/

வெற்றியடைந்த இளைஞரின் முயற்சி

அரசுத் தேர்வு எழுதுவதற்கான பயிற்சி மையங்களைப் பற்றிக் கேள்விப்பட்டு இருப்போம் ஆனால், பரோட்டா செய்வது எப்படி என்பதை கற்றுக் கொடுக்கும் பயிற்சி மையத்தை மதுரையில் தொடங்கியிருக்கிறார்கள்.

News image
Updated On :27 செப்டம்பர் 2020, 12:30 am

விஷ்ணு

அரசுத் தேர்வு எழுதுவதற்கான பயிற்சி மையங்களைப் பற்றிக் கேள்விப்பட்டு இருப்போம் ஆனால், பரோட்டா செய்வது எப்படி என்பதை கற்றுக் கொடுக்கும் பயிற்சி மையத்தை மதுரையில் தொடங்கியிருக்கிறார்கள். இதற்காக 10 நாள்கள் பயற்சி அளிக்கப்படுகிறது. மதுரையைச் சேர்ந்த முகமது காசிம் என்பவர் இந்த மையத்தை நடத்தி வருகிறார்.

""என் தாத்தா பல ஆண்டுகளுக்கு முன்பு சிக்கந்தர் சாவடியில் சிறிய ஓட்டலைத் தொடங்கினார். அந்தக் காலத்தில் பரோட்டாவுக்கு சாம்பார் தான் சைடு டிஷ். மக்கள் காரசாரமான உணவுகளை விரும்பத் தொடங்கியதில், அசைவ உணவுகளில் மசாலா மற்றும் சால்னா பிரத்யேக சைடு டிஷ்களாக மாறியது. சிறு வயதிலிருந்தே ஓட்டலுக்குள்ளே நான் வளர்ந்ததால், 8-ஆவது படிக்கும்போதே பரோட்டா மாஸ்டராகிவிட்டேன். 

பரோட்டா மாஸ்டருக்கு நல்ல சம்பளம் கிடைக்கிறது. ஆனால், நடைமுறையில் ஆள்பற்றாக்குறை தான் அதிகமுள்ளது. தினசரி பத்திரிகைளில்   பரோட்டா மாஸ்டர் தேவை என்ற விளம்பரத்தை பார்க்க முடிகிறது. எங்களுடைய ஓட்டலுக்கும் மாஸ்டர்கள் கிடைக்கவில்லை. தொழிலுக்கு அறிமுகமற்ற ஒருவரை அழைத்து வந்து, அவருக்கு எளிமையான முறைப்படி சொல்லி கொடுத்தால், அவர்களே ஓட்டல் ஆரம்பித்து விடுகிறார்கள். 

பரோட்டா செய்யக் கத்துக்கொள்பவர்களால், நிச்சயம் சுயதொழில் செய்து பிழைச்சுக்க முடியும்.  எனக்கு முழு நம்பிக்கையிருந்தது, நாலுபேருக்கு சொல்லிக் கொடுத்தா நல்ல சம்பளம் வாங்குவார்கள் என்ற எண்ணத்திலே கோச்சிங் சென்டரை ஆரம்பித்தேன். வெறும் 90 ரூபாய் செலவில் கோச்சிங் சென்டரை தொடங்கினேன். "தொழிற்கல்வி - பரோட்டா செய்ய கற்று கொடுக்கப்படும்'னு மதுரை முழுக்கவும்,  தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் விளம்பரம் செய்தேன். என்னுடைய விளம்பரத்தை பார்த்து ஒரே வாரத்தில் 25 பேர்  தொடர்பு கொண்டார்கள். 

10 பேரில் ஆரம்பமான பயிற்சி மையத்திலிருந்து இன்றுவரை 1000-க்கும் அதிகமானோர் பயிற்சி பெற்று வெளிநாடுகளிலும், வெளிமாநிலங்களிலும் பணிபுரிந்து வருகின்றனர்.

மாதத்திற்கு முப்பது பேர் புதிதாகப் பயிற்சி பெற வருகிறார்கள். இனி அடுத்தக் கட்டமாக, தமிழகம் முழுவதும் பரோட்டாவுடன் சேர்ந்து பல வகை சாப்பாடு ஐயிட்டங்களைத் தயார் செய்ய பயிற்சி அளிக்க இருக்கிறோம்'' என்கிறார் காசிம். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.