கலைச்சிறப்பில் சாமரம்!
மதுரை அழகர் கோயில் போன்ற கோயில்களின் திருவிழாக்களின்போது, பக்தர்களுக்கு நடுவே உயரமான விசிறியை வைத்துக் கொண்டு வீசுவதைப் பார்த்திருக்கலாம்.


மதுரை அழகர் கோயில் போன்ற கோயில்களின் திருவிழாக்களின்போது, பக்தர்களுக்கு நடுவே உயரமான விசிறியை வைத்துக் கொண்டு வீசுவதைப் பார்த்திருக்கலாம். இதேபோல், சென்னைக்கு அருகில் உள்ள பூவிருந்தவல்லி தலத்தில் பிறந்த திருக்கச்சிநம்பிகள் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாளுக்கு "ஆலவட்டம்' வீசும் கைங்கர்யத்தை செய்து வந்ததையும் அறிவோம்.
கோயில் வழிபாட்டில் "சோடசோபசாரம்' என்ற 16 வகையான வழிபாடுகளை ஆகமங்கள் கூறுகின்றன. அதில், ஒன்று சாமரமும் முக்கிய இடம் பெற்று விளங்குகிறது. சைவ சமய அடியார்களின் வரலாற்றான பெரியபுராணத்தை தொகுத்து எழுதிய சேக்கிழாரை இரண்டாம் குலோத்துங்க சோழனான அநபாய சோழன் தனது பட்டத்து யானை மீது ஏற்றித் தானும் அவர்பின் அமர்ந்து கவரி வீசினார். அந்நிகழ்ச்சி வேதாரண்யம் கோயிலில் ஓவியமாகத் திகழ்கிறது.
இத்தகைய சிறப்பு வாய்ந்த சாமரம் எட்டு மங்கலப் பொருள்களில் ஒன்று. அஷ்டமங்கலப் (எட்டு) பொருள்களாகப் பின்வரும் பொருள்கள் குறிக்கப்படுகின்றன. கண்ணாடி, பூர்ண கும்பம், ரிஷபம், இரட்டைச் சாமரம், ஸ்வஸ்திகம், சங்கு, தீபம், ஸ்ரீவத்சம் (திருமறு) என்பன சாமரம், சாமரை, கவரி என்றெல்லாம் அழைக்கப்படுகிறது. சாமரையைப் பற்றி சங்க இலக்கியங்களும் குறிப்பிடுகின்றன.
சங்க இலக்கியங்களில்...: மோசிகீரனார் என்ற புலவர் சேரமான் தகடூர் எறிந்த பெருஞ்சேரலிரும்பொறை என்ற அரசரைக் காண வந்தார். நடந்து வந்த களைப்பினால் அவர் அறியாமல் அரண்மனையில் இருந்த முரசுக் கட்டிலில் படுத்து உறங்கி விட்டார். அரசர் வந்தார். முரசுக் கட்டில் யாரோ படுத்திருப்பதைப் பார்த்து அவரைக் கொல்ல வாளை எடுத்தார். படுத்து இருப்பவர் புலவர் மோசிகீரனார் என்பதை அறிந்த மன்னர் வாளைக் கீழே போட்டுவிட்டு அவர் உறக்கம் கெடாமல் இருக்கச் சாமரையை வீசினார். தமிழுக்குப் பெருமை செய்த மன்னரை பற்றிப் புறநானூறு கூறுகிறது.
கலிங்கத்துப் பரணியில் சாமரையைப் பற்றிய ஒரு குறிப்பு வருகிறது. குலோத்துங்க சோழன் காஞ்சியில் செம்பொன் மாளிகையில் சித்திர மண்டபத்தில் இருந்த நிலையை வர்ணிக்கும் போது, வென்கொடை கவிழ்ந்திருந்தது. இருபுறமும் வெண் சாமரை வீசப்பட்டது. அருகில் அணுக்கப் பெண்கள் பலர் இருந்தனர். மேலும் அவனிடம் தோற்ற மன்னர்கள் தம் கரங்களால் வெண்சாமரம் வீசினர். மற்ற அரசர்களின் தேவிமார்கள் எல்லாம் சேடிப் பெண்களாய் நின்றனர் என்று தெரிவிக்கிறது.
சிற்பங்களில் - ஓவியங்களில்..: இத்தகையச் சிறப்பு வாய்ந்த சாமரம் கோயில்களில் உள்ள சிற்பங்களிலும் ஓவியங்களிலும் பல்வேறு வடிவில் காணப்படுகிறது. இன்றைய மின்சார விசிறிக்கு இதை முன்னோடியாகக் கொள்வதில் தவறில்லை.
சிற்பங்களில் இறைவன் தலைக்கு மேலே இருபுறமும் சாமரை இருக்கும். இதுபோன்ற அமைப்பைச் சோழர் காலச் சிற்பங்களில் அதிகமாகக் காணலாம். தஞ்சைப் பெரிய கோயிலில் திருமகள், கலைமகள் ஆகிய இரு சிற்பங்களின் அருகில் இருபுறமும் இரு பெண்கள் நின்றுக் கொண்டு சாமரம் வீசுவது போன்ற சிற்பங்கள் பலஉள்ளன.
10-ஆம் நூற்றாண்டைச் சார்ந்த சோழர் கலைக்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும்.
காஞ்சிபுரத்தில் கைலாசநாதர் கோயிலில் சக்தியின் சிற்பம் ஒன்று உள்ளது. அன்னையின் அருகில் தாமரை வீசும் பெண்கள் இருக்க, ஆனந்த மோன நிலையில் இருக்கும் அன்னையாக அவள் காட்சி தருகிறாள்.
சாமர தாரணிகள்: இவ்வாறு சாமரை வீசும் பெண்கள் சாமர தாரணிகள் என்று அழைக்கப்பட்டனர். சமண தீர்த்தங்கரர் சிற்பங்களிலும் இருபுறமும் சாமர தாரணிகள் உருவம் காணப்படுகின்றன.
கல்வெட்டுகளில்..: தஞ்சை மாவட்டத்தைச் சார்ந்த திருச்சோற்றத்துறைக் கோயிலில் இறைவனுக்குத் தங்கப்பிடிப் போட்டச் சாமரமொன்று தானமாக அளிக்கப்பட்டதாக அந்தக் கோயில் கல்வெட்டு கூறுகிறது.
செம்பியன் மாதேவியால் திருநறையூர் கோயிலுக்குத் தங்கப்பிடி போட்ட சாமரம் ஒன்று தானமாக அளிக்கப்பட்டது.
மூத்த கிழானடிகள் என்பவள் வெள்ளி, தங்கம் முலாம் பூசப்பட்ட சாமரையை வேதாரண்யம் கோயிலுக்குத் தானம் அளித்ததாகக் கல்வெட்டுக் கூறுகிறது. அதன் எடையும் குறிக்கப்பட்டிருக்கிறது.
காடு பட்டிகள் மகள் மூத்த கிழானடிகள் இட்ட வெண்சாமரையால் பொன் எண் கழஞ்சரை சில சாமரைகளில் எழுத்துப் பொறிக்கப்பட்டிருந்தன. திருவடிகள் ஐயனடி என்பவன் தஞ்சை மாவட்டத்தைச் சார்ந்த கோயில் தேவராயன்பேட்டைக்கு கோயிலுக்குத் தானமாக அளித்தான். அதில் எழுத்துகள் பொறிக்கப்பட்டிருந்தன.
கவரிப்பிணாக்கள்: காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த சிவபுரம் கோயிலில் முதலாம் ராஜாதிராஜன் ஒவ்வொரு ஞாயிறு அன்று இறைவன் மீது உலா வரும் பொழுது வெவ்வேறு செலவுகளுக்காக நெல் தானமாக அளித்தார். அவ்வாறு வீதி உலா வரும் பொழுது, 12 பேர் சாமரை வீசுவதற்காக நியமிக்கப்பட்டிருந்தனர். அவர்கள் "கவரிப்பிணாக்கள்' என்று கல்வெட்டுகளில் குறிப்பிடப்படுகின்றனர்.
திருச்சிக்கருகில் குமாரவயலூரில் திருப்பதிகம் பாடுவதற்கும், கவரிப்பிணாக்கள் (சாமரம்) வீசுவதற்கும் பெண்கள் நியமிக்கப்பட்டதாக அந்தக் கோயிலில் உள்ள பராந்தகசோழன் 41-ஆம் ஆண்டு கல்வெட்டுக் கூறுகிறது.
திருநெல்வேலி மாவட்டம் வாசுதேவநல்லூர் பாண்டிய மன்னன் குலசேகரனார், குழல்வாய்மொழி நங்கை என்ற பெண்ணுக்கும் மற்றும் இரு பெண்களுக்கும் நடனம் ஆடுவதற்கும் கவரி வீசுவதற்கும் தானம் அளிக்கப்பட்டுள்ளது.
சாமரம் வீசிக்கொள்ள உரிமைகள்: ஒப்பரும் வீரர்களுக்கு, அரசர்கள் உயர் அந்தஸ்தும், பிற சலுகைகளும் கொடுப்பது வழக்கம். முதலாம் ஆதித்த சோழனுக்கு விக்கி அண்ணன் என்னும் வீரன் பேருதவி புரிந்தார். அவருக்கு "செம்பியன் தமிழ் வேள்' என்ற பட்டத்தையும் கொடுத்தார். அதனுடன் சிறந்த ஆசனமும், சாமரை வீசிக்கொள்ளும் உரிமையும், பல்லக்கும் முரசம், மாளிகையும் சிறந்த உணவும், காளமும் யானைகளும் கொடுத்தான் என்று ஒரு கல்வெட்டு கூறுகிறது.
சாமரம் வீசி கொள்ளுதல், பல்லக்கில் செல்லுதல் முதலியவை அரசினால் கொடுக்கப்படும் உரிமைகள் என்பதையும் கல்வெட்டுகளால்அறிகிறோம்.
சிற்பங்களைவிட ஓவியங்களில் சாமரை அதிக அளவில் காணப்படுகிறது. பிற்கால ஓவியங்களில், விசிறியுடன், சாமரையும் வீசப்பட்டு வந்ததை அறியலாம். சாமரம் ஒரு சாதாரணப் பொருளாக இருந்தாலும் கலை, தொல்லியல் நோக்கில் அதைக் காணும்பொழுது அதன் வடிவமைப்பில் ஏற்பட்ட மாறுதல்களைக் கண்டு மகிழலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...