீர்களே..! ""நாம் வாங்கின பழம் சரியில்லை போல இருக்கிறது, கடைக்காரன் நம்மை ஏமாற்றி விட்டான்'' என உங்களை நீங்களே நொந்து கொண்டு பழத்தை வீணாக்காமல் சாப்பிட்டு முடித்திருப்பீர்கள், அப்படித்தானே?
உங்கள் சந்தேகம் சரிதான். நீங்கள் சாப்பிட்ட ஆப்பிள் பழத்தின் சுவை மாறித்தான் இருக்கிறது என்பதை அறிவியல்பூர்வமான ஆய்வுகள் நிரூபித்துள்ளன. அதற்கு காரணம். இந்த பாழாய்போன "உலக வெப்பமயமாதல்'தான் என்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
உலக வெப்பமயமாதல் காரணமாக அண்மைக் காலங்களில் பழங்கள், காய்கறிகள் மற்றும் உணவு தானியங்களின் சுவை மாறி வருகின்றன என்பது நம்மில் பலருக்குத் தெரியாமல் இருக்கலாம். ஆனால், கடந்த 30 முதல் 40 ஆண்டுகள் வரையிலான அறிவியல் ஆய்வு உள்ளது. இந்நிறுவனம் ஆவணங்களை உற்று நோக்கும்போது அது உறுதியாகிறது.
ஜப்பான் நாட்டில் தேசிய வேளாண் மற்றும் உணவு ஆராய்ச்சி நிறுவனம், அந்நாட்டில் உலகிலேயே அதிகம் விளையக் கூடிய ஃபியூஜி ரகம் மற்றும் இரண்டாவதாக அதிகம் விளையக் கூடிய சுகரு ரகம் ஆகிய இரண்டு ஆப்பிள் ரகங்களின் சுவைகளும் கடந்த 1970 முதல் 2010 வரையில் 40 ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து ஆய்வு செய்தபோது, இந்த உண்மை தெரிய வந்ததாக "சயிண்டிபிக் ரிப்போர்ட்ஸ்' இதழில் தகவல் வெளியாகி
உள்ளது.
பழங்களில் முக்கியமானதும், சிறப்பு வாய்ந்ததுமான ஆப்பிள், உலகில் மூன்றாவதாக அதிக அளவில் உற்பத்தி செய்யப்படும் பழ வகை ஆகும். ஆண்டுக்கு சுமார் 60 மில்லியன் டன் விளைவிக்கப்படும் ஆப்பிள், ஆண்டு முழுவதும் மக்களின் தேவையைப் பூர்த்தி செய்கிறது.
பிஞ்சு முதல் பழமாகும் பருவம் வரையில் 5 முதல் 10 நாள்களுக்கு ஒரு முறை ஒவ்வொரு ஆப்பிள் வகையிலும் 20 பழங்களை எடுத்து அவற்றின் மீது வெப்பநிலை, சூரிய கதிர் வீச்சு உள்ளிட்ட சுற்றுச்சூழல் காரணிகள் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. ஆப்பிள் மரமானது மொட்டு விட்டு, பூ பூக்கும் காலமாகிய மார்ச், மார்ச்-ஏப்ரல் மாதங்களில், உலக வெப்பமயமாதலால் சுற்றுப்புற வெப்பநிலை கணிசமான அளவில் உயர்ந்துள்ளது கண்டறியப்பட்டது. இந்த வெப்பநிலை மாற்றத்தால் ஆப்பிள் பழத்தில் உள்ள சுவையூட்டும் அமிலங்களின் அளவு, உள்ளக நீரின் அளவு குறைவதும் தெரிய
வந்தது.
ஆப்பிள் பழத்தில் உள்ள சுவையூட்டும் அமிலம் மற்றும் கரையும் திடப்பொருள்களின் அளவு மற்றும் தன்மையை பொருத்துதான் பழத்தின் புளிப்பு மற்றும் இனிப்பு சுவை உருவாகும். அதேபோல், பழத்தின் உள்ளக நீரின் அளவு மற்றும் உறுதித்தன்மையைப் பொருத்துதான் பழம் கடினமானதாகவோ, மிருதுவானதாகவோ அமையும். அப்படிப் பார்த்தால் ஆப்பிள் பழத்தில் சுவையூட்டும் அமிலமும், உள்ளக நீரின் அளவும் வெப்பத் தாக்கத்தால் குறையும்போது பழத்தின் சுவையும் மாறத்தானே செய்யும்? அதனால்தான் இப்போது நாம் சாப்பிடும் ஆப்பிள் பழத்தின் சுவை, முதலில் மாதிரி தித்திக்கவில்லை என்பது புரிகிறதா?
தினம் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் மருத்துவரிடம் செல்ல வேண்டாம் என்பார்கள். அது "ஆரோக்கியமான' ஆப்பிளாக இருந்தால்தானே நமக்கு ஆரோக்கியம் தரும்? உலகம் போகிற போக்கைப் பார்த்தால் வெப்பமயமாதலால் காலப்போக்கில் ஆப்பிள் பழம் கூட கசக்கும் போலிருக்கிறது!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.